Friday, December 30, 2011

“என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது மேற்குலகம்” – சிறிலங்கா அதிபர்


மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 


இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் இது. கேள்வி - சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மேற்கு நாடுகளை எப்படி அணுகப் போகிறீர்கள்? பதில் - மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், சிறிலங்காவுக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் சிறிலங்கா தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்று மௌனம் காக்கின்றன. சிறிலங்காவில் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர். மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர். இந்தியாவிலும் அதையே செய்தனர். அவர்கள் தான் இப்போது மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் தயாராக இல்லை. கேள்வி- நீங்கள் சீனாவை நோக்கிச் சாய்வதாக ஒரு உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலையை அது காயப்படுத்தக் கூடும் அல்லவா? என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தான் முதலாவது. மற்றெல்லோரும் இந்தியாவுக்குப் பின்னர் தான் வரமுடியும். 
நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அதன் ஆதரவைப் பெற்றேன். அதற்குப் பிறகு, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்கி உதவியது அமெரிக்கா தான். அதன் மூலம் அவற்றைக் கடலில் வைத்து அழிப்பது சாத்தியமானது. அதுபோல சீனாவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவுக்கு நாம் வழங்கிய ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம். ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்தும் விளம்பரப்படுத்தினோம். சீனா மட்டுமே வந்தது. கேள்வி - போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்? 

பதில் - அந்தத் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமையின் அடிப்படையில் நடைபெற்றன. கணிசமானளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் விழுந்துள்ளன. வடக்கு,கிழக்கிற்கு வெளியே தான் 54 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரு நிலையான அரசியல் தீர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அது பரந்துபட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறப்பாக போருக்குப் பிந்திய சூழலில் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கேள்வி - அதிகாரப்பகிர்வை எப்படி முன்வைக்கப் போகிறீர்கள்? பதில் - அதிகாரப்பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாணசபைகளை நிறுவியுள்ளோம். வடக்கிலும் கூட அதனை அமைக்கவுள்ளோம். மாகாண நிர்வாகத்தை எப்படி வலுப்படுத்துவது, மேம்படுத்துவது என்றும் பெரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாட வேண்டும். கேள்வி - நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே? பதில் - சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை. துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. உங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார். இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை. நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை. இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர். சிறிலங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன. கேள்வி - மோதல்கள் இடம்பெற்ற சூழலில் கூட வடக்கில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேரதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இப்போது அங்கு ஏன் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை? பதில் - கூடிய விரைவில் அங்கு நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பங்கேற்க உண்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மோதல் சூழலில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். கேள்வி - வடக்கு இன்னமும் கூட அதிகளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர்கள் முறையிடுகிறார்கள். 3 இலட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இலட்சம் படையினர் நிலைகொண்டுள்ளனர். சனசமூக நிலைய கூட்டத்துக்கோ அல்லது பாடசாலை நிகழ்வுக்கோ கூட சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி தேவைப்படுகிறது. குடியியல் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை எப்போது நீக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்? பதில் - வடக்கில் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சனத்தொகைக்கேற்ப அங்கு படையினர் நிலைநிறுத்தப்படவில்லை. ஆனால் அந்தப் பிராந்த்தின் பாதுகாப்புக்கு அவர்கள் தேவைப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அந்தப் பகுதி மூன்று பத்தாண்டுகளாக மோசசமான ஆயுதமோதல்கள் இடம்பெற்ற பிரதேசம். அங்கு சிறிலங்கா இராணுவம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. கேள்வி- இராணுவ முகாம்களை அமைப்பதற்காகவோ அல்லது சிங்கள வர்த்தகர்களுக்காகவோ தமது நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே? பதில் - இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கிளப்பி விடப்பட்டுள்ள புரளி. நாடெங்கும் ஆயுதப்படையினர் உள்ள்ளர், அவர்களின் அவர்களின் முகாம்கள் உள்ளன. சிறிலங்காவின் பிராந்திய எல்லைகளையும், இறைமையையும் பாதுகாக்க இது அவசியமானது. விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலத்தை கொடுக்க வேண்டும். வடக்கில் தமிழர்கள் வகித்து வரும் பெரும்பான்மையை சிறிலங்கா அரசின் எந்தவொரு செயற்பாடும் மாற்றியமைக்காது.

பொறிக்குள் சிக்கப் போவது யார்?

2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன.  இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது   நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது.
அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன.  இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் மோதுகின்ற களமாகவே பேச்சு மேசை அமைந்துள்ளது. எந்தவொரு பேச்சுக்களையும் இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

முதலாவது வகை, பேச்சுக்களின் மூலம் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்ற குறியோடு- வெறியோடு நடத்தப்படுவது. இதன் அச்சாணியே நெகிழ்வுத்தன்மையும் விட்டுக்கொடுப்பும் தான்.
இரண்டாவது வகை,  இணக்கப்பாட்டை எட்டக் கூடாது என்ற இலக்குடன்- பொழுதுபோக்கிற்காகவோ கால இழுத்தடிப்புக்காகவோ நடத்தப்படுவது. விட்டுக்கொடாத தன்மையும் வரட்டுப் பிடிவாதமும் தான் இதன் அச்சாணி.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்படும் பேச்சுக்கள் இதில் எந்த வகையைச் சார்ந்திருக்கிறது என்று யாரும் கூற வேண்டியதில்லை.
போர் முடிவுக்கு வந்த போது அரசியல்தீர்வில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறை இப்போது அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. காலம் போகப்போக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீருவின் மீதுள்ள நாட்டம் குறைந்து போவது போன்ற தோற்றமே தென்படுகிறது.
முன்னதாக அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அரசாங்கம் கொடுத்த பல வாக்குறுதிகள் இப்போது அதற்கு நினைவில் கூட இல்லாது போய்விட்டது.
கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை இல்லை என்று மறுக்கின்ற அளவுக்குப் போயிருக்கிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு விடயம் தெளிவாகி விட்டது. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படப் போவதில்லை என்பதே அது.
அரசியல்தீர்வு தொடர்பான எந்தத் தீர்மானத்தையும் தெரிவுக்குழு ஊடாகவே எடுப்பது தான் அரசாங்கத்தின் திட்டம். அப்படிச் செய்தால் தன்மீது எந்தப் பழியும் வந்துவிடாது என்று நினைக்கிறது அரசாங்கம்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டிய பின்னர் தான் தெரிவுக்குழுவுக்கு வருவோம் என்கிறது. ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் கூட தெரிவுக்குழுவை எதிர்க்கின்றன.
எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி தெரிவுக்குழுவை அமைக்க முடியாது. அதேவேளை. தெரிவுக்குழுவை காரணம் காட்டி இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை இழுத்தடிக்க முடியாது. அதுவரை கூட்டமைப்புடன் பேசியாக வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்தக் கட்டத்தில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் மற்றொரு கட்டையைப் போட்டு இறுக்க முனைந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாது, காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதே அரசாங்கம் போட்டுள்ள அந்த முட்டுக்கட்டை.
வடக்கு, கிழக்கு இணைப்பும் காணி, பொலிஸ் அதிகாரங்களின் பரவலாக்கமும் அரசியல்தீர்வுக்கு அவசியமானவை என்று தமிழர் தரப்பினால் உறுதியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கட்டத்தில் தான் அரசாங்கம் இவை மூன்றும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்று கூறிவிட்டது.
வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என்கிறது அரசாங்கம். ஆனால் அரசாங்கம் நினைத்தால் இதனைச் செய்யலாம்.
ஏற்கனவே தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை உயர்நீதிமன்றம் தான் பிரித்தது. இந்தத் தீர்ப்பை அளித்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா, வடக்கு கிழக்கு மாகாணங்களை அரசாங்கத்தினால் மீளவும் இணைக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் அரசாங்கமோ அதற்குத் தயாராக இல்லை.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு மட்டும் அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது என்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்டளவு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவற்கு அரசு இணங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார். அரசாங்க ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாகவும் பிரசுரமானது.
அப்போது மட்டுப்படுத்தப்பட்டளவு  பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயார் என்று கூறிய அரசாங்கம் இப்போது எதையும் வழங்க முடியாது என்கிறது.
இந்தியாவைப் போன்று மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் தனது சொந்தக் கிராமத்துக்கே தன்னால் செல்ல முடியாது போய் விடும் என்கிறார் ஜனாதிபதி.
உத்தரப் பிரதேசத்துக்கு ராகுல்காந்தி சென்ற போது அவரைக் கைது செய்ய மாயாவதி முயன்றாராம்.  சோனியா காந்தி குஜராத்துக்குச் செல்வதற்கு அந்த மாநில அரசு தடை விதித்ததாம்.
இப்படி சில உதாரணங்களைத் தேடிப் பிடித்து வைத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரம் தன்னைக் கைது செய்வதற்கே பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருக்கிறது போலுள்ளது. இதனை அவர் டெக்கன் குரோனிக்கல் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரம் எந்தளவுக்கு வலுவானது அதன் சட்டவரையறை எதுவரை இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டவர்களால் தான் இந்தக் கதைகளின் உண்மைய உணர முடியும்.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கும் போது,  நிறைவேற்று அதிகார பலத்துடன் இருக்கின்ற ஜனாதிபதிக்கு இப்படியொரு அச்சம் வந்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், அவ்வாறான பொலிஸ் அதிகாரம் தன்னைக் கூட  கைது செய்யும் அளவுக்கு ஆபத்தானது என்ற கருத்தை ஜனாதிபதி விதைக்க முனைகிறார் என்பது தெளிவாகியுள்ளது. இதன்மூலம்  விதண்டாவாதம் தான் வலுப்பெறுகிறது.
காணி அதிகாரங்களைப் பகிர்வது குறித்து அரசு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மத்திய மற்றும் மாகாண அரசுகள் அங்கம் வகிக்கும் ஆணைக்குழு ஒன்றின் மூலம் காணி அதிகாரங்களைப் பகிர்வதே அந்த யோசனை. ஆனால் இப்போது அதுவும் கிடையாது என்கிறது அரசாங்கம்.
வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரப்பகிர்வு இந்த மூன்றுமே நடைமுறைச் சாத்தியமற்றவை என்று அறிவித்து விட்டது அரசாங்கம்.
இவை எல்லாவற்றையும் நீக்கி விட்டுப் பார்த்தால் அரசாங்கம் எத்தகைய தீர்வை- அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
சமஸ்டி இல்லை, மாகாணங்களுக்கும் முக்கிய அதிகாரங்கள் எதுவும் இல்லை. இந்தநிலையில், அரசியல்தீர்வு என்று பேசுவதற்கு- அதிகாரப்பகிர்வு என்று பேசுவதற்கு என்ன தான் இருக்கிறது? இப்போதுள்ள மாகாணசபை தான் எஞ்சப் போகிறது.  அதற்காக பேச்சு நடத்தி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் யோசிக்கலாம்.
முன்னதாக, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும்,  அதற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப் போவதாகவும் அரசாங்கம் கூறியது.
அவ்வாறு 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு, காணி, பொலிஸ் அதிகாரங்கள் அல்லாத ஒன்றாக இருக்க முடியாது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல்தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்று கருதுவதாகத் தெரியவில்லை. அதிகாரப்பகிர்வு தேவையற்றதென்று உணர்வதாகவே தோன்றுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது பேச்சுக்களில் இருந்து கழற்றி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைத்தது. அதன்படி போட்ட கணக்குகள் எல்லாமே தப்பாகி விட்டன.
பேச்சுக்களில் இருந்து விலகி தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு வெளியே போனால், பழி அவர்கள் மீதே விழும். அரச தரப்பின் இழுத்தடிப்பினால் வெறுத்துப் போய், ஒரு கட்டத்தில் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்ட தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு, பின்னர் நிலைமையைப் புரிந்து கொண்டு பேசத் தொடங்கியது.
பலசுற்றுப் பேச்சுக்கள் நடந்து விட்டன. இதன்போதெல்லாம் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் இல்லை என்றே அரசாங்கம் சொன்னது.
ஆனாலும் அவர்கள் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக இல்லை. இது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. 
இதன்மூலம் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் இழுத்துச் செல்ல முனைகிறது அரசாங்கம். ஆனால் கூட்டமைப்பைப் பொறிக்குள் கொண்டு போவதாக எண்ணி அரசாங்கம் தானே பொறி ஒன்றுக்குள் நுழைவதாகவே தோன்றுகிறது.
போர் முடிந்து 30 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் அரசியல்தீர்வு ஒன்றுக்கான எந்த உருப்படியான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
அரசியல்தீர்வு இழுபறிப்படுவதை உலக நாடுகள் ஒருபோதும் ஏற்கத் தயாரில்லை. இலங்கை அரசுக்குச் சார்பாக நிற்கின்ற இந்தியா கூட இந்த விடயத்தில் ஒத்துப் போகவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதியான அதிகாரப்பகிர்வு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றுக்குச் செல்லுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு அதைவிட இறுக்கமானது. கனடாவோ உருப்படியான நல்லிணக்க முயற்சிகள் எதையும் இலங்கை அரசு செய்யவில்லை என்று ஏற்கனவே பலமுறை சினந்து விட்டது.
அரசியல்தீர்வு விடயத்தில் இழுதடிப்புச் செய்யப்படுவதை சர்வதேச சமூகம் விரும்பாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறை கூறிக் கொண்டு அரசியல்தீர்வை இழுத்தடிக்கும் அரசாங்கத்தின்ன் உத்தி, தனக்குத்தானே வெட்டும் குழியாகவே அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டது போன்று தமிழ் பேசும் மக்களுக்கு  நியாயமான அதிகாரப்பகிர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை அரசினால் காற்றில் பறக்கவிட முடியாது.
அத்தகைய முயற்சி ஒன்றில் அரசாங்கம் ஈடுபடுமேயானால்  அது ஆபத்தான பாதையில் மேற்கொள்ளப்படும் பயணமாகவே அமையும்.

நன்றி - கே. சஞ்சயன் தமிழ்மிரர்

Tuesday, December 27, 2011

ஆயருக்கான சம்பந்தனின் கடிதம் கூறுவதென்ன?


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்   தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் மன்னார் ஆயருக்கு எழுதிய பதில் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவேன் என்று கூறியிருந்ததன் சார்பாக சில கருத்துக்கள் வெளிவருவதை தவிர்க்க முடியாது.
இக்கடிதத்தை வேதாகமத்தின் பத்துக் கட்டளைகளுடன் சேர்ந்த பதினோராவது கட்டளையாக நினைப்பதும், இஸ்லாத்தில் நபிமணி அவர்களிடம் கேட்டுக்கொண்ட ‘குதபியா’ உடன்படிக்கை போன்று இரா.சம்பந்தன் நினைத்துக்கொள்ள முற்படுவதும் தெரிகிறது.
இரா.சம்பந்தன் பரிவாரங்கள் ஆயர் குழுவின் கடித்தத்தால் பாதிக்கப்பட்டதும், அவர்களது மனநிலையும் புரிகிறது.
* ‘ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவேன்’ என்று சம்பந்தன் கூறுவது ஒரு மிரட்டல்.
* ஆயரின் கடிதம் சார்பாக அண்மையில் வெளிவந்த ஊடகங்களின் கருத்துப்படி(பாசெல் தமிழ். கொம் இணைய தளத்தில் 18.மார்கழி. 2011 வெளிவந்த) ‘தேசியப் பட்டியல் பா.உ. சுமந்திரன் அவர்களை பா.உ. பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஆயர் குழுவினரில் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்பதற்கெதிராக  சம்பந்தனின் இக்கடிதம் மக்களை திசை திருப்ப முயல்கிறது.
காலம் காலமாக சம்பந்தன் குழுவினர் விதண்டாவாதங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வந்த காலம் மலையேறிவிட்டது. மக்கள் சார்பாக புத்திஜீவிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்களுக்கு ஆயரின் கடிதத்தின் மூலம் உண்மைகள் புலப்பட்டுவிடும் என்ற அச்சம் கூட்டமைப்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தனின் கடிதத்திலிருந்து இன்னுமொரு விடயம் புரிதலுக்கு வருகிறது.
* ‘தமிழர் தேசியம் சார்பாக அரசாங்கத்தோடு பேசுவது யாவும் தமிழ்மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை’ என சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது மறைத்து வைத்திருந்த தனது பெரும் அராஜகப்போக்கை ஊடகங்களின் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது அம்பலத்திற்கு வருகிறது. தமிழ்த்தேசியத்தை நோக்காகக் கொண்டு தம்மை அர்ப்பணித்திருந்த கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சுயநலத்திற்காக சதிசெய்து வெளியேற்றியதென்ற கருத்து உண்மையாகிறது.
மேலும், தமிழர் வரலாற்றிலே தவறுகள் இழைக்கப்பட்டதும், திருத்தப்பட்டதும் வரலாறு. தவறுகளை உச்சப்படுத்தி எப்படி செயற்படுத்த வேண்டிய நல்ல காரியங்களை தவிர்க்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது இக்கடிதத்தின் மூலம் புலனாகிறது. அதாவது, ‘ஆயர் மட்டும் கையொப்பமிட்டு ஏனையோர் கையொப்பமிடாமை’ பற்றி பெரிதாக்கி ஆயர் எதோ பெரும் தவறு ஈட்டியதுபோல் குற்றம் கண்டு திசை மாற்ற நினைப்பது விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. என்ன சாராம்சம் சொல்லப்பட்டதுதான் முக்கியமே தவிர வேறொன்றும் தேவைப்படாது. இதை சம்பந்தன் தனக்கு சாதகமாக்கி உண்மையிலிருந்து நழுவிவிடப் பார்ப்பது புரியமுடியாத ஒன்றல்ல.
மேற்படி கடிதத்தகவல்களின்படி பல உண்மைத்தகவல்கள் வெளிப்படுகின்றது. மக்களை அராஜகத்தினூடாக கட்டிப்போட்டு வைக்கவேண்டுமென்ற ஒரு ஜனநாயக முறைமையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  சம்பந்தன் குழுவினர் மேற்கொள்ளுகின்றனர். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை இரகசியத் தன்மை பேணப்படவேண்டும் என்பதற்கான தேவை இருந்தது. காரணம் போரியல் சூழலுக்குள் அமைந்திருக்கும் ஒரு அமைப்பு இரகசியத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகம் சார்ந்த அமைப்பு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக மக்களுக்கு வெளிப்படைத்தன்மையின்றி மறைக்கப்படுவது எந்த நிலையிலும் பொருத்தமாகாது. அதில் ‘கள்ளம்’ இருப்பதாகவே ஊகிக்க முடிகிறது.
இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாக  பேசப்படும் அனைத்து விடயங்களும் ஒரு சொல்லுப் பிசகின்றி அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தப்படல் வேண்டும். சிங்கள மக்களும் தமிழ்த்தேசியம் சார்பான நியாயப்பாடுகளை உணரும் சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசியத்திற்கான உரம் மேலும் அதிகரிக்கும். வெறுமனே ‘இரகசியம்’ என்ற போர்வைக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  சம்பந்தன் குழுவினர் சுத்துமாத்துக்களைச் செய்து, தமிழ்மக்களின் உணர்வுகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு அரசியல் கதிரையில் நிரந்தரமாக அமர நினைப்பது இனியும் வெற்றிபெறாது. இறுதி அறிவித்தல்களிலும் கூட(மரண அறிவித்தல்) ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்று இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டு செயற்படுவதை நிறுத்திவிட்டு தமிழ்த்தேசியத்தை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து அதில் வெற்றிகண்டால் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக மக்களின் மனங்களில் பதிந்திருக்க வாய்ப்புண்டு.
மக்கள் உண்மையை நோக்கி விழித்தெழாத பட்சத்தில் இந்த ‘சுத்து மாத்துக் காரர்கள்’ ஆட்சியே கோலோச்சும். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் கூட்டமைப்பு மாற்றப்படலாகாது. அதன் பா.உ. உறுப்பினர்கள் மாற்றப்படல் வேண்டும். ஆரம்பக் கட்டமாக சுமந்திரன் உட்பட …..  என்ற பட்டியல் நீள வேண்டும். மக்கள் நாம் சுயமாக சிந்திக்கத் தொடங்கும் வரையில்?
மலையூர் பண்ணாகத்தான்

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இரசாயனத்தாக்குதலில் தப்பிய ஒரேயொரு பொதுமகன்


சிவரூபன் எனப்படும் இவர் வன்னியில் வசித்துவந்தார்.  2009 ம் ஆண்டு வைகாசிமாதம் 15 ம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இரசாயனத்தாக்குதலில் தப்பிய ஒரேயொரு பொதுமகன் ஆவார். 
இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டமையும் குற்றுயிராகக் கிடந்த மக்களை இராணுவத்தினர் படுகொலை செய்தமையையும் உலக நாடுகள் அறிந்த விடையமே. குற்றுயிராக இருந்த இவரை மக்கள் காப்பாத்தி சிறிலங்காவில் மருத்துவம் செய்து வந்தனர். தற்போது இவர் உயிரோடு இருக்கும் விடையத்தினை அறிந்த ஸ்ரீலங்கா புலனாய்வு இவரை கொலை செய்ய முற்சி செய்கின்றது ஏனனில் இவரையும் அழித்து விட்டால் உலக நாடுகள் ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்தாவை பன்னாட்டு நிதிமன்றத்தில் நிப்பாட்ட முடியாது எனும் காரணத்தினால் இவரை கொலை செய்ய முயல்கின்றது ஸ்ரீலங்கா புலனாய்வு.
இது சம்பந்தமான ஆதாரங்கள் சனல் 4 மற்றும் ஏராளமான இணையங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டமை யாவரும் அறிந்த விடையமே. தற்போது மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் ஸ்ரீலங்கா மீதான போர் குற்றங்களை விசாரிப்பதினால் இவரை மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தி போர் ஆதாரங்கள் வெளியுலகத்திற்குக் கிடைத்து விடும் என்பதனாலேயே இவ்வாறன இன அழிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவர் ஒரு கல்லுரி மாணவர்.  இவரின் பெற்றோர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே இருக்கின்றது. இவ்வாறான இன அழிப்புகளை உலக நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்று நாமும் ஊடகம் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கின்றோம்

நன்றி மனிதன்

போராடுவதைத் தவிர வேறு வழியில்லை...


வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி 

இலங்கையின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. 

துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள்.


ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

அண்மையிலே பல்கலைக்கழக மாணவத் தலைவன் தவபாலன் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து கொண்டு வந்தவர்களால் சாகக்கூடிய அளவு தாக்கப்பட்டிருக்கின்றார். நல்லவேளை உயிர் தப்பி விட்டார். சில நாட்களுக்கு முன்னர் அதாவது 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் சித்த ஆயுள்வேத மருத்துவ பீட மாணவன் ஒருவனைக் காணவில்லை. இப்படி பலர் அங்கே காணாமல் போகின்றார்கள். இதற்கு யார் காரணம்? 27ஆம் திகதி நவம்பர் மாதம் வந்தவுடன் உங்களுடைய படையினர் என்ன செய்கிறார்கள். எங்கெல்லாம் சந்தேகம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் சென்று அங்கிருக்கின்றவர்களை எச்சரிக்கின்றார்கள். அவர்களைக் கைது செய்யப் பார்க்கின்றார்கள். விசாரிக்கின்றார்கள். தாய்மார் மற்றும் இரத்த உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்காகவோ அல்லது அவர்களை காணவில்லை என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு நடந்தது என்ன என்று தெரியாமலோ ஒரு நாளிலாவது கண்ணீர் விடக்கூடாதா? இதைக்கூட நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 

இந்த நாட்டிலே அரசியல் பண்பாடு என்னவாக இருக்கின்றது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கின்றீர்கள். ஆனால் ஜனநாயக ரீதியாக எங்களுடைய மக்களின் தீர்ப்பை ஏற்று இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நீங்கள் ஆயத்தமாக இல்லை. அதேநேரம் இந்த நாட்டின் ஜனாதிபதி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபொழுது அவருக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகின. அது உண்மையா? இல்லையா? அது தப்பா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதனை நினைவூட்ட விரும்புகிறேன். 

உங்களுடைய வரவுசெலவுத்திட்டத்திலே இராணுவப் படை வீரர்கள் மூன்றாவது குழந்தையைப் பெற்றால் ஓர் இலட்சம் ரூபா தரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். இப்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்கு நீங்கள் அப்படி தர வேண்டாம். ஆனால் மடிந்துபோன எங்களுடைய குலத்தவர், இனத்தவர்கள் மீது நஷ்டஈடு வழங்குங்கள். அவ்வாறு நஷ்டஈடு வழங்குவதாக நீங்கள் அறிவித்தீர்களா? எங்களின் இழந்த சொத்துகள் மீது நஷ்டம் கொடுக்க அறிவித்தீர்களா? வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக நீங்கள் கூறமுடியுமா? இங்கு முற்றுமுழுதாக இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் ஓர் அடக்குமுறைக்குள் அதாவது ஜனநாயகக் குரல் மீண்டும் அங்கு எழுந்துவிடக்கூடாது என்ற அளவில் அங்கே ஓர் இராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஓர் இராணுவத் தளபதி அங்குள்ள அரச ஊழியர்களை அழைத்துப் பேசியபோது இந்த நிலம் விடுதலைப் புலிகளிடமிருந்து எங்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த நிலத்தில் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் சொல்கின்றபடி இந்த நிலத்தைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அரசாங்க ஊழியர்களாக இருக்க வேண்டாம் என்று கட்டளையிட்டாரா? இல்லையா? என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் இதனை ஆதாரத்துடன் தான் பேசுகின்றேன். ஓர் இராணுவத் தளபதி அங்கு ஓர் அரசாங்க அதிபருக்கு எழுதுகின்றார். 

உதாரணமாகக் குறிப்பிடுகின்றேன். 1 778 ஏக்கர் காணியை நீங்கள் எங்களுடைய தேவைக்காகக் கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். இந்த இராணுவத்தினருக்கு யார் காணி அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று காணி அமைச்சுப் பொறுப்பு யாருடைய கையிலே இருக்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சருக்கு 1 333 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உங்களுடைய இராணுவச் செலவு இன்றைய மொத்த வருமானத்திலே 20 வீதத்தைத் தாண்டுகின்றது. அதாவது 22, 994 கோடி. யுத்தம் முடிந்ததற்குப் பிறகும் சென்ற ஆண்டைவிட அதிகமான பணத்தை நீங்கள் இராணுவத்துக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக வடக்கு, கிழக்கைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டிலே நாங்கள் ஒன்றாக வாழ வேண்டும். தமிழர்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று நீங்கள் சிந்தித்தால் ஆகக் குறைந்தது எங்களுடைய செத்துப் போன மக்கள் சார்பாகவாவது நீங்கள் நஷ்டஈட்டைக் கொடுக்க வேண்டாமா? அழிந்துபோன சொத்துகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் நிதியை ஒதுக்க வேண்டாமா? உங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால் நாங்கள் உங்களிடமிருந்தாவது உதவியைப் பெறலாம் என்று குணரத்னவிடம் நேரடியாகச் சொன்னேன். ஆனால் மீள்குடியேற்றத்துக்கென மொத்த வருமானத்திலே 0.06 வீதம் அங்கே ஒதுக்கப்பட்டிருந்தது. 

கடன் வாங்கி எங்கள் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அபிவிருத்தி என்பது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அல்ல தமிழ் மக்களினது உரிமைகளை வழங்குவதன் அடிப்படையில் தான் அந்த அபிவிருத்திகள் பயன்பாட்டுக்குள் வரவேண்டும். நாங்கள் அரசியல் தீர்வொன்று இல்லாமல் எங்கள் மண்ணில் வாழவும் ஆளவும் எங்களுக்கு இருக்கின்ற உரிமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் செய்கின்ற அபிவிருத்தி எங்களை அடிமைப்படுத்துவதாக இருந்தால் நாங்கள் அதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். அது அல்ல ஒரு ஜனநாயக தத்துவம். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் புறக்கணித்துவிட்டு நீங்கள் அபிவிருத்தி வேலை என்று செய்தா? எங்களுடைய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டீர்கள். முதலாளிகளுக்கும் தனியாருக்கும் பெரும்பான்மையினத்தைச் செர்ந்தவர்களுக்கும் எங்கள் நிலங்களை விரும்பியவாறு எங்களிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் அவைகள் விற்கப்படுகின்றன. கையளிக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன. 

அதைவிட நாங்கள் இங்கே பலமுறை இது சம்பந்தமாக பேசியிருக்கின்றோம். 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தினுடைய இடைக்காலத் தீர்ப்பொன்று கிடைத்ததற்குப் பிறகும் வலி காமம் வடக்கில் இராணுவம் நமது அரைவாசிப் பிரதேசத்தையும் மீள்குடியேற்றப்படாத இலட்சக்கணக்கான மக்களில் அரைவாசிப் பேரையும் மீளக் குடியேற்றுவதற்கு ஆயத்தமாகவில்லை. அந்த நிலங்களைக் கைப்பற்றி இராணுவ முகாம்களையும் இராணுவக் குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் நினைக் கின்ற திட்டம் அதுதான். இதைத்தான் அபிவிருத்தி யென்றுநாங்கள் நினைக்கின்றோம். அடுத்ததாக வலிகாமம் வடக்கை அடுத்துள்ள மாதகல் பிரதேசம். அங்கே திருவடிநிலை தொடக்கம் மாதகலுடைய முனையிலிருந்து காங்கேசன் துறை வரைக்கும் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக் கின்றன. எங்களில் எவருக்கும் தெரியாமல் அபிவிருத்தி என்ற பேரிலே அங்கே இயந்திரக் காற்றாடிகள் பூட்டப்படுவதற்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மலேசிய நிறுவனம் ஒன்றுடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றீர்கள். அதுவும் சீனர்களின் நிறுவனம் என்று நாங்கள் அறிகின்றோம். அது உண்மையோ இல்லையோ அந்த ஒப்பந்தத்தை நீங்கள் சொல்ல வேண்டும். வலிவடக்கிலே ஒ / 152 என்ற கிராம சேவையாளர் பிரிவு மக்கள் அந்த நிலங்களில் மீளக் குடியேற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும் இராணுவத்தின ராலும் கடற்படையினராலும் வெளியற்றப்பட்டிருக் கின்றனர். எங்களுடைய தலைவர் சம்பந்தன் சென்ற 24 ஆம் திகதி இந்த அவையிலே பேசுகின்ற போது சம்பூர் மக்களை மீளக்குடியேற்ற வேண்டுமென்று கேள்வியெழுப்பினார். பஸில் ராஜபக்ஷ இந்த விடயத்திலே அபிவிருத்திக்காக எடுக்க வேண்டிய நிலத்தைத் தவிர ஏனைய நிலங்களில் அந்த மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிப்போம் என்று ஒரு வார்த்தையைக் கூறியிருந்தார். அந்த மக்களுக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது. நீங்கள் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும். எங்கள் மீது அந்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வார்த்தைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். 


அதேபோல வலிவடக்கிலே இருக்கின்ற நிலங்கள் மீண்டும் எங்களுக்குத் தரப்படவேண்டும். இராணுவம் அந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக சொல்கிறோம். இராணுவத்தின் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கோபமும் கிடையாது. அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அரசுதான் அந்த நிலங்களை எடுத்து தமிழ் மக்களுக்கு உரித்தான அந்த நிலங்களை அவர்களிடத்தில் கொடுக்கவேண்டும். அந்த நிலத்திலே அவர்களுக்கு வாழவும் ஆளவுமான அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும். இறுதி யுத்தத்தின் பொழுது முல்லைத் தீவிலிருந்து ஏராளமான தங்கங்களும் பணமும் எடுத்துச் செல்லப்பட்டன என்ற தகவல்களைக் கேள்விப்பட்டோம். இன்று உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கே.பி. இருக்கிறார். அவரிடம் கப்பல்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்கின்றீர்கள். எனவே நீங்கள் எமது மக்களைத் தொடர்ந்தும் அநாதரவான நிலைக்குத் தள்ளாமல் அவர்கள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை நீங்கள் எங்களுக்காகச் செலவிடுவதற்கு ஆயத்தமில்லாவிட்டாலும் ஆகக் குறைந்தது நீங்கள் அங்கிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் வரவு செலவுகள் எவ்வளவென்பதை எமக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அதிலிருந்து எவ்வளவு தொகையை எமது மக்களுக்கு கொடுக்கப் போகின்றீர்கள். கே.பியிடம் உள்ள பணம் எவ்வளவு? நீங்கள் போர் முனையிலிருந்து எடுத்துச் சென்ற தங்கங்களினதும் பணங்களினதும் பெறுமதி எவ்வளவு? அந்தத் தொகையிலிருந்தாவது எமது மக்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம். எங்களுக்கு தேர்தலிலும் சரி எங்களுடைய கட்சியிலும் சரி எங்களுக்கு உதவியும் கிடையாது. பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயருகின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகின்ற போது எமது நாட்டிலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்ற மக்களில் சிலர் அந்தப் பிச்சைப்பாத்திரத்திலே சில காசைப் போடுகின்றனர். நீங்கள் அதைப்பற்றிக்கூட பேசுகின்றீர்கள். சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரைகூட உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டீருக்கின்றது நீங்கள் எவ்வளவு பண்டங்களை மக்களுக்குக் கொடுத்துப் பார்த்தீர்கள்? இந்த நாட்டிலே ஜனநாயகம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். இராணுவம் என்ன செய்கிறது? இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமது வேட்பாளர்கள் யாராக இருக்க வேண்டுமென அடையாளம் காண்கின்றனர். மறுக்க முடியுமா? சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினர் 22 ஆம் திகதி இரவு வடமாகாணத்தில் வன்னியில் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்கள். உங்களுடைய ஜனாதிபதியும்கூட அங்கு சென்று முகாமிட்டிருந்தார்கள். இராணுவத்தினர் அவ்வாறு கேட்கவில்லை என உங்களால் மறுக்க முடியுமா? வீடு வீடாகச் சென்று அரசுக்குச் சார்ப்பாக வாக்களிக்கும் படி கேட்கவில்லை என உங்கயளால் மறுக்க முடியுமா? அப்படியிருந்தும் அங்குள்ள மக்கள் ஒரு கொள்கைக்காக இலட்சியத்துக்காக எங்களுடைய வீடுகளில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். வீடுகள் இல்லாவிட்டாலும் நாங்கள் எமது காணிகளில் குடிசையை அமைத்துக்கொண்டாவது வாழவேண்டும். எமது பிரதேசங்களில் வாழ்கின்ற உரி மையை எங்களுக்கு வழங்குங்கள். எமக் குரிய நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளியெறி எங்களை அந்நிலங்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என அம்மக்கள் விரும்புகிறார்கள். எமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து இராணுவத்தினர் வெளி யேற வேண்டுமென நான் விரும்பகின்றேன். 24 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் எனது சொந்த மண்ணிலிருந்து இராணுவத்தினர் வெளியெறவேண்டும் என நான் விரும்புகிறேன். இதுநாள் வரையில் நான் சுதந்திரமாக எனது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு இன்னும் இடமளிக்கவில்லை. அதேபோன்று லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய நிலத்தில் ஆள்கின்ற உரிமையை நீங்கள் அங்கீகரிக்கும் வரை நாங்கள் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி வைக்க வேண்டாம். இப்போழுது நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக உலகுக்குச் சொல்வதைத் தவிர்த்து எங்களுடைய கோரிக்கைகளை ஜனநாயகத் தீர்ப்புகளை ஏற்று இந்த நாட்டிலே ஒரு சிறந்த அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்கின்றோம். நீங்கள் தொடர்ந்தும் எமது நிலங்களை அபகரிக்கக் கூடாது. இல்லாவிட்டால் நாங்கள் எமது மக்களுடன் இணைந்து தந்தை செல்வா எமக்குக் காட்டிய அஹிம்சை வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

Monday, December 26, 2011

பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் புதிய வழிகளின் அவசியமும்

எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும்   தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம்,ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில் நீளும் பாஞ்சாலியின் துகிலென நீண்டு செல்கின்றன. பாஞ்சாலியின் துகிலை முடிவிலியாய் நீள வைக்க பார்த்திபன் இருந்தான். ஆனால் ஈழத்தமிழரின் நிலையில் துகில் ஒரு முடிவுப் பொருள். இனியும் நீள அத்துகிலுக்கு இடமிருக்காது எனத் தெரிகிறது.


பிறக்கப்போகும் பன்னிரண்டாம் ஆண்டு ஈழத்தமிழரின் அரசியலில் ஓர் ஆக்க காலம். இதில் விதைக்கப்படுபவைதான் பின்பு அறுவடைக்கு உரியவையாகும். 2002- ம் ஆண்டு ஈழத் தமிழரின் அரசியலில் ஓர் ஆக்க காலம் தோன்றியிருந்தது. ஆனால் அது கனியாக முன்பே கருகிவிட்டது.பத்து ஆண்டுகளின் பின்பு மீண்டும் ஓர் ஆக்க காலம் வருகிறது. இந்த ஆக்க காலத்தைத் தவறவிட்டால் வளம் பொருந்திய, தொன்மை மிக்க,செழிப்பான ஈழத் தமிழ்த் தேசிய இனத்தைப் பூமியில் அழியவிடக்காரணமானோம் என்ற வரலாற்றுப் பழிச்சொல்லுக்கு நாம் அனைவரும் ஆளாக நேரும். நடந்தவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நடக்க வேண்டியவற்றை திட்டமிட வேண்டிய தவிர்க்கமுடியா அவசரமும்,அவசியமும் எம்முன் எழுந்துள்ளன.தலைவர்களே, அறிஞர்களே, எழுத்தாளர்களே, படைப்பாளிகளே,               ஊடகவியலாளர்களே, மாணவர்களே, மக்களே பேதங்களை மறந்து மறுக்கப்பட முடியாத தமிழ்த் தேசிய உரிமையைக் காக்க, நாம் அனைவரும் ஒன்றுதிரள வேண்டிய வரலாற்றுக் கட்டம் எம்முன் விரிந்து கிடக்கிறது. இந்தக் கட்டம் தவறவிடப்பட்டால் வரலாற்றில் மீண்டும் ஒரு கட்டம் வர இடமிருக்காது.

மூன்றாம் உலகப் போரில் எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென அணு விஞ்ஞானி ஐன்ஸ்ரினிடம் கேள்வி கேட்கப்பட்ட போது 'மூன்றாம் உலகயுத்தத்தில் எத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலக மகா யுத்தத்தின் போது கல்லாயுதங்கள்தான் பயன்படுத்தப்படும் என்பதை என்னால் துணிந்து கூறமுடியும்.' என்று பதிலளித்தார்.அதாவது பன்னிரண்டாம் ஆண்டுக்குரிய வாய்ப்புக்களை பயன்படுத்தத்தவறினால் பின்பு ஈழத் தமிழினம் என்ற ஒரு தேசிய இனம் என்ற சொல்லே   இந்த பூமியிலிருக்க முடியாத நிலைதான் மிஞ்சும். ஆதாவது மூன்றாம் உலக யுத்தத்தின் பின்பு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எதுவுமே மிஞ்சாது, கற்கள்தான் மிஞ்சும் என்பது போல 2012-ஆம் ஆண்டை சிங்கள இனவாதத்தின் கையில் தஞ்சமடைய விடுவோமானால் தமிழர்கள் தஞ்சமடைய ஒருசாண் நிலமும் இருக்காது. புதைகுழிகளைக் கிளறி எறியும் சிங்கள இனவாதம் தமிழரின் நினைவைக் கூறவல்ல ஒரு கல்லைக்கூட விட்டுவைக்காது என்பதில் சந்தேகமில்லை.


2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை மூலம் எதிரி பெரும் இராணுவ வெற்றியை ஈட்டினார். ஆயினும் இன அழிப்பிற்கான அரசியல் யுத்தத்தில் இன்னும் எதிரி முழு வெற்றியை ஈட்டவில்லை.2012-ஆம் ஆண்டுதான் இந்த அரசியல் யுத்த களத்தின் இறுதிக்காலம்.இதில் வெற்றி ஈட்டுபவருக்கு நிரந்தர வெற்றியும், தோல்வி உறுபவருக்கு நிரந்தரத் தோல்வியுமென வெற்றி தோல்வி தெளிவான இரு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆதலால் அதிகம் புத்திபூர்வமாகவும்,நிதானமாகவும், திட்டமிட்டும் வெற்றியை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.எமது பக்கத்தில் யார் தோல்வி அடைந்தாலும், அது சந்ததிக்குரிய தோல்வியாய், தலைமுறை தலைமுறைகளுக்குரிய தோல்வியாய், தமிழன் என்று சொல்லப்படும் ஒவ்வொருவருக்கும் உரிய தோல்வியாய், அதுவும் மீளமுடியாத தோல்வியாய் அமைந்துவிடும். ஆதலால் ஒவ்வொரு தமிழனும் ஐக்கியப்பட்டுத் தமிழ்த் தேசியத்தைத் தற்காத்து முன்னேற வேண்டிய தவிர்க்க முடியாத வரலாற்று நிர்ப்பந்தக் காலகட்டமாய் இது உள்ளது.சிங்கள இனத்தவரின் பாரம்பரிய வரலாற்று எதிரி இந்தியாவாகும்.
சிங்கள இனத்தவர்கள் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பிற்கு அஞ்சுகிறார்கள். அவர்களின் பார்வையில் தமிழரை இந்தியாவின் நீட்சியாகவே பார்க்கிறார்கள். எனவே இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் புரிகிறார்கள்.ஆதலால் இந்தியாவுடன் தொடர்புறும் நிரந்தரமான புவிசார் அமைவிட சூழலில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனத்தவரின் இன எதிர்ப்புவாதமும் நிரந்தரமானது. எனவே தமிழர்களின் நியாயமான உரிமைகளை சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. மிருகங்களைக் கொல்வது பாவமேயாயினும், தமிழரைக் கொல்வது பாவமில்லை என்ற மகாவம்ச கருத்துருவம் சிங்களவர்கள் மத்தியில் தெளிவாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது. ஆதலாற்தான் எவ்விதமான தயக்கமும்,கூச்சமும் வெட்கமும் இன்றித் தமிழர்களை குழந்தைகள், கற்பிணித்தாய்மார், பெண்கள், வயோதிபர், நோயுற்றோர் என எவ்வித பேதமும் இன்றி இலட்சக் கணக்கில் அழித்தொழிக்க முடிந்ததுடன் அனைத்துவகை தர்மங்களுக்கும் முரணாகத் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யவும் முடிந்துள்ளது. இத்தகைய மனோபாவம் உள்ளவர்களிடம் இருந்து நியாயங்களையோ, அல்லது நீதியான தீர்வுகளையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. எனவே சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைக்கும் எந்தொரு பேச்சுவார்த்தைக்கும் அற்ப ஆயுளும், அகாலமரணங்களுமே இயல்பானது.அத்துடன் மேலதிகமாக சிங்கள ஆளும் குழாத்தினர் தம்மிடையேயான அரசியல் ஆதிக்கப் போட்டியின் நிமித்தம் தமிழினத்திற்கு எதிராக வக்கிரமான இனவாதத்தையே ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவர்.எனவே சிங்கள ஆட்சியாளர்களால் தமிழரின் உரிமைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை.இவ்வகையிற்தான் பேச்சுவார்த்தைகளை நாம் நோக்க வேண்டும்.பேச்சுவார்த்தைகள் பொறுத்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது ஒரு தெளிவான இலக்கிருக்கும்.அதாவது தம் பதவியைத்தக்கவைப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், பேச்சுவார்த்தைகளை ஓர் ஊடகமாக அவர்கள் கையில் எடுப்பதுண்டு. தமது பதவிக்கான உள்நாட்டு, வெளிநாட்டு இடையூறுகள் தணியும் போது பேச்சுவார்த்தைகளை அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி கைவிட்டுவிடுவர். இறுதியில் தமிழ்த் தலைவர்கள் இலவுகாத்த கிளிகளாய் வெட்கித்துப் போவதுண்டு.தற்போது பேச்சுவார்த்தை தொடர்பாக அரசின் பித்தாலாட்டம் தெளிவாகத் தெரியவந்துள்ள நிலையில் பல்வேறு தமிழ்த் தலைவர்களும் ஒத்தகருத்துக்களை வெளியிட்டுவருவது மகிழ்ச்சிக்குரியது.


திரு இரா.சம்பந்தன், திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு.வி.ஆனந்தசங்கரி போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தமிழ்த் தலைவர்களும், ஏறக்குறைய ஒரேமாதிரியான கருத்துக்களை முன்வைக்கும் நிலை தோன்றியுள்ளமை ஒரு நற்சகுனமாகும்.   கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிகழ்ந்துவரும் பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் தம்மைத் தற்காத்து பின்பு முன்னேறிய கதைகளே தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது.பேச்சுவார்த்தைகளில் சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பது உண்மை. ஆனால் இங்குள்ள ஒரு கேள்வி என்னவெனில் அந்த உண்மையைத் தெரிந்துகொண்ட பின்பும்,பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபடுவதன் மூலம் அடையக் கூடிய தந்திரோபாய ரீதியான அரசியல் அனுகூலங்கள் ஏதாவது உண்டோ என்பதுதான்.பேச்சுவார்த்தைகளின் மூலம் சர்வதேச அரங்கிலும், மக்கள் முன்னிலையிலும் எதிரியை தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்   உண்டாயின் அதில் ஓர் அனுகூலம் இருக்கவே செய்யும். ஆனால் துரதிஷ்டவசமாக எதிரியைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக நாம் தனிமைப்படும் ஒரு துயரமான நடைமுறை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஒரு பேச்சுவார்த்தையின் போது அடையக் கூடிய ராஜதந்திர இலக்குகள் என்ன என்பதை அப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் முன்கூட்டியே தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவிடயத்தில் நாம் போதியளவு வீட்டுப் பாடங்களை(Home Works) செய்து கொள்ளும் பாரம்பரியம் இல்லாதவர்களாக இருக்கிறோம். அதேவேளை இத்தகைய Home Works சிங்களத்தரப்பில் எப்போதும் செய்யப்படுவதுண்டு.

இப்போது தமிழ்த் தலைவர்களிடம் காணப்படும் ஒத்தகருத்துப் போக்கை நாம் முதன்மைப் படுத்துவது நல்லதும் அவசியமானதுமாகும். 1986-ம்ஆண்டு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்த ஓர்    அரசியல் கருத்தரங்கின் போது பேசிய ஒருவர் பின்வருமாறு கூறினார்.'எங்களுக்கிடையே நாம் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடையத் தயாராகிறோம் என்பதே அர்த்தம்'.இக்கூற்று என்றும் கவனத்தில் கொள்ளத் தக்கது.'விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை' என்ற தமிழ்ப் பழமொழியைத்   தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தம்மிடையே பொதுநோக்கின் அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாராக வேண்டும்.'எதைமாற்ற முடியுமோ அதன் மீது செயற்படு, எதைமாற்ற முடியாதோ அதைப்  புரிந்து வழிநட' என்ற தத்துவாத்த வாக்கியம் இனமேலாதிக்க வாதம் பொறுத்து எமக்கு முக்கியமானது. சிங்கள இனமேலாதிக்க வாதத்தை ஒருபோதும் மாற்றமுடியாது. இந்த அடிப்படையில் நாம் எமக்குள் ஐக்கியப்பட்டு செயற்பட்டாக வேண்டும். அரவணைத்துப் போகும் அரசியல் தலைமைத்துவத்திற்கு நாம் தகுதியாக வேண்டும். எமக்கிடையே வெட்டி அரசியல் நடாத்தி நாம் அனைவருமே வீழ்ந்துள்ளோம். இப்போது ஒருவருடன் ஒருவர் ஒட்டி அரசியல் நடாத்தும் ஒரு புதிய அரசியல்  கலாச்சாரத்திற்கு நாம் தயாராக வேண்டும்.   முன்னுதாரணம் மிக்க தலைவர்களும், முன்னுதாரணம் மிக்க அறிஞர்களும் எமக்கு மிக அவசியமானது. அனைவரையும் அரவணைக்க வல்ல தலைவர்களும்,ஆக்கபூர்வமாக கருத்தை முன்வைக்கும் அறிஞர்களும், அவற்றிற்கான கலாச்சாரமும் எம்மத்தியில் வளரவேண்டும்.  
    
பேச்சுவார்த்தைகள் தோல்வி என்றால் அடுத்தது என்ன என்ற வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது. எப்போதும், எச்செயலைச்செய்யும் போதும், எதிலும், அடுத்தது என்ன? (What is next?) என்ற திறவுகோல் வார்த்தை அரசியல் தலைவர்களிடம் இருக்கவேண்டும்.இத்திறவு கோல் இன்றி வாழ்வில் எதுவும் இருக்க முடியாது என்கின்றபோது அரசியலில் இத்தகைய திறவுகோல் இல்லாதிருப்பது ஆக்கத்திற்கன்றி அழிவிற்கே கொண்டுபோய் விடும் .தற்போது பேச்சுவார்த்தைகள் தோல்வி என்ற நிலையில் நேரடிப் போராட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைமைகளும் தயாராக வேண்டும். அது அகம், புலம், தமிழகம், சர்வதேச அரங்கமென ஒருங்கிணைந்து விரியவேண்டும். இதில் எதுவும்     தனிமைப்படுத்தப்பட்டு விடக்கூடாது.எம்மை நாம் சற்று நிதானமாக காய்தல் ஒறுத்தல் இன்றி பரிசீலிப்போம். மன்னிக்கவும், 'முப்பது ஆண்டுகளாய் நாம் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்து விட்டோம்' என்று எழுமாத்திரத்தில் கூறிவருகிறோம். உண்மையில் நாம் முப்பது ஆண்டுகளாய் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்பதில் ஒருவகைப் பொய் இருக்கிறது. தகவல்களை நேர்மையாகத் தொகுத்துப் பரிசீலிப்போம்.சுதந்திரத்தின் பின்பு தமிழ் மக்களின் உரிமைக்காக நேரடிப்போராட்டத்தில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் தந்தை    செல்வாதான். 1956ம் ஆண்டு தனிச்சிங்கள மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து    காலிமுகத்திடலில் சில மணித்தியாலம் வரையிலான சப்பாணி அமர்வுப்போராட்டத்தை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி     நடாத்தியது. இதுவே முதலாவது முக்கிய நேரடிப் போராட்ட  உதாரணமாகும். ஆனால் சில மணித்தியாலங்களுக்குள் இப்போராட்டத்தை அரசு காடையர்களை ஏவி, பொலிசார் முன்னிலையில் கலைத்து விட்டது.பொலிசார் முன்னிலையில் கலைக்கப்பட்டது என்பதை விடவும்,    பொலிசாரின் அனுசரணையுடன் பலாத்காரப் பிரயோகத்தின் மூலம் கலைக்கப்பட்டது என்பதே சரியானதாகும். இத்துடன் போராட்டம் தொடரவில்லை. ஆனால் இவ்வாறு போராட்டத்திற்கு தடை ஏற்படும் போது போராட்டத்தை காந்தி கைவிடுவதோ, இடைநிறுத்துவதோ இல்லை. மாறாக அது இன்னொரு வகையில் முன்னெடுக்கப்படும்.

இந்த 1956-ம் ஆண்டு சம்பவத்தின் பின்பு நிகழ்ந்த முக்கிய போராட்டமாக 1961-ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தையே குறிப்பிடலாம். இச்சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழ் மண் எங்கும் தொடர்ச்சியாக   இரண்டு மாதங்கள் நிர்வாகச் செயலகங்களை செயல் இழக்கச் செய்வதில் தொடர்ந்தது. ஆனால் இரண்டு மாதங்களின் பின்பு அரசு இராணுவம்    கொண்டு போராட்டத்தைத் தடைசெய்ததோடு போராட்டம் அப்படியே நின்றுவிட்டது.பின்பு அது தொடரப்படவில்லை. இதன் பின்பு  1965-1970 –ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் டட்லி செனநாயக்கா தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் ஓர் அங்கமாக இணைந்ததன் மூலம் அனைத்துவகைப் போராட்டங்கையும் இக்காலகட்டத்தில் அது கைவிட்டிருந்தது.1970-ம் ஆண்டின் பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான    ஐக்கிய முன்னணி அரசாங்க காலகட்டத்தில் தமிழர் கூட்டணி (TUF) உருவாகி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாக (TULF) மாற்றமடைந்த காலகட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் மத்தியில் ஒரு பெரும் ஐக்கியம் நிலவிய போதிலும், முழுத் தமிழீழ மண்ணும் தழுவிய அகிம்சைப் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மற்றும் கறுப்புக்  கொடி காட்டல் போன்ற சம்பவங்களும், ஒரளவு அவ்வப்போதைய கடையடைப்பு சம்பவங்களையும் தவிர பாரிய போராட்டங்கள் எதனையும் உதாரணமாகக் காட்டமுடியாது. இக்கால கட்டத்தில் குறிப்பிடக்கூடிய முக்கிய  விடயமாக யாழ்ப்பாணத்தில் மாணவர் பேரவை 1970 டிசம்பரில் நடாத்திய மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைக் குறிப்பிடலாம்.  இப்படியொரு ஊர்வலத்தைத் தானும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செய்ததில்லை.சிங்கள ஆட்சியாளர்கள் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பார்கள் என்று  நான் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த அகிம்சை வழியில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு கொடுக்கக் கூடிய உயர்ந்தபட்ச அரசியல் நெருக்கடியை எமது பழைய தலைமைகள் கொடுக்கவில்லை என்பதையே இங்கு  சுட்டிக்காட்ட விளைகிறேன்.  இப்போதைய நிலையில் அகிம்சைப் போராட்டத்திற்கான உள்நாட்டு,  வெளிநாட்டு, சர்வதேச களங்கள் மிகவும் விரிவாகவும், மிகவும்   சதாகமான நிலைமைகளை கொண்டவையாகவும் உள்ளன. ஆதலால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) அகிம்சை வழியில் இலங்கைத்தீவு தழுவிய  போராட்டங்களை முன்னெடுக்க ஏதுவான வாய்ப்புக்கள் உள்ளன.குறிப்பாகத் தலைநகர் கொழும்பிலும், பொதுவாகத் தமிழ் மண்   எங்கிலும் இத்தகைய போராட்டங்களை அவர்களால் முன்னெடுக்க முடியும்.

இலட்சக் கணக்கான தமிழ் மக்களை பலிகொண்ட இனவாத அரசியலின்   முன்னிலையில் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதுவான சர்வதேசப் பிரபலியமும், சர்வதேச அக்கறையும் இப்போது  ஏற்பட்டிருக்கிறது. எனவே இதனைப் பயன்படுத்தி இப்பின்னணியில்   அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பது இலகுவானது.போராட்டம் என்றால் அது ஒரு தேநீர் விருந்தல்ல. கஷ்டங்களும்,நெருக்கடிகளும், சிறைவாழ்வும், எதிர்பார்க்கப்பட வேண்டியவைதான்.ஆனால் ஆயுதப் போராட்டத்தை நசுக்கியது போல, பயங்கரவாதத்தின்   aqபெயரால் இலச்சக் கணக்கில் மக்களை கொன்று குவித்தது போல,அகிம்சைப் போராட்டத்தில் கொல்ல முடியாது. அதேவேளை தற்போது காணப்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், மற்றும் இந்திய அரசின் எதிர்கால கேந்திர நோக்கு அமெரிக்காவின் இந்துசமுத்திர நோக்கு என்பவற்றின் பின்னணியில் அகிம்சைப்போராட்டம் சுடர்விட்டுப் பிரகாசிக்கக் கூடியதற்கான வாய்ப்புக்கள்  அதிகமாக உள்ளன. ஒரேவேளையில் அகம், புலம், தமிழகம், சர்வதேசம் என அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கேற்ற வரலாற்று வளர்ச்சியும் எம்முன் விரிந்து கிடக்கிறது.எது இருக்கிறதோ அதை நாம் செம்மையாகப் பயன்படுத்தியாக வேண்டும்.சாரணர் இயக்கத்திற்கு சொல்லிக் கொடுக்கும் ஓர் அகரவரிசைப் பாடம் இருக்கிறது. அதாவது உன்முன் எது இருக்கிறதோ, எது காணப்படுகிறதோ அதைக் கையில் எடுத்துக் கையாள். என்பதே அந்தப் போதனையாகும். அதாவது வீட்டில் தங்கக் குவளையில் பால் குடித்திருக்கலாம், ஆனால்  காட்டில் சேற்றை வடித்து கைக் குழியில் நீர் அருந்த வேண்டி  வரும்போது அதனைத் தெரிவாக்குவது தவிர்க்க முடியாது. இப்போது எம்முன் காணப்படும் அனைத்து வாய்ப்புக்களையும் தெரிவாக்குவோமாக. ஒவ்வொரு உன்னதமான அகிம்சைப் போராட்டமும் எதிரியின் மூக்கு நுனியை  உடைப்பதுடன் அவனது முகத் தோற்றத்தையே சிதைத்துவிடும்.

சண்முகவடிவேல்