Sunday, March 18, 2012

ஜெனீவாவும் இந்தியாவும்


இலங்கை விவகாரங்கள் தொடர்பில் இந்தியாவின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழக மக்களினதோ அல்லது அரசியல் கட்சிகளினதோ உணர்வுகள் செல்வாக்கைச் செலுத்தியதாக வரலாறு இல்லை. இலங்கைத் தமிழ் மக்களின் அவலங்கள் தீரவேண்டுமென்பதற்காக இடையறாது குரல் கொடுத்து எண்ணற்ற போராட்ட இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கும் தமிழகத்தின் அரசியல் சக்திகளையோ, மக்களையோ அவமதிக்கும் வகையிலான ஒரு கருத்தாக இதை எது விதத்திலும் அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் வன்னியில் மக்கள் அனுபவித்த அவலங்கள் பற்றிய செய்திகளை அறிந்து வேதனையில் தமிழகத்தில் 18 பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த மக்களும் அரசியல் சக்திகளும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக வெளிக்காட்டி வரும் ஒருமைப்பாட்டு உணர்வை நாம் சிரந்தாழ்த்தி மதிக்கிறோம். ஆனால், வெறுமனே உணர்ச்சிப் பரபரப்புகளினால் மீண்டும் அள்ளுண்டு போகாமல் யதார்த்தபூர்வமான அரசியல் நிலைவரங்களைக் கருத்திற் கொண்டே இலங்கை தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் தமிழகத்தின் உணர்வுகள் செல்வாக்கைச் செலுத்துவதில்லை என்ற இதுகாலவரையான வரலாற்று உண்மை மறுதலையாக்கப்படக் கூடிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கிறதென்று நம்ப முடியுமா? இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கோரும் தீர்மானமொன்றை அமெரிக்காவும் பிரான்ஸும் நோர்வேயும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருக்கின்றன. பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான கடந்த வாரம் 27 ஆம் திகதியில் இருந்து இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் இராஜதந்திரச் சூறாவளிப் பிரசாரங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இலங்கை அதன் கடந்த ஆறு தசாப்த கால நவீன வரலாற்றில் தற்போது மேற்கொண்டிருப்பதைப் போன்ற இராஜதந்திரச் செயன்முறைகளை சர்வதேச அரங்கில் முன்னொருபோதுமே முன்னெடுத்திருக்கவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு 3 வருடங்கள் கடந்த நிலையில் இத்தகையதொரு இராஜதந்திரச் சவாலுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா அதன் 100 க்கும் அதிகமான இராஜதந்திரிகளைக் களமிறக்கவேண்டிய அளவுக்கு நிலைவரம் ஜெனீவாவில் உக்கிரமடைந்திருக்கிறது
.
இந்நிலையில் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசியல் சக்திகள் நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் பிரதான திராவிட இயக்கக் கட்சிகளும் கூட மத்திய அரசாங்கத்திற்கு நெருக்குதல்களைக் கொடுப்பதில் இன்று ஓரணியில் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மாநில முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியும் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கிற்கு கடிதங்களை எழுதியிருந்தார்கள். பிரதமரின் பதிலில் அவர்கள் இருவருமே திருப்தி அடையவில்லை. ஜெனீவா தீர்மானத்துடன் தொடர்புடைய விவகாரங்களை விளக்கிக் கூறுவதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சென்னைக்கு அனுப்பி வைக்க புதுடில்லி தயாராக இருந்த போதிலும் அவரைச் சந்திப்பதற்கு ஜெயலலிதா மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின. கடந்த வாரம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்பதை மத்திய அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்து செய்த அமளி துமளியில் சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டது. 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எந்தவொரு நாட்டையும் பிரத்தியேகமாகப் பெயர் குறிப்பிட்டு மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் கொள்கை அடிப்படையிலான தீர்மானமாக இருந்து வருகிறதென்று மத்திய அரசாங்கம் முதலில் அறிவித்த போதிலும் கூட, தமிழகத்தில் தோன்றியிருக்கும் கொந்தளிப்பான உணர்வுச் சூழ்நிலையைத் தணிக்கும் நோக்குடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரே அறிக்கையைக் கடந்த வாரம் வாசித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையுடனான உறவுகளையும் தமிழகத்தின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்து அதன் அடிப்படையில் இந்தியா முடிவொன்று எடுக்கும் என்பதே கிருஷ்ணாவின் அறிக்கையின் சாராம்சமாகும். இந்நிலையில் பிரதான ஊடகங்கள் குறிப்பாக, தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் செல்வாக்கு மிக்கவையாக விளங்கும் ஆங்கில நாளேடுகள் இலங்கை விவகாரங்களில் இதுவரை கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய "அமைதியான இராஜதந்திர அணுகுமுறைகளை' இந்தியா இனிமேலும் கடைப்பிடிப்பது பொருத்தமானதல்ல என்றே ஆசிரியத் தலையங்கங்கள் மூலமாக வலியுறுத்திவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இணக்கத்தீர்வொன்றைக் காணவேண்டுமென்ற இந்தியாவின் இடையறாத வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்து வந்திருப்பதையே அந்தப் பத்திரிகைகள் மத்திய அரசாங்கத்திற்கான தங்களது வேண்டுகோளுக்கு பிரதான காரணமாக முன்வைத்திருக்கின்றன. போரின் முடிவுக்குப் பிறகு 3 வருடங்கள் கடந்தும் கூட தமிழர்களை நோக்கி நல்லிணக்கத்திற்கான உருப்படியான அரசியல் சமிக்ஞை எதையும் இலங்கை அரசாங்கம் காட்டவில்லை என்பதையும் அந்தப் பத்திரிகைகள் சகலதுமே சுட்டிக்காட்டவும் தவறவில்லை. 

ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அக்கறை காட்டவில்லை என்றும் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இலங்கை அரசாங்கம் நெருக்கமான உறவுகளைக் கட்டிவளர்த்து இந்தியாவுக்கு தொடர்ச்சியாக எரிச்சலூட்டி வந்த போதிலும் கூட புதுடில்லி இலங்கையுடன் நட்பு பாராட்டும் அதன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லையென்று அரசியல் அவதானியும் பத்திரிகையாளரும் முன்னாள் இராஜதந்திரியுமான குல்திப் நாயர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இத்தகைய கருத்தை இந்திய புத்திஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக முக்கியஸ்தர்கள் வட்டாரங்களின் கணிசமான பிரிவினரின் பொதுவான அபிப்பிராயமாகக் கருதமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் புதுடில்லி எதுவிதத்திலும் தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்று இலங்கை அரசாங்கத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கொள்கை அடிப்படையிலானதென்று பிரகடனம் செய்யப்பட்ட நிலைப்பாட்டை இந்தியா மாற்றுமென்று எதிர்ப்பார்ப்பதற்கில்லை அத்தகை நிலைப்பாட்டை எடுத்ததற்கு இந்தியாவை பொறுத்தவரை உள்காரணிகளும் பெருமளவிற்கு இருக்கின்றன என்பது வேறு விடயம். ஆனால், இலங்கையை ஜெனீவாவில் ஆதரிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதா என்பதே இந்தியாவில் இருக்கக்கூடிய தெரிவுகள் என்று பரவலாக நம்பப்படுகிறது. எது எவ்வாறிருப்பினும் தமிழகத்தின் உணர்வுகள் புதுடில்லியின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துவதில்லை என்ற உண்மையை மறுதலையாக்கக் கூடிய முறையில் இந்தியா செயற்படுமேயானால் அது அரசியல் அதிசயங்களில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை! 

நன்றி - தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment