Tuesday, March 27, 2012

இந்தியா தவறாக உரிமை கோருகின்றதா? இலங்கை தரப்பு கருத்தை டில்லி நிராகரிப்பு


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடைமுறை விதிகளுக்கு அமைய இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தை தயார்ப்படுத்துவதில் இந்தியாவே பொறுப்பாக விளங்கியது.உறுப்பு நாடொன்றுக்கு ஐ.நா. உதவியையும் வழங்கும் போது சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கப்பாட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த நடைமுறை விதியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள அதனை தயார்ப்படுத்தியதற்கான பொறுப்பை இந்தியாவே கொண்டிருந்தது.
"இந்த ஏற்பாட்டை அமெரிக்கர்கள் மீறியிருந்தனர் அல்லது சில சமயம் வேண்டுமென்றே அதனைப் புறக்கணித்திருக்கக்கூடும். இந்த வெற்றிடம் தொடர்பாக நாங்கள் அவர்களின் கவனத்திற்குக்கொண்டு வந்தோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடைமுறை விதிகளுக்கு அமைவாக தீர்மானத்தை தயார்படுத்துமாறு அமெரிக்கர்களை நாங்கள் கேட்டிருந்தோம் என்று இந்திய உயரதிகாரி ஒருவர் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார். நடைமுறை விதிகளுக்கு முரண்பாடாக இந்தத் தீர்மானம் இருந்திருந்தால் அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இலங்கைக்கு அளப்பரிய சேவையைத் தான் வழங்கியிருப்பதாக இந்தியா தவறாக உரிமை கோருகின்றது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டிருந்தது. மனித உரிமைகள் விடயத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா. எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு முன்னர் இலங்கையின் சம்மதத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை அமெரிக்காவை இணங்கிக்கொள்ள வைக்கும் விடயத்தில் டில்லி பாரிய சேவையை வழங்கியிருந்தது என்று உரிமை கோருவது தவறானதென அந்த ஆங்கில வார ஏட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோதே மேற்கண்டவாறு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
 
எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட உறுப்பு நாடொன்றின் இணக்கப்பாடும் அங்கீகாரமும் தேவையென்பது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடைமுறை விதியாக இருக்கின்றது என்று இலங்கை அதிகாரிகள் கூறுவதாக அந்தப் பத்திரிகை மேற்கோள் காட்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் மார்ச் 7 இல் வரையப்பட்ட அமெரிக்காவின் தீர்மான நகல் வரைபானது இலங்கை மனித உரிமைகளை அமுல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் அலுவலகம் வழங்க வேண்டுமெனவும் அதனை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமுல்படுத்தியிருக்க முடியாதெனவும் ஏனெனில் அதனை அமுல்படுத்துவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சொந்த நடைமுறை விதிகளை மீறுவதாக அமையுமென்றும் இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இதேவேளை இந்தியா மீது நீண்ட காலத்திற்கு இலங்கை தங்கியிருக்க முடியாதெனவும் அந்த ஆங்கில வார ஏட்டின் அரசியல் பத்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஏனென்றால் எந்தவொரு தருணத்திலும் சீர் குலைக்கக்கூடிய தீங்கான சக்தியாக இந்தியா இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாதுகாப்புக்கான பரிமாற்ற விடயத்தில் சீனாவிற்கு இடமளிக்க வேண்டுமென்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். 

இதுஇவ்வாறிருக்க இலங்கையின் முதுகில் குத்தியதன் மூலம் இலங்கையர்களின் ஒன்றுபட்ட வெறுப்பை இந்தியா சம்பாதித்திருக்கின்றது என்று லக்பிம நியூஸ் வாரப் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. மேலும் தெற்காசியாவில் இந்தியாவின் தலைமைத்துவம் சவாலுக்கு உள்ளாகியிருப்பதாக  சிங்களப் பத்திரிகையான ரிவிரவுக்கு  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். ஏனென்றால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் உறுப்பினர்களாக உள்ள ஏனைய தெற்காசிய நாடுகள் இந்தியாவிலிருந்தும் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment