Thursday, December 31, 2009

வைத்த இறுதியும் அறுதியுமான செக் என்ன?

இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்” என ஈழம் இ நியூசிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் தேக்கமடைந்திருக்கும் எமது போராட்டம் – அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாகச் செய்யப்பட வேண்டியவையாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

நீங்கள் திரும்பவும் பழைய கேள்விகளுக்கே திரும்புகிறீர்கள் என்று நினைக்கிறோம். நாம் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே வலியுறுத்த விரும்புகிறோம். முள்ளிவாய்க்காலில் வைத்து நாம் இராணுவ – அரசியல் ரீதியாக மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. எமது நிலம், இனம், மொழி சார்ந்து சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டது.

இது சாதாரணமானதல்ல. ஒரு சமூகத்தை நிலம், இனம், மொழி என்பவற்றை மையப்படுத்தி அதன் சமூக, பண்பாட்டு, உளவியல், பொருளாதார, வாழ்வியல் ஆதாரங்களை அழிப்பதென்பதுதான் அந்த இனத்தைப் பொறுத்த வரையில் அதன் அரசியல் அழிப்பு என்பதாகவிருக்கிறது. எனவே மேற்படி ஆதாரங்களை மீண்டும் கண்டடைவதும் அதை மீளொழுங்கு செய்வதிலும்தான் எமது அரசியல் அடையாளம் இருக்கின்றது. எனவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் இவற்றை மையப்படுத்தியே இருக்க வேண்டும்.

உங்களுடைய மேற்படி செய்திகளை நாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டோம். இதன் தர்க்கம் எமக்குப் புரிகிறது. இருந்த போதிலும் பழைய கேள்விகளினூடாகவே மேற்படி தர்க்கம் குறித்த சில மேலதிக விளக்கங்களைப் பெற விரும்புகிறோம். தற்போதைய ஈழத்தமிழ் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை முன்மொழிகிறார்கள். தனிமனிதர்களாக, குழுக்களாக, அமைப்புக்களாக ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாக அவை இருக்கின்றன. முரண்பாடுகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவை வரும்காலத்தில் எந்தப் புள்ளியிலும் சந்திக்கும் போல் தெரியவில்லை. புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இச் செயற்பாடுகள் தனி ஆவர்த்தனங்களாக சூழலுக்குப் பொருத்தமற்றவையாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக, ஒவ்வாமை செயற்திட்டங்களாக அவை இருக்கின்றன.

தமது செயற்பாடுகளை முதன்மைப்படுத்த இதன் சில பிரிவினர் மறு தரப்பு மீது காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறையாக வெளித்தள்ளவும் தொடங்கிவிட்டனர்.பரஸ்பரம் இது நடக்கிறது. அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று அது ஒரு மோசமான வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பேரழிவைச் சந்தித்து வாழ்விழந்து நடைப் பிணங்களாகியிருக்கும் எமது மக்கள் இவற்றைக் கண்டு மேலும் பீதியுற்றுருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இப்புற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே நாம் மேற்படி கேள்வியை முன்வைத்தோம்…

உங்களுடைய கேள்விகளையும் அதன் பின்னுள்ள அவலத்தையும் எம்மால் புரிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும் அது நடந்தேறிய விதத்தையும் உன்னிப்பாக அவதானித்தவர்களாக எமக்கு அது குறித்து ஒரு வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு தந்த பதட்டமும் பீதியுமே எங்களை உங்கள் முன் பேச வைத்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தொடர்ச்சி எமது இனத்திற்குள் மேற்படி முரணாக வெடிக்கும், பல ஒவ்வாமைகளை உருவாக்கும் என்பதை நாம் முன்பே கண்டறிந்தோம். அதன் நடப்பு வரலாறுதான் உங்கள் கேள்விகளாக எங்கள் முன் கிடக்கிறது. எமது பதட்டத்தின் பீதியின் பின்புலமும் இதுதான்.

உளவியல் பின்புலத்தினூடாகவே மேற்படி கேள்விகளை அணுக வேண்டும். நாம் முள்ளிவாய்க்காலில் வைத்து அழிக்கப்பட்டதாகக் கூறும் முதன்மைக் கூறுகளில் ஒன்றாக எமது உளவியலும் இருக்கிறது. அத்தோடு நாம் உடனடியாக மீளொழுங்கு செய்ய வேண்டிய விடயமாகவும் இது இருக்கிறது.

உண்மையிலேயே உடனடியாகச் செய்யப்பட வேண்டிய எமது ஒருமித்த செயற்பாடு என்பது சரணடைந்த போராளிகளை உடனடியாக விடுவிப்பதற்கு முயற்சிப்பதும் எமது விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து மரணித்தவர்கள் போக எஞ்சியுள்ள மாவீரர், போராளி குடும்பங்களை உளவியல் சிதைவிலிருந்து காப்பதும் அவர்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதுமே ஆகும்.

இந்தத் தொடர்ச்சி போரில் சிக்குண்ட வன்னி மக்கள் பின்பு முழு தாயக மக்கள் என்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரும் இது குறித்து அக்கறைப்படுவதாகவே தெரியவில்லை. மாறாக எல்லோரும் அரசியல் செய்யக் கிளம்பியிருக்கிறார்கள். இதை நாம் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. இது முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்தித்து எஞ்சியுள்ளவர்களின் உளவியல் சிதைவின் அடையாளமாகவே நாங்கள் பார்க்கிறோம். இச் சிதைவே மேற்படி முரணாக எம்மைப் பிளவுபடுத்தியிருக்கிறது.

குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பல தரப்பினரதும் வன்முறையையும் அவதூறு, கொலை மிரட்டல், அச்சுறுத்தல்களையும் நாம் பார்க்கிறோம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு மேற்படி அரசியல் செய்யும் ஒவ்வொரு தரப்பும் தம்மளவில் தாம் செய்ய முற்பட்டிருக்கும் அரசியலே சரியானது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னொரு அழிவுக்குக் கொண்டே விட்டு விடுவார்கள் என்று நம்பவும் தொடங்கிவிட்டார்கள். சாத்தியம், பொருத்தப்பாடு, தர்க்கம், அறம் எதுவும் இவர்களை இயக்கவில்லை.

சிதைந்துபோன உளவியலே இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதை வேறு ஒரு மொழியில் கூறினால் முள்ளிவாய்க்காலில் வைத்துப் பேரழிவுடன் குருரமான முறையில் வீழத்தப்பட்ட எமது போராடத்தினது தோல்வியும் அவலமுமே இவர்களின் அரசியல் மையமாக இருக்கிறது. தலைவர் பிரபாகரன் மீதான விடுதலைப்புலிகள் மீதான சேறடிப்புக்களின் அவதூறுகளின் மையமாகவும் இந்த ஊனமுற்ற உளவியலே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊனமுற்ற உளவியலிலிருந்து முழுமையான அரசியல் பிறக்க முடியாது. இது சந்தாப்பபவாத, அடிபணிவு, அவல அரசியலின் ஒரு வடிவமாகவே இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு தாயகத்திலும் சரி புலத்திலும் சரி அரசியல் செய்யப் புறப்பட்டிருக்கும் எல்லோருமே விதிவிலக்கில்லாமல் இந்த வாய்ப்பாட்டிற்குள் பொருந்திப் போகிறார்கள். இந்த அரசியல் ஆரோக்கியமானதல்ல.

நாங்கள் தோற்கடிக்கப்பட்டது உண்மை. பெரும் அவலம் நிகழ்ந்ததும் உண்மை. விளைவாக மக்கள் போராட்டத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதும் உண்மை. அதற்காக இவற்றை மையப்படுத்தி எமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க முடியாது. வரும்கால சந்ததிக்கு இந்த அவல அடிபணிவு அரசியலிலிருந்து எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

இது ஒரு வரலாற்றுத்தவறாக மாறிவிடும். வரும்காலத்தில் இன்று இந்த அவல அடிபணிவு அரசியலை கையெலெடுத்தவர்களின் வாரிசுகளே அவர்களை நோகவேண்டித்தான் ஏற்படும். “தம்மை முள்ளிவாய்க்காலில் வைத்து சிங்களவன் கதற கதற கொன்றான் என்பதற்காக எங்களை அடிமைகளாக இருக்கிற மாதிரி அரசியலமைப்பை மாத்திப்போட்டு போய்விட்டர்களோ” என்று அந்த சந்ததி கதறப்போவதும் விளைவாக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுப்பதும் ஒரு தொடர்ச்சியாக இருக்கப்போவதே யதார்த்தம். அடுத்த சந்ததிக்கு இதைக் கடத்துவது ஆபத்தானது.

அப்படியென்றால் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் செய்யாமல் பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா?
இதற்கு பதிலளிப்பது கொஞ்சம் சிக்கலானது. மனம் திறந்து உண்மையைச் சொல்வதென்றால் கொஞ்ச நாளைக்குப் பேசாமல் இருப்பதுதான் நல்லது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு சில வாரங்களிற்குள் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் விமர்சித்து எமது அடுத்த கட்ட அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று விளித்து புலிகள் அமைப்போடு வன்னியில் இணைந்து பணியாற்றிய ஒருவர் எழுதிய கட்டுரை என்ற குறிப்போடு தமிழக சிற்றிதழ் ஒன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதற்கு நாம் அப்போதே எமது கண்டனத்தை தெரிவித்திருந்தோம். அக்கட்டுரைக்கு நாம் அளித்த பதில்தான் இதற்கும் பதிலாக இருக்க முடியும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் எமது உரிமைப் போராட்டமும் எங்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்குகளை இக்காட்சிப் பதிவுகள் நிறைத்தபடியே இருக்கும்.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் ஈழவிடுதலை குறித்த அடுத்த கட்ட அரசியலை வளர்த்துச் செல்ல முடியும். நாம் மேற்படி அரசியல் செய்பவர்கள் எல்லோரையும் விமர்சித்துவிட்டு நாமும் முள்ளிவாய்க்கால் படுகொலையிலிருந்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்வதாகத் தவறாகக் கருத வேண்டாம்.

நாம் அதை கவனத்தில் கொள்ள வேண்டுமேயொழிய அதை நிரந்தரத் தோல்வியாகவும் நிரந்தர அவலமாகவும் கவனத்தில் கொண்டு அவல அடிபணிவு அரசியலை கையிலெடுக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். உணமையைச் சொல்வதென்றால் உடனடியாக நாம் அரசியல் செய்யக்கூடிய புறசுசூழலோ யதார்த்தமோ இல்லை.

உண்மையிலேயே கடந்தகால நிலைப்பாடுகள், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள், அதன் விளைவான சரி தவறுகள் சார்ந்து சுயவிமர்சனமும் மீள்பார்வையும் இங்கு அவசியமாகிறது. முள்ளிவாய்க்காலிலிருந்து பீறிட்ட குருதி இன்னும் காய்ந்துவிடவில்லை. அதன் மணம் இன்னும் நாசியை அடைத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் சுயபிரக்ஞையுடன் கடந்த காலத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதென்பதும் கடினமானது.

இதற்கு ஒரு காலநீட்சி தேவை. அந்த இடைப்பட்ட காலமே ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த பிரக்ஞைபூர்வமான, தெளிவான மறுவாசிப்பை எமக்குத் தரும். நாம் எல்லோருமே பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறோம். இந்த மனநிலையில் தெளிவான அரசியல் கட்டமைப்பை ஒன்றிணைந்து உருவாக்க முடியாது.

இந்த “உடனடி” நடவடிக்கைகள் இன்னுமொரு மனிதப் பேரவலத்திற்கும் அரசியல் வறுமைக்கும் ஈழத்தமிழினத்தை இட்டுச்செல்லக் கூடாது என்பதே நமது பெரும் கவலையாகவிருக்கிறது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இதை பலர் மறந்து பிதற்றுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரலாறு புலிகளின் தோல்வியாக என்றைக்கும் பதிவு செய்யாது.

இத் தோல்வியை தமிழர்களின் இராஜதந்திரத் தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும். எனவே எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதில் கொஞ்சம் கவனம் தேவை. உடனடியாக அரசியல் செய்யப் புறப்பட்டு நாம் கண்டது என்ன? பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுற்று அவதூறுகளையும் காழ்ப்புக்களையும் குரோதங்களையும் வன்முறைகளாக வெளித்தள்ளியதுதான் மிச்சம். இந்த அடிப்படையில்தான் அரசியலைச் சற்று ஒதுக்கிவிட்டு மக்கள் பிரச்சினையில் கவனத்தைக் குவிக்குமாறு தொடர்ந்து கூறிவருகிறோம்.

ஒற்றை அணுகுமுறை இல்லாமல் பல பிரிவுகளாக அரசியல் செய்வது நல்லதுதான். இதுதான் பன்மைத்துவத்திற்கு வழி சமைக்கும். அடிப்படை ஜனநாயகத்திற்கு வழி கோலும். ஆனால் அது இங்கு அவதூறு வன்முறை அரசியலுக்குத்தான் வழி சமைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழர் வரலாற்றிலிருந்து என்றைக்கும் துடைத்தழிக்க முடியாதது. இதைக் கவனத்தில் கொண்டு வரையப்படும் அரசியல் வரைபடமே ஈழவிடுதலைக்கான வழியைக் காட்டும்.

மாற்றுக் கருத்துகளுக்குரிய ஒரு தெளிவான ஜனநாயகச் சூழல் ஈழ அரசியல் சூழலில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். புலிகளின் பின்னடைவை அடுத்து நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்து இதுதான். அதுவே முரண்பாடுகளற்ற ஒரு தெளிவான அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழினத்தின் தீர்க்கமான அரசியல் தீர்வு இதன் வழியேதான் பிறப்பெடுக்கும் – சேறடிப்புகளினூடாகவும் அவதூறுகளினூடாகவும் அது என்றைக்கும் பிறப்பெடுக்க முடியாது.

தற்போதைய நிலையில் எம்மிடையே இருக்கும் பிளவுகளைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரிபோல்தான் தெரிகிறது. ஆனால் நாங்கள் காலம் வரட்டும் என்று மௌனமாக இருக்க எங்களை ஒரேயடியாக சிங்களம் துடைத்தழித்துவிடாதா?
எமது பதிலை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம். கால நீரோட்டம் எமக்கான அரசியலை அடையாளம் காட்டும். வரலாறு ஒரு போதும் ஓரிடத்தில் தேங்கி நின்று விடுவதில்லை. அப்படி ஒரு காலகட்டத்தை நாங்கள் இப்போது நெருங்கி விட்டோம் என்றே நம்புகிறோம். சிறீலங்காவின் அதிபர் தேர்தல் அறிவிப்பும் அதையொட்டி இனப்படுகொலையின் இரு சூத்திரதாரிகள் எதிர் வேட்பாளர்களாக மாறியிருப்பதும் முள்ளிவாய்க்காலிற்கு பி;ன்னான எமது அரசியலின் முக்கியமான கட்டம். இந்த இடத்தில் நாம் ஒரு அரசியலைச் செய்ய முடியும்.

புலிகளின் தோல்விக்கு எமது தரப்பிலேயே ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் முதன்மையானது புலிகள் மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அதன் நிமித்தமாக 2001 புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டும் என்றெல்லாம் வாய்க்கு வந்த வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. வீங்கிப் பெருத்த மூளைகளை வைத்து “பிரேதப் பரிசோதனை” அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் மேற்படி அதிமேதாவிகள்.

இதையெல்லாம் ஒரு வாதத்திற்கு சரி என்றே வைத்துக்கொள்வோம். மாறிவரும் உலக ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளும், உலக அரசியல் வரைபடத்தைக் கிரமமாக உள்வாங்கிய அதிமேதவிகள் ஏன் சிறிலங்கா அதிபர் தேர்தலின் கனதியைப் புரிந்து கொள்ளவில்லை.

ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் செய்யும் இவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை முன்மொழிய விரும்புகிறார்கள். சந்தர்ப்பவாத, அடிபணிவு, அவல அரசியலில் ஒரு இனத்தையே முழுமையாகப் சிக்க வைத்து குழி தோண்டிப் புதைக்க விரும்புகிறார்கள். அத்துடன் பிரபாகரனை கொடுங்கோலனாக்கிச் “சாகடிப்பதற்குத்தான்” உலக ஒழுங்கிலிருந்து உள்ளுர் ஒழுங்கு வரை இழுக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.

சிலர் சொல்கிறார்கள் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி. வேறு சிலரோ மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று. இவை கூடப் பரவாயில்லை. வேறு சிலர் சொல்வதுதான் சினத்தை மூட்டுகிறது. நாம் எமது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த ஒரு தமிழ் வேட்பாளாரை நிறுத்த வேண்டும் என்று. இன்று உலகிலேயே உள்ள அயோக்கியத்தனமான சொல்லாடல் ஒன்றென்றால் “ஈழத்தமிழர் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்பதுதான். நாங்கள் ஒற்றுமையாக இருந்து புலிகளைக் காலைவாரியது காணும்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல் தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் சிறீலங்கா மட்டத்தில் மட்டுமல்ல உலகளவிலும் நிறைய இராஜதந்திரங்களும் அரசியல் சாணக்கியத்தனங்களும் நிறைந்திருக்கிறது. இப்போது பந்து எம்மிடம். நாம் ஒற்றுமையாக இருந்து அரசியல் ரீதியாக தேர்தலின் வழி -ஜனநாயகத்தின் அடிப்படையில் இதை எதிர்கொள்வதென்பது நம்மை நாமே ஏமாற்றுவதுபோலானது.

நாமும் இராஜதந்திரங்களின் அடிப்படையில் சாணக்கியத்தனங்களை பிரயோகிக்க வேண்யடியதுதான். எம்மை அழித்தவனுக்கு வாக்களிப்பதா என்ற வாதம் எல்லாம் இங்கு எடுபடாது. நாங்கள் வெளிப்படையாகவே சொல்கிறோம். சரத்பொன்சேகாவுக்கு நாம் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மகிந்தவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு நாம் என்ன அரசியல் எல்லாம் செய்ய முடியுமோ செய்ய வேண்டியதுதான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வழி ஒருமித்த ஏகாதிபத்தியமாய் திரண்டிருந்த சிங்களம் இப்போது இரண்டாய் உடைந்திருக்கிறது. நாம் கனவில்கூட இப்படியொரு நிகழ்வு நடைபெறும் என்று நினைக்கவில்லை. இதை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மகிந்ததான் எமது முதன்மையான எதிரி. மகிந்த தமது பதவியை இழக்கும்போது எமக்கு கிடைக்கப்போகும் இராஜதந்திர அனுகூலங்கள் மிக முக்கியமானவை.

தற்போதையை அரசியல் நிலவரப்படி அதிபர் தேர்தலில் மகிந்தவிற்குப் பாதகமான முடிவுகள் கிடைக்குமாயின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான மகிந்தவும் அவரது சகோதரர்களும் சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் அல்லது அவர்களாகவே வெளியேறலாம் என்ற பலவகையான கருத்துக்கள் உலா வருகினறன. எது நடந்தாலும் நமக்கு அது ஆதாயம்தான். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு துணை நின்ற டக்ளஸ், கருணா போன்றவர்களும் சரத் பொன்சேகாவின் இலக்குகளாக மாறியிருக்கிறார்கள். இவாகள் இருவரில் குறிப்பாக கருணா நாட்டை விட்டு தப்பியோடலாம் அல்லது சரத் பொன்சேகாவால் கைது செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்றே ஆருடம் கூறப்படுகிறது. எதிரிகளை கொண்டே எதிரிகளை அழிக்கும் சூழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது.

எனவே சரத் பொன்சேகா என்ற எமது ஒற்றை எதிரியை வெல்லச் செய்வதன் மூலம் எமது பல எதிரிகளை நாம் வெளியேற்றுகிறோம். ஒரு வகையில் எமது அடுத்த கட்ட அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களுக்கு ஒன்று புரியவேயில்லை. நாம் சிறீலங்கா என்ற தேசத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி தமிழீழம் என்ற ஒரு நிலப்பரப்பை எமக்கானதாக வரையறுத்து தனி நாடு கேட்டுப் போராடியவர்கள். சிறீலங்கா என்ற தேசத்தின் அதிபர் தேர்தலில் நாம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவது எவ்வளவு அபத்தம். இது எமது நீண்ட கால போராட்டத்தை – அதன் நியாயத்தை நீர்த்துபோக செய்யும் முயற்சி.

நாம் இனி ஒரு ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சிறீலங்கா என்ற தேசத்திற்குள் நாம் எமக்கான தனித்துவ அரசியலையும் செய்ய முடியாது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது பேசித் தீர்ப்போம் என்று சொல்பவர்கள் இதைக் கவனத்தில் கொண்டது மாதிரியே தெரியவில்லை.

எமக்கு இருக்கிற ஒரே வழி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போர்க்குற்றங்களின் வழி நடந்தேறிய இனப்படுகொலைகள் என்பதையும் அது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் இந்த உலகுக்கு நிருபிப்பதுதான். உலகுக்கு அது தெரியாது என்றல்ல. அவர்கள் கண்முன்னால்தான் இந்தப் படுகொலைகள் நடந்தேறின. பிராந்திய – பூகோள அரசியலின் ஒரு விளைவும் மௌனமும் அது. இப்போது அதே பிராந்திய -பூகோள அரசியல் சிறீலங்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. நாம் இதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

எமது அடுத்த கட்ட அரசியல் என்பதே இந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் நாம் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவுவோமானால் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த எமது அரசியல் கனவு நிறைவேறும்.

முன்பே குறிப்பிட்டதைப் போல் உலகுக்கு இது தெரியாததல்ல ஆனால் தற்போது ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆதாரங்களை இந்த அதிபர் தேர்தலினூடாக இனப்படுகொலையின் சூத்திரதாரிகளே வழங்கத்தயாராகி வருகிறார்கள். நாம் அதற்கு வழி சமைத்து கொடுத்தால் மட்டும் போதுமானது. ஆயுதமும் தூக்கத் தேவையில்லை. மக்களிடம் நிதியும் திரட்டத் தேவையில்லை. இறுதி இலக்கை நோக்கி நாம் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது யாரும் உதவி செய்யத்தேவையில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

சரத் பொன்சேகா வெல்லும்போது அவரது நடவடிக்கைகள் இயல்பாகவே ஒரு இராணுவ தோற்றத்தைக் கொடுக்கும். அவர் பதவியைத் துறந்து தேர்தலின் அடிப்படையில் தெரிவு செய்யபப்ட்டாலும் உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். இந்த அடிப்படையே எமக்கு போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பான சார்பான விளைவுகளை உருவாக்கும். அவரே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பங்குதாரர்களில் ஒருவர் என்பது எமக்கு மேலதிக அனுகூலங்களைக் கொடுக்கும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது.

இப்போதே போதுமான அளவு ஆதாரங்களை சரத்பொன்சேகா வழங்கிவிட்டார். வரும் நாட்கள், தேர்தலின் தோல்வி மறுதரப்பிடமிருந்தும் பல உண்மைகளை வரவழைக்கும். நாம் அவற்றை சேகரித்து உலக அரங்கை நோக்கிக் கொண்டு நகாத்துவதில்தான் எமது எதிர்காலமே இருக்கிறது. ஆனால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக்கொண்டிருக்கிறோம். போதாதற்கு எமக்கு நாமே குழிபறிப்பதிலேயே காலத்தையும் கடந்து செல்கிறோம்.

நாம் முன்பே கூறியது போல் நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. “inner city press” இதை தூசி தட்டி கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கி விட்டது. “channel four” ஏற்கனவே வெளியான இனப்படுகொலை ஆதார ஒளிப்பிரதியை உண்மையானது என ஆதாரபூர்வமாக நிருபித்திருக்கிறது.

ஐநாவிற்கும் சிறீலங்கா அதிகாரிகளுக்குமிடையில் அறிக்கைப் போர் தொடங்கிவிட்டது. இது வரும் நாட்களில் விரிவாக்கம் பெறும். நாம் செய்ய வேண்டியது மீண்டும் மக்களை வீதியில் இறக்குவதும் அவர்களுக்கு “குண்டுசட்டி” அரசியல் செய்பவர்கள் உபத்திரவம் தராமல் இருப்பதுமாகும். மீதியை வரலாறு எழுதும்.

இதை தலைவர் பிரபாகரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிங்களம் வந்து சேர்ந்து விட்டது என்ற வரையறுக்கலாமா…..?
அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம். புலிகளின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஈழச்சூழலில் புலிகளை ஆதரித்தவர்கள் பலர் இன்று அந்த தோல்விக்கு புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் காரணமாகக் காட்டும் அபத்தம் எல்லாம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஈழச்சூழலுக்கு வெளியில் உலக அளவில் ஆரோக்கியமான முறையில் புலிகளின் பின்னடைவு விரிவாக ஆராயப்படுகிறது. ஏனெனில் எதிர்ப்பு அரசியல் என்ற முறையில் உலகின் தனித்துவமான விடுதலை அமைப்பாக இருந்ததை ஏற்றக் கொள்ளும் இவ் ஆய்வுகள் பல விமர்சனங்களின் மத்தியிலும் தலைவர் பிரபாகரனது போராட்ட முறைகளையும் அது மாறிவரும் உலக ஒழுங்கின் பிரகாரம் எப்படி அழிவுற்றது என்றும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.

மாறுதல் கால பயங்கரங்கள் (Horror of transition), துயர் சார் அரசியல் ( Politics of agony) தாள முடியாத நிகழ்வியல் (Unbearable reality) என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்களினூடாக முள்ளிவாய்க்காலில் வைத்து புலிகள் அழிக்கப்பட்டதை ஒரு கருத்தியல் அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வுகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்தபோதும் ஒரு மேன்மையான இடத்திலேயே வைத்து ஆராய்கிறது. திரும்பிப் போக முடியாத ஒரு நிலை என்று இதை வர்ணிக்கிறார்கள்.

இங்கு ஈழச்சூழலிருந்து விமர்சனம் செய்ய முற்படுபவர்கள் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். பிரபாகரன் நடத்தியது ஆயுதப்போராட்டம். அது கொல்லுதலையும் கொல்லப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டது. வெற்றியாயினும் தோல்வியாயினும் அங்கு மிஞ்சுவது அழிவுதான். உடலிலே குண்டுகளைக் கட்டிககொண்டு போய் சிதறுபவர்களின் உயிர்துறப்பில் நாம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். இப்போது தூற்றுபவர்கள் இதை ஏன் முன்னுணரவில்லை.

இவர்கள் சூரியத்தேவன், வரலாற்று நாயகன், நெசவாளி என்று பிரபாகரனுக்கு சூட்டாத நாமம் இல்லை. முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை பிரபாகரன் புகழ்பாடிய அவரது போராட்டத்தை ஏற்றுக்கொண்ட யாருக்குமே அவரை விமர்சிக்கிற தகுதியோ அருகதையோ கிடையாது. இன்று அதீத புகழ்பாடிய அவர்களே அவரை விமர்சிக்கவும் தலைப்படுகிறார்கள். இதை சந்தர்ப்பவாதம் என்றில்லாமல் வேறு எப்படி அழைப்பது?

பிரபாகரன் 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறும் போது பின்லேடன் இரட்டைக் கோபுரத்தை தகர்ப்பார் என்று முன்னுணர முடியாது. அன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் சிங்கள இனவாத அரசை எதிர்ப்பதற்கு ஆயதப்போராட்டம்தான் அவருக்கு வசதியைக்கொடுத்தது.

காலத்திற்குக் காலம் மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப தமது செயற்திட்டங்களை மாற்றிக்கொண்டு வந்தார் என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும். ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அவர் சமாதானத்தை கடைப்பிடித்ததை பலர் மறந்து கதைக்கிறார்கள். அதுவே அவருக்கு புதைகுழியாகியதையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதையெல்hம் அவர் ஒரளவிற்கு முன்னுணர்ந்துள்ளார் என்பதை தற்போது ஆராயும் போது புரிகிறது. தாம் ஒரு மரபுவழி இராணுவமாக இனி நிலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்தவாராகவே அவர் பின்வாங்கியிருக்கிறார். அந்த புரிதலினூடாகவே அவர் ஒரு அரசியலை முள்ளிவாய்க்காலில் வைத்து செய்திருக்கிறார் என்று புரிகிறது. அது என்னவென்பதை காலம்தான் நமக்கு உணர்த்தும்.

இன்றைய சிங்களத்தின் உடைவு அதை லேசாகக் கோடிட்டுக்காட்டுகிறது. ஒரு வாதத்திற்கு புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து முழு தமிழீழ நிலப்பரப்பையும் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போரின்போது கூட முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்டதற்கும் அதிகளவிலான பொதுமக்களையும் போராளிகளையும் இழந்தே நாம் அதை அடையவேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் பிரகாரம் ஒரு அந்நிய இராணுவத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அல்லது அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்காது. மீண்டும் ஒரு போருக்கு நாம் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள்.

இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவர் “மறைந்தும்” சிங்களம் அவரின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கி சுழல்வதுபோல்தான் தெரிகிறது. இது முள்ளிவாய்க்காலில் வைத்து பிரபாகரன் சிங்களத்திற்கு வைத்த “இறுதியும்” அறுதியுமான “செக்”.

நெருடல்

கழிந்து போகும் துன்பியல் ஆண்டு


இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாத மிக மோசமான மிகக் கொடூரமான மிகக் கோரமான போரியல் பேரழிவுகளையும் நாசங்களையும் தந்த 2009 ஆம் ஆண்டு இன்றுடன் கழிகின்றது. வரலாற்றுப் பதிவில் ஈழத் தமிழர்களின் ஆன்மாவில் நிரந்தர வடுவை ஆழமாகப் பொறித்துவிட்டு நீங்கும் கொடூர ஆண்டாக இது நம்மை விட்டு இன்றுடன் விடை பெறுகின்றது.

அத்துடன் இரண்டாவது மிலேனியத்தின் முடிவின் பின் முதலாவது தசாப்தத்தின் கடைசி நாளும் இன்று தான். 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், இன்று 2009 டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான இந்த தசாப்த காலம் தமிழர்கள் வாழ்வில் ஏற்றமும் இறக் கமுமாக, நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் தந்து பயனற்றுக் கழிவது கண்கூடு.இந்தத் தசாப்த காலம் புதிய மிலேனியத்தோடு பிறந்தபோது தமிழர் தேசம் பெரும் போர் எனும் அக்கினிச் சுவாலைக்குள் சிக்குண்டு கிடந்தது. எனினும், உரிமைத் தாகம் என்ற உறுதியும், நம்பிக்கையும், திடசங்கற்பமும், பற்றுறு தியும் தமிழர்தம் மனதில் அன்று நிறைந்திருந்தன அந்தப் போரியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் கூட.
எனினும், அந்தத் தசாப்தத்தின் மூன்றாவது ஆண்டு பிறந்தபோது 2002 ஆம் ஆண்டின் தோற்றத்தோடு அமைதியுடன் கூடிய கௌரவ வாழ்வுக்கான வாய்ப்புக்கு, சாத்தியத்துக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்று, சமாதான முயற்சியின் பெயரால் தோற்றியபோது ஈழத் தமிழர்கள் நன்கு மகிழ்ந்துதான் போனார்கள்.

ஆனால் அந்த சமரச எத்தனங்களும், சமாதான முயற்சிகளும் 2006 மத்தியுடன் கானல்நீராக மாறியபோது ஈழத் தமிழர்களின் வாழ்வு பேரவலமாயிற்று; பேரழிவே முடிவு என்றாயிற்று. தமிழ்த் தேசியம் எழுச்சி கொண்டு, வளர்ச்சி பெற்று, சுயநிர்ணயத்துக்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் எடுத்த தமிழ் மக்களின் புரட்சிகரமான அரசியல் வரலாற்றை முற்றாகப் புரட்டிப்போட்டு, அடிமை வாழ்வே இனி சாசுவதம் என்ற நிலையை நிஜமாக்கி, யதார்த்தபூர்வமாக்கிவிட்டு எம்மை விட்டுப் போகிறது மிலேனியம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தின் கடைசி ஆண்டு.

இந்தத் தசாப்தம் பிறந்தபோது தமிழர் தாயகம் பெரும் போர் என்ற கொடூர அக்கினிச் சுவாலைக்குள் சிக்குண்டு கிடந்த போதிலும், அந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் உறுதி அச்சமயம் தமிழர் தாயகத்துக்குத் திடமாகவே இருந்தது.

ஆனால் இன்று, அந்தத் தசாப்தத்தின் முடிவில் போரரக்கனின் கொடூரம் தன் கைவரிசையைக் காட்டி ஓய்ந்து விட்டது. யுத்தம் என்ற நாசகாரத் தீ தமிழர் தாயகம் முழுவதையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கிவிட்டு அணையத் தொடங்கிவிட்டது. அந்தக் கொடூர நெருப்பில் ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கான உயிர்ப்பும், துடிப்பும், தளராத வேணவாவும், எழுச்சித் திறனும் கூடத் தீய்ந்து அடங்கி, நீறு பூத்துப் போயிருப்பதுதான் வேதனைக்குரிய மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். 2010 என்ற புத்தாண்டு நாளை பிறந்தாலும் தமிழர் தம் வாழ்வில் ஆண்டின் தைப்பிறப்பு இன்னும் 14 நாள்கள் கழித்து, தைப்பொங்கல் தினத்தன்றே வருகின்றது.

புதிய ஆண்டின் தை பிறக்கும் போதாவது வழி பிறக்காதா என்ற ஏக்கத்துடன், வழமைபோல வழிமேல் விழி வைத்துத் தமிழர்கள் காத்திருக்கின்றார்கள்.

அதுவும் முன்னெப்போதும் வரலாற்றில் சந்தித்தேயிராத பேரழிவுகளையும், போரழிவுகளையும், பேரவலங்களையும் சந்தித்து அதன் துன்பச் சுமைகளில் மூழ்கியபடி பற்றுக் கோடு கிடைக்காதா என்று பார்த்திருக்கின்றார்கள் அவர்கள்.

தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவன் ஒரு சிறு துரும்பைப் பற்றியாவது மேலெழுந்து நீரில் மிதந்து மூச்சுக் காற்றை உள்ளெடுக்க முயல்வது போல, இன்று பற்றுக் கோடு தேடிப்பார்த்துத் துடித்து ஏங்கியிருக்கும் தமிழினத்துக்கு தை பிறந்த கையோடு வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல் என்ற சிறிய வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.

இந்தத் தேர்தலும் அதன் முடிவும் தமிழர்களுக்கு நிம்மதியான நிலையான, நிரந்தரமான அமைதிமிக்க ஒரு வாழ்வியல் சந்தர்ப்பத்தைத் தந்துவிடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெளிவான விடயம்தான்.

ஆனால், நீருக்குள் மூழ்கி, சுவாசிக்க முடியாமல் தடு மாறிக் கொண்டிருப்பவனுக்கு, நீரின் மேல் வந்து மூச்சு விடுவதற்கு ஓர் இடைக்கால சந்தர்ப்பத்தையாவது வாய்ப்பையாவது தரக்கூடிய விளைவை இந்தத் தேர்தலும் அதன் முடிவும் வழங்கக்கூடும்.

போரழிவில் துவண்டு கிடக்கும் தமிழினத்துக்கு எதிர்காலத்தைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும் ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்துவதுதான் உசிதமானது; தந்தி ரோபாயமானது.

அதைக்கூடச் செய்ய விடாது, குழப்பும் விதத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சில தற்குறிகள், கோடரிக் காம்புகள் செயற்படுகின்றமை, போர் எனும் பெரும் நெருப்பில் தீய்ந்து போய்க் கிடக்கும் தமிழினத்தைத் தொடர்ந்தும் நிரந்தர அடிமைத் தனத்துக்குள் ஆழ்த்தும் செயற்பாட்டுக்கே உதவும். இதை அவர்கள் புரிந்துகொண்டு திருந்துவார்களா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..............!

Wednesday, December 30, 2009

கூட்டமைப்பின் தீர்மானத்தில் இந்தியத் தலையீடு இருக்குமா?


"சபாஷ்! சரியான போட்டி" எனக் கூறுமளவுக்கு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஆனாலும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் இந்தியாவின் தலையீடுதான் இத்தேர்தல் பெறுபேறு என்ற தலைவிதியைத் தீர்மானிக்குமோ என்ற சாரப்பட அமைகிறது இந்த அரசியல் கண்ணோட்டம்.

ரங்க ஜெயசூரிய என்பவரால் எழுதப்பட்ட இந்த அரசியல் கண்ணோட்டம், "லக்பிம' பத்திரி கையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.

இலங்கைக்குப் புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வது தொடர்பாகத் தேர்தலொன்றைச் சந்திக்க விருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்குரிமையின் ஊடாக இதுவரையிலும் கிட்டாததொரு பலம் தமிழ் மக்களுக்குக் கிட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கு உரிய வடமாகாணத்தில் மாத்திரம் கடந்த 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 70 ஆயிரமாகும். இதற்கு மேலதிகமாக நடந்து முடிந்த கிழக்கின் மாகாண சபைகளுக்கான தேர்தலோடு சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களுக் கமைய, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 82 ஆயிரமாகும். அவர்களுள் 5 இலட்சத்து 91 ஆயிரம் பேர் மேற்படி தேர்தலில் வாக்களித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பல்லினச் சமூகங்கள் வாழ்ந்தாலும் கூட, அவர்களுள் 40 வீதமானோர் தமிழர்களேயாவர். இவற்றுக்கமைய, இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளின் பெறுமதி காரணமாக பெரும் பலத்தை ஈட்டிக் கொண்டுள்ளமை தெளிவான விடயமாகும்.

சுயநிர்ணய அரசியல் ஆனாலும், சர்வஜன வாக்குரிமையினூடாக உரிமையாகியுள்ள இப் பலத்தை வரலாறு முழுவதிலும் தமிழ் மக்கள் வீணடித்துக் கொண்டுள்ளனர் என கொள்ள முடிகிறது. சுதந்திரத்தின் பின்னர், சிலவேளை அதற்கு முன்னிருந்தே அதாவது 1932 இல் சர்வஜன வாக்குரிமை கிட்டிய காலகட்டத்திலிருந்தே தமிழர் அரசியல் செயற்பாடானது ஒரு விதத்திலான ஒரே இலக்கின் மீதே பதிந்திருந்துள்ளது. அதாவது சுயநிர்ணய இலக்கையே அது கொண்டிருந்தது.

1931 இல் தமிழ் பிரபு வர்க்கமானது, டொனமூர் யோசனையின் கீழ் இந் நாட்டில் முதற்தடவையாக நிறுவப்படவிருந்த அரச சபை ஒன்று தொடர்பான தேர்தலைப் பகிஷ்கரித்தது. சிறுபான்மை இனத் தலைவர்களின் உரிமைகள் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களச் சமுதாயத்தால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடுவது தொடர்பாக விசேடமானதொரு அரசியல் பிரதிநிதித்துவம் மீதான கோரிக்கையை முன்வைத்தே அவர்கள் அவ்விதம் நடந்து கொண்டனர்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலானது சுயநிர்ணயம் மற்றும் சுய நிர்வாகத்தை வென்றெடுப்பது தொடர்பான இலக்கையே கொண்டிருந்துள்ளது. 1980 இன் தசாப்தத்திலிருந்து விடுதலைப் போராட்டத்தை தமது ஏகபோக உரிமையாக்கிக் கொண்டதோடு, அன்றிலிருந்தே தமிழர் தலைமைத்துவமானது, தமது அரசியல் உரிமைகளை, தமது வாழ்வாதார உரிமைகளுக்காகப் பரிமாற்றம் செய்து கொண்டது. அவ்விதமாகத் தமிழர்களது மையநிலை அரசியலின் ஓர் அத்தியாயம் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் களமிறங்கியது, ஆயுத மேந்திய தமிழ் அரசியலின் முகமேயாகும். ஆனாலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியை அடுத்துத் தமிழரின் மையநிலை அரசியலுக்குப் புத்துயிர் கிட்டியுள்ளது. இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியைத் தழுவி ஆறுமாத காலம் வரையில் கடந்து சென்றுள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழர் அரசியலின் இப்புதிய தடம் தொடர்பாக இன்னமும் எந்தவொரு ஆயத்தமும் இல்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ் சமுதாயத்தினுள் அனைத்து மாற்றுக் கருத்தாளர்களையும் படுகொலை செய்துள்ள யுகமொன்றின் இறுதியிலும் கூட, மையநிலை தமிழர் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி மிகத் தெளிவானதாகும்.

கூட்டமைப்புக்குள் குழப்பம்

இன்றைய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ((TNA))பிளவுகள் மற்றும் கருத்து மோதல்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அது, இயல்பானதே. விடுதலைக் கூட்டணி (TULF) ஈ.பி.ஆர்.எல்.எவ். (EPRLF) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) மற்றும் ரெலோ (TELO) ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, விடுதலைப் புலிகள் அமைப்பினது உருவாக்கமாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு அற்றுப்போயுள்ள இன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புதியதொரு அரசியல் செயற்பாட்டில் (Mission) தடம்பதிக்க வேண்டி நேரலாம். ஆனால், அதற்குப் பதிலாகக் கட்சியினுள் பிளவுகளையே இன்று காணமுடிகிறது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பத்துப்பேரும் விடுதலைப்புலிகள் அமைப்பினால் உள்ளீர்த்துவிடப்பட்டவர்களேயாவர். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிய எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்களல்லர்.

அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது, கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரான ஆர். சம்பந்தன் மற்றும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சி தொடர்ந்தும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரச் செயற்பாட்டை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளதெனவும் அதன் பின்னர் தீர்மானமொன்றுக்கு வரவேண்டியுள்ளதென்பதாகவும் வாதிட்டுக் கொண்டனர். ஆனாலும், கட்சியின் வேறொரு பிரிவினர், கட்சியின் தலைவர், இந்தியாவின் தீர்மானமொன்றுக்கு அமைய செயற்படுவது தொடர்பான கால அவகாசத்துக்காக மேற்கொள்ளும் தகிடுதத்தமே இதுவெனத் தெரிவித்துள்ளனர். ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அத்தரப்பானது ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளரொருவரை நிறுத்தவேண்டியுள்ளதாக வாதிட்டது. அவ்விதம் வாதிட்டவர்களுள் அண்மையில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமும் ஒருவராவார்.

மேலுமொரு பிரிவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டியுள்ளதெனவும் கருத்து வழங்கியுள்ளனர். இவர்களுள் முன்னிலை வகிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பம் ஆவார். எவ்வாறோ ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதென்பது தமிழர் அரசியல் தலைமைத்துவம் வரலாறு முழுமையிலும் நடத்திக் காட்டியுள்ளதொரு மடமைத்தனமாகும். ஆனால் இங்கு கவலைக்குரிய விடயமானது, சிலர் ஒருபோதும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாதிருப்பதேயாகும்.

நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் அண்மைய திகதியில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது அச் செயலானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாகியிருந்தது. அவரது தாய்க் கட்சியான ரெலோ அமைப்பு அவரது இந்த நடைமுறை தொடர்பாக விளக்கம் கோரி நின்றபோது, அதற்குப் பிரதிபலிப்பைத் தெரிவிக்கும் விதமாக அவர் அந்த அமைப்பின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொண்டுள்ளார்.

தெளிவற்ற நிலைமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இணக்கப்பாடொன்றை எவ்வாறு எட்டப்போகிறதென்பது தெளிவற்றதாகவே உள்ளது. இருந்தபோதிலும், கட்சியினுள் நிலவும் பலதரப்பட்ட கருத்தியல் வாதங்கள் அத்தகைய இணக்கப்பாடொன்று எட்டப்படுவதை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கி விட்டுள்ளன. வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர், கடந்த தினமொன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரை அரவணைத்து மகிழும் புகைப்படமொன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியின் முதற் கட்டப் பிரதிநிதிகள் என்ற ரீதியில், அன்றுவரையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த மெனிக்பார்ம் அகதிமுகாம்களுக்குச் சென்று அவற்றைப் பார்வையிட்டனர். அத்தோடு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசு வழங்கியுள்ள வசதி வாய்ப்புகள் பற்றி அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்படக்கூடிய உள்ளகப் பிளவுகள் தொடர்பான முன்னறிவிப்புக்கு ஒப்பானதே.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்தா போன்றோர் அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா? என நாம் அவரிடம் வினவியபோது, ""நான் எப்போதுமே ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி நிற்பேன்'' என்பதாக கிஷோர் தெரிவித்தார்.

இவ்வளவுக்கும் சிவநாதன் கிஷோர், ஜெனரல் சரத் பொன்சேகாவினதும் நண்பரேயாவார். ஜெனரல் சரத் பொன்சேகா மட்டக்களப்பில் மேஜரொருவராக சேவையாற்றிய காலகட்டத்திலிருந்தே தாம் அவருடன் நட்புக் கொண்டிருந்ததாக சிவநாதன் கிஷோர் எம்மிடம் தெரிவித்தார். "பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா?'' என நாம் கிஷோவிடம் வினவியபோது, புதுடில்லி தலையிடலாம்"ஆனாலும் இருவருக்கு உதவிக் கரம் கொடுக்க இயலாதல்லவா'' என அவர் தெரிவித்தார்.இங்கு, ஜனதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, நிலவும் பலதரப்பட்ட கருத்தியல் வாதங்களின் மத்தியில் ஏதேனும் ஒரு வெளிச்சக்தியின் அமையும் காத்திரமானதொரு தலையீடு இல்லாது கட்சியின் தலைமைத் துவத்தால் ஏனைய தரப்புகளை இணக்கப் பாடொன் றுக்கு இட்டுச் செல்வதென்பது சிரமத்துக்குரியது என்பதேயாகும்.

இந்தியச் சார்ப்புக்கான முக்கியத்துவம் இங்குதான் தலைதூக்குகிறது. புதுடில்லியானது ஏற்கனவே இந்நாட்டுத் தமிழர் அரசியல் நீரோட்டத்தினுள் தனது பலத்தை உறுதிப்படுத்தி வருகிறது. அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் இழப்புக்குப் பின்னர் இலங்கையின் தமிழர் அரசியல் பாத்திரத்தினுள் பிரதான பாத்திரமொன்றை ஏற்று நடிப்பது தொடர்பாக புதுடில்லியானது தன்னைத் தயார்படுத்தி வருகிறது.

வடக்கின் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பாக, யுத்தத்தின் முடிவை அடுத்து இந்தியா அடிப்படையுதவி என்றவாறு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. வடபுலத்து யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் புல்மோட்டையில் அவசர மருத்துவச் சேவை மையமொன்றையும் இயங்கச் செய்திருந்தனர்.

இன்றைய அளவில் இந்திய இராணுவத்தின் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவொன்றும் வடபுலத்தில் செயற்படுகிறது. இவ்விதம் இந்தியாவானாது சலசலப்பெதையும் காட்டாது திரைக்குப் பின்னால் இருந்துகொண்டே தனது கருமத்தை நடத்திச் செல்கிறது. இது, நரசிம்மராவின் காலத்திலிருந்தே இந்தியாவினால் கொண்டு செல்லப்படும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் நிலவும் ஒருவிதத்திலான 'Soft Power' குறித்த சார்பு நிலையின் மேலுமொரு உதாரணமாகும்.

இன்றைய இந்தியாவென்பது, 1980இன் தசாப்தத்தில் போன்று பொருளாதாரத்தில் திறனற்றுப் போயிருந்த உள்ளகப் பொருளாதாரத்தில் கட்டுண்டிருந்த "பாஸ்கட் கேஸ்'பொருளாதாரத்தைக் கொண்டதல்ல.இந்தியப் பொருளாதாரமானது, 1992இல் அது திறந்துவிடப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து துரித வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இன்றைய அளவில் அது வேக வளர்ச்சியைக் காட்டி நிற்கும் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகும்.

சீனா இன்றைய அளவிலும் முன்னணி வகித்தாலும் கூட, இந்தியாவின் ஜனநாயகவாதம் மற்றும் தாராளமய ஜனநாயகவாத நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து பார்க்கும் சில ஆய்வாளர்கள், எதிர்காலத்தில் இந்தியாவானது பொருளதார ரீதியில் சீனாவை முந்திச் செல்லக்கூடுமென்பதாகவும் கூடக் கருத்து வழங்குகின் றனர்.

"வளர்த்த கடா" ஒழிப்பு
இந்தியாவானது இலங்கையின் யுத்தத்தில் நேரடித் தலையீடு என்றவாறு செயற்பட்டிருக்கவில்லைத்தான். ஆனாலும், இந்தியாவின் பச்சை விளக்குச் சமிஞ்ஞையொன்று இல்லாது இலங்கையின் இராணுவத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விடும்விதமாக யுத்தம் புரிய முடிந்திருக்குமென வாதாடுவது கேலிக்குரியதாகும். அவ்விதம் செயற்பட்டுள்ள இந்தியா, தானே வளர்த்து உருவாக்கி உறுதுணையாக நின்று உதவியிருந்த "வளர்த்த கடாவை' இறுதியில் ஒழித்துவிட்டது. இன்று, இலங்கையின் தமிழர் அரசியலில் தீர்க்கமானதொரு மையமாகப் புதுடில்லி அமைந்துள்ளது. தற்போது அது, சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் தீர்வொன்றை எட்டும் கருமம் தொடர்பாக இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுதிரட்டி வருகிறது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வசமிருக்கும் வாக்குப் பலத்தைச் சாதனமாக்கி அரசியல் தீர்வு தொடர்பாகப் பேரம் பேசும் வலுவொன்றாக அதைப் பயன்படுத்துவதற்கும் செயற்பட்டு வருகிறது.இச்செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழர் அரசியலின் தலையாய அரசியல் கட்சி) முக்கியமானதொரு கருவியாகிறது. இது, 2004ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 6 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 22 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

பதின் மூன்றாவது திருத்தம்

கடந்த சில வாரங்களுள் கொழும்பின் பிரதான அரசியல் நீரோட்டங்கள் இரண்டினதுமே பிரதிநிதிகள் தமிழ் மக்களது வாக்குகளைத் தம்சவப்படுத்திக் கொள்வதற்காக இந்தியா சென்று வந்துள்ளனர். அதன் முதற்கட்டமாக ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா புதுடில்லிக்குச் சென்று இந்திய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவுச் செயலாளரான நிருபமா ராவைச் சந்தித்துள்ளார். அங்கு, இந்தியப் பிரதிநிதிகளால் சரத் பொன்சேகாவிடம் எழுப்பப்பட்ட முக்கிய வினாவாகியிருந்தது, அவரால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வின் உரு எத்தகையது என்பதேயாகும். அதையடுத்து பஸில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் லலித் வீரதுங்க உள்ளடங்கிய ஜனாதிபதியின் உயர்மட்டக் குழு இந்தியா சென்று இந்தியத் தரப்போடு பேசியுள்ளது. அச்சமயம் இலங்கை ஜனாதிபதியின் உத்தேச அரசியல் தீர்வு யோசனை பற்றிய கருத்துகளே கோரப்பட்டுள்ளன. அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகரான பஸில் ராஜபக்ஷ, "13 பிளஸ்' அரசியல் தீர்வொன்றே வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அதாவது, தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய நிறுவப்பட்டுள்ள மாகாணசபைகள் என்பதாகும். மேற்படி திருத்தத்தின் ஒருங்கிணைந்த பட்டியலுக்கு அமைந்த மத்திய அரசும் மாகாணசபைகளுமென்ற இரண்டுமே பொறுப்புக்கூறும் அதிகாரங்கள் உள்ளன. முக்கியமாக இது விடயத்தில் மேற்குறிப்பிட்ட பட்டியலின் சில அதிகாரங்கள் மட்டும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவது குறித்து அனைத்துக் கட்சி மாநாட்டுக் குழு மூலமாகவும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்படும் வரையிலும் அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இங்கு முக்கியமானதொரு விடயத்தைக் குறிப்பிட்டாகவேண்டியுள்ளது. அதாவது, சிறுபான்மையினங்களின் பிரச்சினைகள் மற்றும் நல்லாட்சி தொடர்பாக இந்நாட்டில் பெரும்பாலும் தேர்தல்களின்போது மட்டுமே மேடைகளில் பேசப்படுவதால் அது, அந்தளவுக்குப் புதுமையானதோ ஆச்சரியப்படத்தக்கதோ அல்ல.எவ்வாறோ, ஜெனரல் சரத் பொன்சேகா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் பயணிக்கவுள்ளார் என வாக்குறுதி வழங்கியுள்ளார். (ஆனாலும் அவருக்குக் காத்திரமான ஒத்துழைப்பை வழங்கிநிற்கும் கட்சியான ஜே.வி.பி. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு விரோதமானதாகும்.)அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, இந்திய அரசியல் தலைமைத்துவத்தைச் சந்தித்திருந்தார். அவரது அச்சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை வென்றெடுப்பதே முக்கிய நோக்காக இருந்துள்ளது.

இங்கு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்கள் இருவருக்குமே தமிழ் மக்களது வாக்குகள் இன்றியமையாதவை என்பது சந்தேகத்துக்கு இடமற்றதாகும். அந்த வாக்குகளை வென்றெடுக்க வேண்டுமானால், அவர்கள் உண்மையானதொரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டியுள்ளது. *

தமிழில் : சரா

17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தவறியதால் ஏற்பட்டுள்ள விபரீதங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய பிரசார நடவடிக்கைகளின்போது அரசுத் தரப்பினால் அரச சொத்துகள் தவறாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலைமை எல்லையை மீறி வருகின்றது.

இது விடயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவர வில்லை.நாட்டின் பல பாகங்களிலும் தேர்தல் சட்டத்துக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், "கட் அவுட்"டுகள் போன்றவற்றை அகற்றச் செய்வதிலும் மெத்தனப் போக்கும் உதாசீனத் தடிப்பும் வெளிப்படையாகவே தென்படுகின்றன. இந்த விளம்பரச் சுவரொட்டிகளை அகற்றும் விடயம் தொடர்பாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சம்பந் தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைக் கடிதங்களில் அனுப்பி விட்டார். ஆனால் அத்தோடு அவரது பணி முடிந்து விட்டது என்பது போல விடயம் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றது. அவரது கடிதமும் அதில் உள்ள உத்தரவும் வெறும் எழுத்துடன் அடங்கிப் போய்விட்டன. பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு பக்கத்திலேயே வேட்பாளர்களின் பிரமாண்டமான "கட் அவுட்"டுகள் பெரும் உயரத்துக்கு எழுந்து நிற்பதைப் பார்க்கும்போது இந்த நாட்டின் சட்டத்தை எண்ணி, அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதற்கு அப்பால் பொதுச் சொத்துகளைத் தமது தேர்தல் பிரசாரத்துக்கு அதிகளவில் அரசுத் தரப்பு பயன் படுத்தி வருகின்றமை தொடர்பான பல்வேறு தகவல்களைத் தேர்தலைக் கண்காணிக்கும் சுயாதீனக் குழுக்களே பகிரங்கப்படுத்தி, அம்பலப்படுத்தி வருகின்றன. அரச, பொதுத்துறை ஊழியர்கள் பலர் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரத்துக்காகக் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். வெளிநாட்டுத் தூதரகங்களில் அரசின் ஊழியர்களாகப் பணிபுரியும் பல இராஜதந்திரிகள் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக விசேட மாகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆனால் இவற்றைத் தடுத்து நிறுத்த வக்கற்றவராகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செய்வதறியாது நிற்கின்றார் என்பது வெளிப்படையானது.தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டும் நிவாரணமும், நீதியும் கிட்டாது என்று கருதி, இந்த ஜனாதிபதித் தேர்தலில் "எங்கள் தேசிய முன்னணி" என்ற கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உயர்நீதிமன் றத்திடம் போயிருக்கின்றார். அடிப்படை உரிமைகள் மீறல் மனு மூலம்! தேர்தல் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணையாளர் பொறுப் பேற்று முன்னெடுக்கையில், அதில் இடையில் உயர்நீதி மன்றம் தலையிட்டு நீதி செய்ய முன்வருமா, இத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் 27 நாள்களே இருக்கையில் அதற்கிடையில் இவ்விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு, நீதி பெற்றுத்தர அல்லது நீதியை நிலை நாட்ட வாய்ப்புகள் உண்டா என்பவையெல்லாம் இனித்தான் தெரியவரவேண்டும்.

எது, எப்படியோ, இத்தகைய தேர்தல் குளறுபடிக ளுக்கு மத்தியில் விடயங்களைச் சீர்செய்ய முடியாத இக் கட்டு நிலைமை ஏற்பட்டமைக்குப் பிரதான காரணம் அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் முழு அளவில் நடை முறைப்படுத்தப்படாமைதான் என்பது சகலருக்கும் தெரிந்த விவகாரம்தான். இந்தக் காரணத்தால்தான் தமது தேர்தல் பிரசாரத்தின்போது அதற்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதித்தான் அரச மைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் இக்கட்டுகளைப் போட்டு, அதற்குத் தடை ஏற்படுத்திவந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அந்த 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடை முறைப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்னரே அரசமைப்புக் கவுன்ஸில் இயங்கத் தொடங்கியிருக்கும். அதன்மூலம் தேர்தல், பொலிஸ், நீதிச்சேவை, பொதுச் சேவை ஆகியவற்றைக் கண்காணித்து வழிநடத்துவதற்கு, அரசுத் தலைமையில் தங்கியிராத சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படத் தொடங்கியிருக்கும். அவற்றினால் தேர்தலும், பொலிஸ் நடவடிக்கைகளும், பொதுச்சேவைச் செயற்பாடுகளும் கூட சுதந்திரமாக சுயாதீனமாக கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்டும் நிலை ஏற்பட்டிருக்கும். தேர்தல் பிரசாரத்துக்கு அரசுத் தலைமை அல்லது அதிகாரத் தரப்பு அரச சொத்துகளையும் பொலிஸ் துறையையும் தனக்கு வசதியான சார்பான முறையில் பயன்படுத்தி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டே எழுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

எல்லாம், அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்துகொண்ட எதேச்சாதிகாரப் போக்கின் விளைவால் வந்த விபரீதங்கள்தான்.........!

Tuesday, December 29, 2009

தமிழ்மக்களை திசைமாற்ற முனையும் தீய சக்திகள்!!

இப்போதய காலமானது தமிழ்மக்களை பொறுத்தவரையில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலமாகவே கருதப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பின்னடைவின் பின்னர் யார் வழிகாட்டுவதென்பது தெரிந்துகொள்ள முடியாதுள்ளது. இந்த நிலையில் யாரை நம்புவது? யாரை நம்பாமல் இருப்பது? தமிழ்மக்கள் அனைவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பவற்றில் தெளிவின்மையே காணப்படுகிறது.

இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நிற்பவர்களோ ஏராளம்! 'சாத்தான் வேதமோதுவது' போல பலர் தமிழ்மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இதிலே தமிழ்மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய போர் என்னவென்றால் இவற்றையெல்லாம் பாகுபடுத்தி இனம்காணுவதே ஆகும். இவ்வேளைதான் ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தாக வேண்டும். இதிலே நிதானம் தவறும் பட்சத்தில் இத்தனை காலம் போராடிவந்த 'தேசியம்' அடிபட்டு சுக்குநூறாகி விடும்.

தமிழ்மக்களின் நெருக்கடியை மிக உச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பது எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலாகும். இதிலே யாரை ஆதரிக்கவேண்டும்? யாரை ஆதரிக்க கூடாது? யார் முதல் எதிரி? இப்படியான பல கேள்விகள் தமிழ்மக்களை குழப்பி எடுக்கின்றது. இத்தனைக்கும் ஆலோசனைகூறி வழி காட்டுவதற்கு எவருக்கு உரிமையுண்டு? என்பதுதான் பிரதான கேள்வியாகும். இதற்கான பதிலை கண்டறிந்து கொண்டால் யாவும் சுலபமாகிவிடும்.

ஆழ் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு மிதக்கும் ஒரு சிறு கட்டை தென்பட்டால் அதுவே அவனின் உயிர்காக்கும் தெய்வமாகும் என்பது போல, இன்றைய நிலையில், 'விலை போகா தலைமை' கற்றுக்கொடுத்த பாடத்திற்கமைய துடுப்பாக கருதவேண்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அதிலும், பிழை சரிகளுக்கப்பால் இன்று வரை மகிந்தவின் வலையில் சிக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய தேவை சுயநிர்ணயத்தையும் தாயக தன்னாட்சியையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழ்மக்களுக்கும் உண்டு.

சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், விதிவிலக்குகள் ஒருபோதும் எடுத்துக்காட்டுகளாக அமைய மாட்டாது.
ஒன்றுமட்டும் நிச்சயமாகக் கூறலாம், இலங்கை அரசின் எந்த ஆசை வார்த்தைகளுக்குமோ, மிரட்டலுக்குமோ எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைந்துவிடாது என உறுதியாக நம்பலாம். ஏனெனில், அசையக்கூடிய எத்தனையோ இடங்களை கூட்டமைப்பினர் தாண்டி வந்துவிட்டனர். கடந்தவைகளை விட இனி கடக்க இருப்பவை சுலபமானது.

இவைகளிடையே, தமிழ்விரோத சக்திகள்(சாத்தான்) வேதமோத புறப்பட்டிருப்பதை அவதானிக்க வேண்டும். தமிழ்மக்களுக்கு துரும்பாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சேறு பூசி தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட்டால் இலங்கை அரசு கண்ட பல கால கனவு நனவாகி விடும் என 'தமிழர் விரோதிகள்' எண்ணுகின்றார்கள். அதற்கான ஊதுகுழலாக ஊடகங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதில் மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் இரா. சம்பந்தனுக்கு சேறுபூச முற்பட்ட செய்திகளை ஊடகங்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.அவர் வெளியிட்ட கருத்தானது எங்கே, எச்சந்தர்ப்பத்திலே வெளியிடப்பட்டதென்ற ஆதாரம் எதுவும் இல்லாமல் மொட்டையாக அவர்மேல் சேறு பூசியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. புலிகளின் தலைமைகளிடம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சம்பந்தனுக்கான ஆணையும் உரிமையும் உள்ளது. அதைப் புலிகள் நிராகரித்திருக்கலாம் அதில் நியாயமும் இருக்கலாம். ஆனால் சொல்லவதற்கு உரிமை இருந்ததை மறுக்க முடியாது.

தன்னிட்சையாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக சம்பந்தன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்காக எதிர்வரும் காலங்களில் மக்களால் தூக்கி எறியப்படுவார் என்று தீர்க்கதரிசனம் கூறும் ஊடகங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், திருக்கோணமலை மக்கள் மிக நிதானமாக அரசியல் முடிவுகளை எடுத்து வந்தார்கள் என்பது வரலாறு. இந்த அரசியல் அலைகளில் அடித்துச் செல்லாதவாறு மிகத்தெளிவாக மக்கள் இருக்கின்றார்கள். இதைப்பற்றி ஊடகங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

'அவல் கிடைத்துவிட்டது' என்பதற்காக சுயநல நோக்கங்களுக்காக ஊடகங்கள் செய்தி வெளியிடுவது முறையாகாது. அதன் பின் விளைவுகள் யாது? செய்தியால் யார் யாருக்கு நன்மை? இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே எப்படியான தாக்கத்தை கொடுக்கும்? என்பவை பற்றி தெளிவாக தூர நோக்குடனும், தேசிய கடமைப்பாட்டுடனும் சிந்திக்க வேண்டிய தேவை ஊடகங்களுக்கு நிறையவே உண்டு. அதற்காக உண்மையை மறைக்க வேண்டுமென்பதல்ல! அதில் மெய்ப்பொருள் காணவேண்டும் என்பது தான் அறிவாகும்.

ஒரு மனிதனுக்கு சுயமாக சிந்திக்க, கருத்து வழங்க பூரண சுதந்திரமுண்டு. அது ஒருவரின் தனிக்கருத்தாகும். அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதுவே, ஒரு ஸ்தாபனத்தின் அல்லது ஒரு அமைப்பின் கருத்தாக மாற்றுவதற்கு திணித்தாலோ, முயன்றாலோ அதுபற்றி சிலாசிப்பதற்கு ஜனநாயகரீதியாக எவருக்கும் உரிமையுண்டு. அதுபோல என்றோ நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி செயலாளர் நாயகம் சம்பந்தன் கூறிய கருத்தை காலம் கடந்தபின் அரங்கேற்ற நினைப்பது எதோ ஒரு பின்னணியைக் கொண்டதாக இருப்பதை உணரலாம். கூட்டமைப்பை உடைத்துவிட்டால் தமிழரின் ஒற்றுமையை மேலும் உடைத்துவிடலாம் என பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கும் 'மகிந்த கொம்பனிக்கு' துணைபோகாமல் ஒவ்வொருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு தரவு, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 'வாழ்தலுக்கான அரசியல்' செய்யவில்லை என்பதை உணர வேண்டும். பல பெரிய கல்விமான்களையும், தொழிலதிபர்களையும் பெரும்பான்மையாக உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வெறுமனே 'சோற்றுக்கு' வந்தவர்கள் அல்ல. மற்றவர்கள் போல் சொகுசு வாழ்வில் தங்களையும் மாற்றியிருந்திருக்கலாம்.

G.L. பீரீஸ் தொடங்கி S.P. திசாநாயக்கா வரையில் அரசின் வயிற்றினுள் கரைந்துவிட்ட நிலையில் எவருடைய அச்சுறுத்தலுமின்றிய இந்த நிலையில் இதுவரை அரசுடன் தம்மை கரைத்துக்கொள்ளாது, தமிழ்மக்களின் நலன்கருதியே ஜனாதிபதித் தேர்தல் பற்றிய முடிவு அமையும் என்று மிகத்தெளிவாக கூறிநிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது சேறுபூச எந்தத்தமிழ் மகனும் எண்ணக்கூடாது.

உதாரணத்துக்கு, சுயநலத்திற்காக அரசுக்கு விலைபோய் இன்று தமிழ்மக்கள் மத்தியில் மதிப்போடு உலாவரும் 'அரை அவியல்' கல்விமான்களும், மழைக்குக் கூட பாடசாலையில் ஒதுங்காத அரசியல் கனவான்கள் மத்தியில், அனுபவத்திலும், அறிவிலும், அகவையிலும் முதிர்ந்த நிலையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பலரில் ஒருவரான இரா. சம்பந்தன் அரசுபக்கம் வருவதாக சிறு சமிக்ஞை கொடுத்திருந்தால் 'மகிந்த கொம்பனிக்கு' எப்படி இருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தால் உண்மை விளங்கும். துணை ஜனாதிபதி பதவி கிடைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'ஒருவன் எது செய்கின்றான்' என்று பார்ப்பதை விட எத்தனை வசதிகள் கிடைத்தபோதும் சுயநலம் கருதாது எதைச் செய்யாமல் இருக்கிறான் என்பதைத்தான் முக்கியமாக அவதானிக்க வேண்டும். அதுவே, தமிழ்மக்களுக்காக தம்மை பல விதத்திலும் அர்ப்பணித்து நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானம் எடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும். அது நல்ல முடிவாக அமையும். இவற்றிக்கிடையே, அவர்கள் பற்றிய அவதூறுக்கோ, சந்தேகத்திற்கிடமான பார்வைகளுக்கோ தமிழ்மக்கள் இடம் கொடுக்கலாகாது. இதில் தெளிவாக இருந்தால் 'மகிந்த கொம்பனிக்கு' மட்டுமல்ல ' உடனிருந்தே கொல்லும்' துரோகிகளுக்கும் இது சாவு மணியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமையே பலம்,வாழ்க தமிழ்

கனகசபை தேவகடாட்சம்
திருக்கோணமலை

அமைச்சர் சந்திரசேகரனின் கயிறு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் விடுத்திருக்கும் ஓர் அறிக்கை நகைப்புக்கிடமானதாக அமைந்திருக்கின்றது.

தமிழர் தரப்புகளிடையே ஓர் அவசர கலந்துரையாடலுக்கான முயற்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முன்னெடுக்க வேண்டும் என்ற சாரப்பட ஒரு கோரிக்கையை முன்வைத்து, அத்தரப்போடு சேர்ந்து செயற்பட அழைப்பு விடுப்பவர் போல அந்த அறிக்கையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார் சந்திரசேகரன்.

"தற்போதைய உடனடிப் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், வடக்கு கிழக்கு, மலையக, முஸ்லிம் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு பற்றித் தொலை நோக்கோடு, எமது கோரிக்கைகளைத் தெளிவாக முன் வைக்கவேண்டிய அவசியமும் இக்கால கட்டத்தின் அவசரத் தேவையாகும். இதற்கான அவசர பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை அமைக்க சம்பந்தன் முன் வந்தால் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு என்ற ரீதியில் நாமும் அவருடன் கைகோர்க்க வேண்டியது எமது கடமையாகின்றது." என்று குறிப்பிட்டிருக்கின்றார் சந்திரசேகரன்.

".........., அவசரமாகத் தமிழ்த் தலைமைகள் ஓரிடத்தில் அமர்ந்து பேசவேண்டியது காலத்தின் கட்டாயமும் வரலாற்றின் நிர்ப்பந்தமுமாகும். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதில் கொண்டு, தமது அரசியல் கடமையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி தயாராக இருக்கின்றது.

"அனைத்துச் சிறுபான்மை அமைப்புகளும் அணி வகுத்து ஒரு சக்தியாக மாறினால் எதிர்கால சரித்தி ரத்தை நாமே உருவாக்குவோம். இந்தக் காலகட்டத்தில் நாம் தவறு விட்டால் எமது தலைவிதியை யாரோ எழுதி விட்டுப் போய்விடுவார்கள்." என்றும் மிகுந்த கவலையோடு(?) குறிப்பிட்டிருக்கின்றார் அமைச்சர் சந்திரசேகரன்.

அனைத்துச் சிறுபான்மை இனங்களும் ஓர் அணியில் ஐக்கியமாகிச் செயற்படுவது பற்றிய அமைச்சர் சந்திரசேகரனின் அறைகூவல் கேட்க வாசிக்க இனிமையாகத்தன் இருக்கின்றது.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையே ஆதரிப்பது என்ற தமதும் தமது கட்சியினதும் இறுதியான உறுதியான முடிவைக் கடந்த 19 ஆம் திகதி எடுப்பதற்கு முன்னர், இத்தகைய அழைப்பை அவர் விடுத்திருந்தால் அதன் அர்த்தமும் தாற்பரியமும் வேறாக இருந்திருக்கும்.

அதைவிடுத்து, தாம் ஒருபக்கம் அணிசேர்வதை உறுதிப்படுத்தி, இறுதி செய்துவிட்டு, பின்னர் எல்லாத் தமிழர் தரப்புகளையும் ஓர் அணிக்குள் கொண்டுவரு வது பற்றி அவர் பிரபலாபித்தால் அதன் அர்த்தம் என்ன? தாம் சேர்ந்திருக்கும் அணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை அவர் முன்னெடுக்கின்றார் என்பதுதானே அர்த்தம்...........? அதற்கு ஏன் சிறுபான்மைத் தரப்புகளின் ஐக்கியம் என்று பொய் முலாம் பூச முற்பட வேண்டும்? தாம் இப்போது உறுதிப்படுத்தியிருக்கும் அணியின் வழிகாட்டிகள், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உங்கள் வழியில் எங்களுடன் இழுத்து வந்து சேருங்கள்!" என்று இட்ட கட்டளையையா இப்படி "சிறுபான்மைத் தரப்புகளை இணைக்கும் முயற்சி" என்ற பெயரில் ஒப்பேற்றி நிறைவுசெய்ய முயல்கிறார் அமைச்சர் சந்திரசேகரன்.

"வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொள்வதோ, விரும்பியபடி எவர் எவருக்கும் வாக்களிப்பதோ அல்லது வெல்ல முடியாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதோ நமது வாக்குப் பலத்தை விரயமாக்குவதாக அமையுமே தவிர, தமிழ் மக்களுக்கு எந்தப் பிரதிபலனையும் ஏற்படுத்தப் போவதில்லை." என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

அப்படியானால் இத் தேர்தலில்வெல்லப்போகின் றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று கணிப் பிட்டுத்தான் அதற்காகத்தான் அவர் பக்கம் தமது நிலையை அவர் உறுதிப்படுத்தினாரா? அப்படியானால் தங்களின் கட்சியின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக இரு பிர தான கட்சிகளின் வேட்பாளர்களுடனும் பேசுகின்றோம் என இதுவரை பத்திரிகை அறிக்கைகளை விட்டு, பேரம் பேசுபவர் போல காலத்தை இழுத்தடித்து அவர் நடத்தியது வெறும் பம்மாத்து நாடகம்தான் என்பதை அவரே ஒப்புக்கொள்கின்றாரா?
"வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது" குறித்துச் சிந்திக்காமல்
"சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெல்லமுடியும் என்ற நிலைப்பாட்டைப் பிரதான வேட்பாளர்களுக்கு ஏற்படுத்தி, வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக சிறுபான்மைத் தரப்பி னரை மாற்றிக்கொண்டு" அதனடிப்படையில் விட யத்தை அணுகுவது பற்றிச் சிந்திப்பதே உண்மையான தலைமைத்துவத்துவமும் வழிகாட்டலுமாகும்.

அந்த வலிமையைப் பெறும் வாய்ப்பை ஏற்கனவே அணி சேர்ந்து, சீரழிப்பதில் பங்குகொண்டு உறுதிப் படுத்திய பின்னர், தமது வழிக்கு வருமாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு "ஐக்கிய முயற்சியின்" பெயரால் அவர் அழைப்பு விடுப்பது, "வால் அறுந்த நரி ஒன்று ஏனைய நரிகளைப் பார்த்து நரிகள் வாலை வெட்டினால்தான் அழகாக இருக்கும்! என்று கூறுவது" போலல்லவா உள்ளது........?

வாக்குகளைப் பிரிப்பதுதான் பல வேட்பாளர்களின் திட்டம்!

இலங்கையின் தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆம் திகதி நடைபெற்றவுள்ளது. கடந்த 17ஆம் திகதி வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட பின்னர் ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்தே 22 வேட்பாளர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இந்தத் தேர்தல் பல்வேறு விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்த ஐ.தே.க. முதல்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் பொதுவேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. அத்துடன் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்தத் தேர்தல் நெருக்கமான போட்டியைக் கொண்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் பலம் பொருந்தியவர்களாக இருப்பதனால் இந்தத் தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் என்ற வகையில் இந்தத் தேர்தல் முடிவு இன்னொரு கட்டத்துக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.அதாவது இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி வேட்பாளர் எவரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறத்தவறினால் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ண வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் பல குழப்பங்கள் காணப்படுவதால் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ணும் நிலை ஏற்படுவது ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்கப் போவதில்லை.இது இலங்கையின் தேர்தல் முறையைப் பொறுத்தவரையில் புதியதொரு விடயமாகவே இருக்கும்.ஏனெனில் இதுவரையில் இரண்டாவது விருப்புரிமை வாக்குகளை எண்ணும் நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அத்துடன் இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் அதிகபட்சமாக 13 வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். 1999இலும், 2005இலும் மட்டுமே 13வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். குறைந்தபட்சமாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டது 1988இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதாகும். ஆனால் அடுத்த வருடம் நடக்கப் போகும் தேர்தலில் 22வேட்பாளகள் களமிறங்கியிருப்பது முக்கியமான விடயம்.

பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அல்லது சரத் பொன்சேகா இவர்களில் எவராவது ஒருவரே இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகிறார். இது இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் போட்டியிடுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாக்குகளைப் பிரிப்பது. அடுத்தது எந்த அணிக்கும் தாம் சார்ந்த அணியின் வாக்குகள் கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கம்.

பொதுவாகப் பார்க்கும்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்து விடக் கூடாதெனக் கருதுவோர் சார்பிலும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க விரும்பாத ஐ.தே.கவினர், ஜே.வி.பியினரின் வாக்குகள் மஹிந்தவுக்கு கிடைத்து விடாத வகையிலும் இரண்டு தரப்பையும் ஆதரிக்க விரும்பாதவர்கள் தமது வாக்குகளை யாருக்குப் போடலாம் என்று எடை போட்டுப் பார்த்து விடக் கூடாதெனக் கருதும் வகையிலும் இந்தப் போட்டியில் அதிகளவானோர் குதித்துள்ளனர்.

அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் பிரதான இரு வேட்பாளர்களைத் தவிர ஏனையோர் கட்டுப்பணத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்வார்களா? அல்லது ஆறு இலக்க வாக்குகளையாவது பெறுவார்களா? என்பது சந்தேகம்தான்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரிதும் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. காரணம் 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய நிலையொன்று இப்போதுதான் தோன்றியிருக்கிறது. போரில் கிடைத்த வெற்றியை மூலத னமாக்கிக்கொண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் இந்தப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது. குறிப்பாக வடக்கில் மட்டும் பத்து இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். அதுபோன்றே கிழக்கிலும் 2007ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி 40 வீதமானோர் தமிழர்கள் என்பதால் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் பத்து இலட்சம் வாக்காளர்களில் குறைந்தது 4 இலட்சம் பேர் தமிழர்களாகவே இருக்கின்றனர். இந்த வகையில் வடக்கிலும் கிழக்கிலுமாக குறைந்தது 13 இலட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். இதைவிட கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் வாழும் தமிழ் வாக்காளர்களும் இருக்கின்றனர். எனவே தமிழ் வாக்காளர்களின் முழுமையான ஆதரவை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் பிரதான வேட்பாளர்கள் தொடர்பாகத் தமிழ் மக்களிடம் சாதகமான கருத்து இல்லை.


தமிழ்மக்களின் வெறுப்பையும் அதிருப்தியையும் இவர்கள் நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்கள் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

இந்தநிலையில் தமிழர் தரப்பில் இருந்து சிவாஜிலிங்கம் சுயேச்சையாகப் போட்டியிட எடுத்துள்ள முடிவு இரு வேட்பாளர்களின் மீதும் வெறுப்புக் கொண்ட தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் நோக்கிலானதாக இருக்கலாம்.

அதுபோலவே பிரதான வேட்பாளர்கள் மீது வெறுப்புற்ற முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்கவும் மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலியாஸ் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். உயர்கல்வித்துறை பிரதி அமைச்சராக இருந்த மயோன் முஸ்தபாவும் சுயேச்சையாக் களமிறங்கியுள்ளார். இவர் ஐ.தே.கவில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவியவர். ஐ.தே.க. ஆதரவு முஸ்லிம் வாக்குகளை இவர் உடைத்து விடுவார். இவரைவிட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் இஸ்மாயில் என்பவர் போட்டியிடுகிறார்.

மொத்தம் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் முஸ்லிம் வாக்குகள் கணிசமானளவுக்குப் பிரியலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் பிரதான முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இரு பிரதான வேட்பாளர்களுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை விக்கிரமபாகு கருணாரத்னவும் சிறுபான்மையின மக்களின் வாக்குளைப் பிரிக்கக் கூடிய ஒருவராகவே இருக்கிறார். இவ்வாறு சிறுபான்மையினரின வாக்குகளைப் பிரிப்பதற்கு வேட்பாளர்கள் பலர் களத்தில் இருக்கின்ற நிலையில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கும் அதிகளவிலானோர் களமிறங்கியுள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முதற்சுற்றில் மட்டுமே இந்த உதிரி வேட்பாளர்களால் பிரதான வேட்பாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இரண்டாவது சுற்று எண்ணப்படும்போது உதிரி வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளின் இரண்டாவது விருப்பத்தெரிவு முக்கியத்துவம் பெறுகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கப் போவதாக முக்கியமான கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது அந்தப் பதவிக்கான கடைசித் தேர்தலாகக் கூட அமையலாம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 19 இலட்சத்து 55 ஆயிரத்து 312 பேரிடம் தேசிய அடையாள அட்டை கிடையாது. இது யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் கணிப்பு. ஆனால் உரிய அடையாள ஆவணமின்றித் தேர்லில் வாக்களிக்க முடியாது என்ற கட்டுப்பாடு இறுக்கமாகப் பேணப்படவுள்ளதால் பெருமளவு மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது போகலாம்.

குறிப்பாக வன்னித் தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வீத வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை கிடையாது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவு பேரிடம் இல்லை என்பது பற்றிய தரவுகளே தேர்தல் திணைக்களத்திடம் இல்லை. அதுபோலவே கிழக்கில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரிடம் உரிய அடையாள அட்டை கிடையாது. எனினும் விசேட அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியாது. குறிப்பாக இந்தத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது போகாலாம். அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற நிலையே காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கின்ற போதும் வாக்களிப்பதற்கு ஆயிரத்துக்கும் குறைவானோரே விண்ணப்பித்துள்ளனர். இது இந்தத் தேர்தலில் தமிழர்கள் அதிக நாட்டம் காட்டவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ்மக்களின் தெரிவு, முடிவு எப்படி இருக்கப் போகிறது என்று சர்வதேசம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் பல முக்கிய முடிவுகளுக்குக் காரணமாக அமையலாம் என்ற கருத்தையும் மறுப்பதிற்கில்லை.


நன்றி: "இன்போ தமிழ்" இணையம்

Monday, December 28, 2009

தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே தமிழருக்கு பயன்தர மாட்டா!

"இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து முன்னர் பேசப்பட்டபோது, அதற்கு நீதியரசர் விக்னேஸ்வரனின் பெயரும் சில தரப்புகளால் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பில் அவரது நிலைப்பாட்டை அவரைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழர்கள் இன்று தமது அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றியுள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி, அவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளினால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.

நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டில் இருந்து சில அன்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் சார்பில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான்கூறிய பதில் இதுதான்:

1. ஒரு தமிழ் மகன் தனித்துவமாக ஜனாதிபதித் தேர்தலில் நின்று, எல்லாத் தமிழ்ப் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும் எமக்குக் கிட்டப் போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகின்றார். தனக்கு விரும்பியதைத்தான் அவர் செய்யப் போகின்றார்.

2. நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதே நிலைதான்.

3. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் கையாலாகாத் தன்மைøயையே வெளிக்காட்டும். மேலும் தங்களின் ஜனநாயக உரித்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் அது எடுத்துக்காட்டும்.

4. இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள், தமிழ் மக்களின் பின்னணியில் ஆயுதம் தாங்கியோர் உறுதுணையாக இருக்கின்றனர் என்ற எண்ணத்தில், தமது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில், நடைபெற்றிருக்கலாம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதே வழிமுறைகளைப் பின்பற்றுதல் சரிதானா என்று யோசிக்க வேண்டும்.

5. இந்த நிலையில் பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்துத் தமிழ் மக்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள் என்னவென்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது.

இப்படி நான் அவர்களுக்குப் பதில் கூறினேன்.

இன்று இதைத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உணர்ந்து செய்வதையிட்டு மகிழ்வுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும். கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்தவேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழிகாட்டலுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவருக்கு வாக்களித்தாலோ, தேர்தலைப் பகிஷ்கரித்தாலோ எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்தவர்களாகவே அது அமையும்.

எங்கள் கைகளில் "வாக்கு" என்ற பலத்த ஆயுதம் ஒன்று இருப்பதை நாங்கள் மறத்தலாகாது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலைநாட்டுத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளை வழிநடத்தியபோது "வேலைநிறுத்தம்" என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார். முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் உரித்துகளைப் பெற்றெடுக்க மத ரீதியாகத் தமக்கு உதவி செய்யக்கூடிய நாடுகள் இருப்பதை ஒரு ஆயுதமாகவே பாவித்தனர். ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது இருக்கின்றனர். அப்படி இருப்பினும், தமிழ் மக்கள் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிலையில் இருக்கின்றார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது. ஜனநாயக ரீதியில் பார்த்தால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமை ஒரு பெரிய ஆயுதம். உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமானால் வரும் "பொதுத் தேர்தலில்" இரு பெரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசு அமைக்கத் தமிழ் மக்கள் உதவுவர்.

சென்ற தடவை 22 பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவானார்கள். இம்முறை அந்த ஒற்றுமையை நாம் இழந்து விடுவோமானால் எங்களின் ஒரே ஆயுதத்தையும் நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம். தமிழ் மக்களின் ஒற்றுமை இந்த நாட்டின் ஜாதகத்தைக் கணிக்க உதவும். பதவியில் இருக்கும் ஒருவரைக் கீழே இறக்கவும், இன்னொருவரை மேலே ஏற்றவும் தமிழ்ப் பேசும் மக்களால் முடியும் என்பதைச் சிலர் அறிந்திருக்கின்றபடியால், தமிழ்ப் பேசும் மக்களிடையே வேற்றுமைகளை விதைக்க அவர்கள் பாடுபடுகின்றனர். எங்களின் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூறமுடியும். என்றார் நீதியரசர் ஸி.வி. விக்னேஸ்வரன்.


சமூகத் தலைவர்களும் தலையிட்டு வழிகாட்ட வேண்டிய விவகாரம்


சமூகத்துக்குப் பேரிடர் வருகின்ற போது, சமூகம் தவறாக வழி நடத்தப்படுகின்ற சூழ்நிலை எழுகின்ற போது, அவ் விடயங்களில் தலையிட்டு வழிகாட்டவேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்களுக்கு உண்டு. அத்தகைய ஓர் அரும்பணியை காலத்தின் தேவை கருதியும் அவசரம் கருதியும் தாமாக ஆற்ற முன்வந்திருக்கின்றார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஸி.வி.விக்னேஸ்வரன்.

தமது நீதித்துறைப் பணியின் போது பக்கம் கோடாது ஆட்சித் தரப்பின் அதிகார அழுத்தங்களுக்கு இடம் தராது மசிந்து கொடுக்காது பட்டவர்த்தனமாகத் தீர்ப்புக்களைக் கூறி, கருத்துக்களையும் யதார்த்த உண்மைகளையும் வெளிப்படையாக எடுத்தியம்பி, தம் தனித்துவச்சிறப்பை அவ்வப்போது வெளிப்படுத்திய நீதியரசர் அவர் என்ற மாண்பைப் பெற்றுக்கொண்டவர் விக்னேஸ்வரன். ஈழத் தமிழர்களின் உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதிக்கான ஆயுதப் போராட்டம், ஆயுதப்பலாத்காரம் மூலமாகவே மௌனிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் தமிழினம் அரசியல் அந்தகார சூழலில் சிக்கித் தவித்து நிற்கின்றது.

இப்போது இருக்கக்கூடிய பற்றுக்கோட்டை அவதானமாகப் பற்றிப்பிடித்து, தன்னைத்தேற்றி நிமிர்ந்து எழ வேண்டிய தமிழினத்தை, சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்கள் குழப்பியடித்து, மீள முடியாப் பேரவலத்துக்குள் நிரந்தரமாக ஆழ்த்தி விடுவார்களோ என்ற அச்சம் பெரும் பீதி இப்போது சூழ்ந்து நிற்கின்றது.

தாம் இதுவரை அரசியல் கட்சி எதனையும் சாராத வராயினும், சமூகப் பொறுப்புடைய சமுதாயத் தலைவர் என்ற முறையில், இந்த அரசியல் இக்கட்டு நிலையில் நீதியையும், நியாயத்தையும், உண்மையையும், யதார்த்தத்தையும் தமது மக்களுக்கு எடுத்தியம்பி வழிகாட்ட வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளது என்பதை உணர்ந்து நீதியரசர் விக்னேஸ்வரன் அந்தப் பொறுப்பை ஆற்ற முன்வந்திருக்கின்றார்.

ஆயுதபலம் மௌனிக்கப்பட்டிருக்கும் இச்சமயத்தில் ஜனநாயகத் தேர்தலில் "வாக்கு" என்ற ஒரே பலத்தை எப்படித் தமக்குச் சார்பாகப் பயன்படுத்துவது என்பதை ஆழ்ந்து நோக்கி அவதானித்து, சாதுரியக் காய் நகர்த்தல் மூலம் முன்னெடுத்துத் தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதே தமிழர்கள் இன்று செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும். வரலாற்றுத் திருப்புமுனையில் இந்த மிக முக்கிய தீர்மானத்தை எக்காரணம் கொண்டும் தவிர்க்க இயலாத நிலையில் மேற்கொள்ள வேண்டியவர்களாகத் தமிழர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தனித் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிப்பது போன்ற பயனற்ற வேலைகள் குறித்து சிலர் சிலாகிக்கின்றனர்.

ஒற்றுமை என்ற தமிழர்களின் ஒரே பலத்தைச்சிதறடிப்பதற்காக சில தற்குறிகள் உள்ளேயிருந்தே குழிபறிக்க எத்தனிக்கின்றன. தமிழர்களின் ஒற்றுமை தமக்குப் பாதிப்பைத் தரும் என்று கருதும் சில தரப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் வேற்றுமைகளை விதைக்கின்றன.
இத்தகைய பேராபத்துகளுக்குத் தமிழர்கள் இடமளிப்பது விபரீதமான விளைவுகளைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தி விடும் என்பதால், அவற்றைப் பார்த்திருக்க இயலாது என்ற நிலைமையில், தமது சமூகக் கடமையை ஆற்ற முன்வந்திருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

தனித் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது, தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோருவது, தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்குக் கட்டுப்படாது தான்தோன்றித்தனமாகவும், எதேச்சையாகவும், பொறுப்பற்றும், எல்லாவற்றையும் குழப்பியடிக்கும் விதத்திலும் நடப்பது போன்ற கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம் என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பகிரங்கமாக எடுத்துக் கூற முன்வந்திருக்கின்றார் நீதியரசர் விக்னேஸ்வரன்.

அரசியல் சேற்றில் கால் வைக்கிறோமே என்று அருவருக்காமல், சமுதாயத்தை வழிநடத்தும் சமூகப்பணி இந்தச் சமயத்தில் தமது தோள் மீதும் சுமத்தப்பட்டிருக் கின்றது என்பதை உணர்ந்து, அதனடிப்படையில் செயலாற்ற முன்வந்த நீதியரசர் விக்னேஸ்வரன் மெச்சப்பட வேண்டியவர்.

அவரின் வழியைப் பின்பற்றி சமூகத்துக்கு நீதி, நியாயம், உண்மைகளை எடுத்துரைத்து வழிகாட்ட மேலும் பல சமுதாயத் தலைவர்கள் முன்வர வேண்டும்.

"ஆயிரம் மலர்கள் மலரட்டுமே!'' என்பதுபோல தமி ழர்களின் இன்றைய அவல நிலையில் அவர்களை வழிப்படுத்துவதற்கான ஆயிரம் விக்னேஸ்வரன்கள் உருவாகட்டுமே.! சமூக, சமுதாயத் தலைவர்கள் ஒவ்வொருவரும் தமது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு சரியான வழியைக் காட்ட முன்வரவேண்டும். இந்த வகையில் மதிப்புக்குரிய முன்னாள் சிவில் அதிகாரி தேவநேசன் நேசையாவும் காத்திரமான கருத்துகளை முன்வைத்திருக்கின்றார். தமிழர்களைச் சரியாக வழிப்படுத்துவதற்கு இந்த ஆலோசனைகள் நன்கு உதவும் என்று நம்பலாம்.

Friday, December 25, 2009

பிராந்திய நலன்களுக்குள் அமுங்கிப்போகுமா? ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் விவகாரம்!


இலங்கைத்தீவு சுதந்திரமடைந்து அறுபத்தியொரு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அங்கு வாழும் சிறுபான்மையினங்களுக்கான உரிமைகளை வழங்க சிங்கள பெரும்பான்மை இனம் மறுப்பதால் நீண்டகாலமாக இனப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த இன முரண்பாட்டின் விளைவாக சிறுபான்மையினங்கள் முக்கியமாக தமிழ் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று வரைக்கும் 1,50,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் அங்கவீனர்களாகியுள்ளனர். பலர் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் பெற்றோரினை இழந்து அநாதை விடுதிகளில் வாழ்கின்றனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பிடங்களும், இயற்கை வளங்களும் உருக்குலைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கைச்சட்டங்கள் தமிழ்மக்கள் மீது மனித உரிமை மீறல்களை ஊக்குவிப்பதற்கு வழிவகுத்துள்ளனவே தவிர அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்கவில்லை.

ஓர் இறைமையுள்ள நாட்டில் வாழும் மனிதன் அல்லது ஒரு இனம் அந்நாட்டில் கௌரவமாக, அரசியல் உரிமையுடன் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகளை வழங்குவது அந்நாட்டின் கடமை. அவ்வாறில்லாமல் அவர்களது வாழ்வியல் உரிமை மறுக்கப்படுமானால், மறுக்கப்பட்ட தங்களது உரிமையை பெற்றுக்கொள்ள முயலும்போது, அவர்களின் உரிமைகளை வழங்க மறுத்து மிக மோசமான முறையில் அம்மக்கள் அழிக்கப்படுவதை தடுக்க இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக இன அழிப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்ட மனித உரிமைச்சாசனம் ஜெனிவா ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றது.

இலங்கை இந்த மனித உரிமை சாசனத்தில் கையெழுத்திட்டபோதும், பல தசாப்தங்களாக இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டு வந்த பல மனித உரிமை மீறல்களை ஜ.நா வெறுமனே சம்பிரதாயத்திற்காகக் கண்டித்து, மனித உரிமை மீறல் சாசனத்தை பின்பற்றுமாறு இலங்கை அரசிற்கு அறிவுரை வழங்கியதேயன்றி, சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட இனஅழிப்பு விடயங்கள் தொடர்பில் சிறுபான்மையினங்களை பாதுகாக்க ஜ.நா உட்பட சர்வதேச நாடுகள் எவ்வித முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை. அதேவேளை பல நாடுகளில் ஜ.நா சபை தலையிட்டு இன அழிப்புக்கு எதிராக தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இறுதியாக வன்னியில் நடந்த இன அழிப்பு விடயத்தை இலங்கையின் பாரிய மனித உரிமை மீறல் சம்பவமாக ஜ.நா உட்பட மேற்குலகங்கள் கவனத்தில் எடுத்ததானது 'சேடமிழுப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பதை போலவே' கருதவேண்டியுள்ளது. என்றாலும் அந்த மனித உரிமை மீறல் விடயமும் பிராந்திய இராணுவ, பொருளாதார நலன்களுக்குள் அமுங்கிப்போய்விடுமா? என்ற பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வன்னிப்பகுதியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது சிறிலங்காவின் இராணுவத்தாக்குதல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்தி செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது அமெரிக்கா. மேலும் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடாத்த வேண்டாம் என இலங்கை அரசை எச்சரித்தது. யாருடைய கருத்தையும் செவிமடுக்காத இலங்கை அரசாங்கம் கொத்துக்குண்டுகள், நச்சுவாயுக்கள் உட்பட போரில் தடைசெய்யப்பட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தி மிகப்பாரிய மனிதபேரழிவை நடாத்தி முடித்தது. மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

போர் முடிந்தவுடன் அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசின் திட்டமிட்ட மனிதப்படுகொலைக்கு எதிராக, ஜ.நா மனித உரிமைச்சபையில் கொண்டு வந்த சர்வதேச மனித உரிமை மீறல் குற்ற விசாரணைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்தியாவின் பரிபூரண எதிர்ப்பினால் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக இந்தியா பல நாடுகளின் ஆதரவை திரட்டி இலங்கைக்குச் சார்பாகச் செயற்பட்டது. ஏனெனில் மனித உரிமை மீறல் விடயம் விசாரணைக்குட்பட்டால் இலங்கை அரசுக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது தொடர்பில் இந்தியாவின் மீதும் குற்றச்சாட்டு எழும் வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தியா அவ்வாறு செயற்பட்டது.

1987ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ஜெ.ஆர். ஜெயவர்த்தனா மேற்குலகம் சார்ந்த அரசியல் போக்கை கடைப்பிடித்தார். இலங்கையிலிருந்து தனது பிடி தளர்ந்து போவதை உணர்ந்த இந்தியா, தனது பிடியை நிலைநிறுத்த முற்பட்டது. அந்த காலப்பகுதியில் 1987ம் ஆண்டு, இலங்கை இராணுவம் வடமராட்சி பிரதேசத்தின் மீது 'ஒப்பிறேசன் லிபறேசன்' என பெயரிட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதன் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இச்சமயத்தில் எல்லாம் 'பொதுமக்கள் போரில் அநியாயமாக கொல்லப்படுகின்றார்கள். பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை நிறுத்த வேண்டும்'; என இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்த சமயத்தில் இந்தியா, வடமராட்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக 150 படகுகளில்; நிவாரணங்களை அனுப்பியது. அவற்றை இலங்கை அரசு தனது கடற்பரப்பில் தடுத்ததுடன் 'தனது இறைமையை மீறும் செயல்'; என தெரிவித்தது. அப்படகுகளை திரும்பப் பெற்ற இந்தியா, விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை இடம்பெயர் முகாம்களில் போட்டு இலங்கையின் இறைமையைப் பற்றிப் பொருட்படுத்தாது செயற்பட்டு இலங்கையை அச்சுறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்தியா ஈழத்தமிழர்களிற்கு ஒரு தீர்வை பெற்றுத்தருவதாக, ஈழத்தமிழர் சார்பில் முழுப்பொறுப்பையும் ஏற்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செய்துகொண்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான எவ்வித உத்தரவாதத்தையும் பெற்றுத் தரவில்லை. அரசியல் அதிகாரமற்ற தீர்வு திட்டத்;தினை ஈழத்தமிழர்களின் மீது திணித்ததனால் இந்தியா - விடுதலைப்புலிகளக்கு இடையிலான போர் வெடித்தது.

இந்த முரண்பாட்டின் ஆரம்பத்தில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பத்திரிக்கைகளையும், வானொலிகளையும் தடைசெய்து தனது முதலாவது மனித உரிமை மீறலை பதிவு செய்தது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. மிக முக்கியமாக வியட்நாமில் நடைபெற்ற 'மைலாய்' படுகொலைக்கு ஒப்பானதாக சொல்லப்படும் வல்வைப்படுகொலை (இந்திய மைலாய்ப் படுகொலை), யாழ்வைத்தியசாலைப் படுகொலை, மட்டக்களப்பு பொதுச்சந்தைப் படுகொலை, சாவகச்சேரி சந்தைப் படுகொலை சம்பவம் போன்றவற்றுடன்; கொக்குவில் பொற்பதியில் பல பொதுமக்களை நடுவீதியில் படுக்கவைத்து இராணுவ டாங்கியை அவர்களின் மேல் ஏற்றி படுகொலை செய்ததும், பல கொடுமையான பாலியல் வல்லுறவுகளையும் செய்தது வரலாறு.

அதுமட்டுமில்லாமல் தற்போது இறுதியாக நடந்த போரில் கூடுதலான இராணுவத்தளபாடங்களையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கிய இந்தியா, ஒரு வகையில் இதுவரை காலமும் இலங்கைத் தமிழ் மக்களின் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசுக்கு அடுத்தபடியாக தமிழ்மக்களை அழித்த பெருமை இந்தியாவையே சாரும்.

தமிழகத் தமிழர்களின் பல தியாகப் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் குறிப்பாக முத்துக்குமார் மற்றும் அவரைப்போல பலர் தங்களை தீக்கு ஆகுதியாக்கி போரை நிறுத்த கோரிய போதும் இலங்கையின் இறையாண்மையில் தலையிட முடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டு, இலங்கை அரசை ஊக்குவித்த இந்திய காங்கிரஸ் அரசை ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் மறந்து விடமாட்டார்கள்.

தனது பிராந்திய நலனை கருத்தில் கொண்டு இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகின்றது. ஆனால் இலங்கை சீனா சார்ந்த போக்கையும் கடைப்பிடிக்கின்றது. இந்த சூழலில் தமிழ்மக்களின் விடயத்தை விடவும் தனது பிராந்திய நலன் தொடர்பான கரிசனையில், இலங்கையின் போக்கிற்குச் சார்பாகச் செயற்படுவதனூடாக இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. சிறை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை கையாள்வது தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டன. அத்துடன் பல சர்வதேச நாடுகளும் இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகித்துக் கொண்டிருந்தன. இந்த சமயத்தில் இந்தியா தனது காங்கிரஸ் கூட்டணித் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி சிறை அகதி முகாம்களின் பராமரிப்பு தொடர்பில் இலங்கைக்கு சார்பான அறிக்கையை வெளியிட்டது. இது போன்று தொடர்ந்து இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இலங்கைக்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்கள், உள்ளுரில் ஏற்படும் அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றது இந்தியா. எனவே இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் சீனா நிலைபெறுவதை தடுப்பதற்காகவும் மூதலீட்டிற்கான வாய்ப்பைப் பெறுவதற்காகவுமே தமிழர்களின் அழிவைப்பற்றிக்கூட கவலைப்படாமல் இலங்கைக்குச் சார்பாக செயற்படுகின்றது.தற்போதைய சிறிலங்கா ஜனாதிபதித் தேர்லில் போரை நடாத்திய பிரதம கர்த்தாக்கள் இருவரும் எதிரெதிரே போட்டியிடுகின்றனர். 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதைப்போல இரு வேட்பாளர்களிற்கிடையே உள்ள போட்டியானது இந்த போர்க்குற்றங்களைச் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றது. ஜ.நா மற்றும் சர்வதேசத்தின் தொடர்புடன் சரணடைய வந்த போராளிகளைக் கொன்ற விவகாரத்தில் ஜ.நா விளக்கம் கோரியிருப்பதும், சனல்-04 வெளியிட்ட காணொளி ஆவணத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருப்பது போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாகும். என்றாலும் மீண்டும் இவ்விவகாரம் மனித உரிமைச்சபையில்; குற்ற விசாரணைத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் இந்தியாவின் பிராந்திய நலன் என்ற விடயம் எந்த வகையில் தாக்கத்தைச் செலுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது பிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முரண்பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில்; மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றமும் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டையும் வைத்து அவதானிக்கும் போது பிராந்திய நலன்களுக்குள் ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் விடயம் அமுங்கிப்போய்விடுமா? என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவித்துள்ளது. என்றாலும் ஜரோப்பிய நாடுகளும் ஜ.நா மனித உரிமை செயலகமும் சர்வதேச பத்திரிக்கைகளும் மனித உரிமை மீறல் விடயம் தொடர்பில் ஒரே போக்கைக் கொண்டுள்ளது சற்று ஆறுதலைத்தருகின்ற விடயம்.

இதனால், மனித உரிமை மீறல் விடயத்தை கையில் எடுத்து நீதி கேட்பதே இலங்கையின் உண்மை முகத்ததைக் காட்டுவதற்காக ஈழத்தமிழர் முன்னால் தற்போது இருக்கும் ஒரேயொரு தலையாக கடமை. இந்த போர்க்குற்றமும், மனிதப்பேரவலமும் வெளிக்கொணரப்படுமானால் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசத்தில் நியாயப்படுத்தப்படும். இந்த ஒரு வாய்ப்பிற்காக தமிழ்மக்கள் முன்னிலைப்படுத்த வேண்டிய மனித உரிமை விடயங்களை பட்டியலிட்டு ஒரு முனைப்பில் செயற்படவேண்டும். அவற்றில் முக்கியமாக

• சிறை அகதி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் விடுதலையும் மீள்குடியமர்வும்
• படுகொலைகள் மீதான சர்வதேச நீதி விசாரணைகள்
• உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்கள், போர் நிறைவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்துள்ளதால் அவர்களை மீளகுடியேற அனுமதித்தல் (உதாரணமாக யாழ்குடா நாட்டில் வலிகாமம் வடக்கு, திருக்கோணமலையில் சம்பூர் பிரதேசம்)
• விடுதலைப்புலிகள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 11,000க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்தல்
• தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பகுதியில் நடைபெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படுதல்.
• தமிழ்மக்களின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை அரச பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தல்
• சிறுபான்மையினங்கள் மீதான மனித உரிமை மீறலை ஊக்குவிக்கும் சட்டமூலங்களை நீக்குதல்
• மக்களின் சுதந்திர நடமாட்டம்


டென்மார்க் கோப்பன்கேகனில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் ஏற்பட்;ட மனிதப்பேரழிவும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் பற்றிய புகைப்படக் கண்காட்சி, பிரித்தானியாவில் தமிழீழ மாணவர்களால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் மீதான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சிறையகதி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் முகாமில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இலங்கைத்தீவில் முப்பத்திமூன்று வருடகாலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களின் தொகுப்பு புத்தகம் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது போன்றன கடந்த வாரத்தில் இலங்கையின் மனித உரிமை மீறலை வெளிப்படுத்த நடாத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.

இப்படிப்பட்ட புறநிலையில்; புலம்பெயர்தமிழர்களும் குறிப்பாக தமிழக உணர்வாளர்களையும் ஒன்றிணைத்து ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டத்தினூடாக மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மீண்டும் ஜ.நா மனித உரிமை சபையில் இலங்கை மனித உரிமை மீறல் விடயம் விசாரணைக்கு வரும்போது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவளிக்க முடியாத அரசியல் சூழலை இந்தியாவில் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

தமிழ்மக்கள் மீதான மனித உரிமை மீறலை வெளிக்கொண்டுவருவதுடன் மனித பேரவலத்திற்குக் காரணமானவர்கள் மீது சர்வதேச நீதி விசாரணை நடைபெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச சமூகத்தின் முன் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது மக்களின் மனித அழிவுகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ள தற்போதைய சூழலில் சிறப்பாக செயற்படவேண்டியது அவசியமானதாகும். எனவே புலம்பெயர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் எத்தனையோ கஷ்டங்களையும், சுமைகளையும தாங்கி பல தியாகங்களைச் செய்து விட்டீர்கள் அதேபோல் தமிழக மக்களும் பல போராட்டங்களையும் தியாகங்களையும் செய்து விட்டனர். மீண்டும் ஒருமுறை சகலரும் ஒன்று சேர்ந்து தொடர் விழிப்புணர்வுப் போராட்டங்களைச் செய்து, அழிந்த தமிழினத்திற்கு நீதி கிடைப்பதற்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த உறுதி எடுத்து உள்ளத்தால் இணைவோம்.

Thursday, December 24, 2009

மெல்ல மெல்ல அரங்கேறுகிறது தடுப்பு முகாம் நிலைமைகள் - விடுவிக்கப்பட்டவர் பிரிட்டனில் அதிர்ச்சித் தகவல்


இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்று அங்கிருந்த நிலைமைகளை வெளிப்படுத்துகிறார் பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.

தமிழ்வாணி ஞானக்குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக மெனிக்பாம் என்ற இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக்கணக்காக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களைப் பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பத்தினரால் பார்க்க முடிந்ததில்லை என்றும் தெரிவிக்கிறார் தமிழ்வாணி ஞானக்குமார் பிரிட்டன் எஸெக்ஸைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானக்குமார் கடந்த செப்ரெம்பர் மாதமே தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார். ஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் கொள்ளும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்று அவர் பயந்தார்.

சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் தமிழ்வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள் எனத்தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை இலங்கை அரசும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. அத்தோடு முகாம்களில் இருந்து மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அது முற்றாக நிராகரிக்கிறது.ஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அதனால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நாவின் பேச்சாளர் குற்றஞ் சாட்டுகின்றார்.விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மூன்று இலட்சத் திற்கு அதிகமான மக்கள் வதை முகாம்கள் என்று வர்ணிக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடனேயே மருத்துவப் பணியாளர் தமிழ்வாணி ஞானக்குமாரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த மருத்துவமனையில் பணிபுரிந்த தமிழ்வாணி இலங்கை அரச படைகள் முன்னேறி வந்த போது மேற்கொண்ட கடும் ஷெல் தாக்குதல்களால் காயமடைந்து உயிருக்குப் போராடிய பல நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளார்.

தடுப்பு முகாம்களில் மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்ற நிலையில் தமிழ்வாணியின் குற்றச்சாட்டு கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்குப் புதிய ஊக்கத்தைக் கொடுக்கும்.சிங்போர்ட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உரையாடுகையில் அவர் இலங்கை அரசைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுகிறார். அவை வதைமுகாம்களாகத் தான் இருந்தன. அந்த வதை முகாம்கள் மிகக் கொடுமையானவை. அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. முட்கம்பி வேலிகளைத் தாண்டிச் செல்ல முடியாது. அவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள்.

தங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியோ தங்களுடைய உறவினர்களும் நண்பர்களுமாகப் பலர் காணாமல் போனது பற்றியோ தாங்கள் பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தப்படுவது பற்றியோ அம்மக்கள் வெளியே சொல்வதை அரசு விரும்பவில்லை. இவ்விடயங்கள் குறித்து யாரும் அறிந்து கொள்கின்றமையை அரசு விரும்பவில்லை. பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை. அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன். விருந்தினர்கள் வரும் பகுதி எமது முகாமிற்கு மறுபுறத்தில் இருந்தது. நாங்களோ முகாமின் மறுபுறத்தில் இருந்தோம். பெண்பிள்ளைகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்காக முன்புறமாக முட்கம்பி வேலி அருகில் வந்து காத்திருப்பார்கள். அவ்வேளை களில் அங்கு வரும் இராணுவ அதிகாரிகள் அப் பெண்பிள்ளைகளில் கைபோடுகின்றமையை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.

ஆனால், அந்தப் பெண்கள் இவற்றைப் பற்றிப் பின்னர் பேசுகின்றதேயில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் அங்கு நடந்தவைகளைப் பற்றிப் பேசினால் பின்னர் என்ன நடக்கும் என்று. இது அங்குள்ள எல்லோருக்கும் தெரியும். பெண்பிள்ளைகளுடன் இராணுவ அதிகாரிகள் சேட்டை விடுகின்றமையை அங்குள்ள ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர்.தமிழ்ப் பெண்கள் தாம் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையை ஒருபோதும் வெளியில் பேச விரும்புவதில்லை. அவர்கள் இது பற்றி வாயைத் திறக்க விரும்புவதில்லை. தமது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ததும் இராணுவ அதிகாரிகள் இப்பெண்களுக்கு உணவு மற்றும் பணம் கொடுத்து அனுப்புகின்றதை நான் அறிந்திருக்கிறேன். இந்த மக்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள். படையினரால் தாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத் தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தடவை அடுத்துள்ள முகாமுக்குச் செல்வதற்காக காத்திருந்த ஒரு வயதான நபரைப் படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியமையை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவாதம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வயதானவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்துத் தள்ளினான். அதே பகுதியில் சுட்டெரிக்கும் வெய்யிலில் மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; சில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சில சமயங்களில் வெள்ளை வான்கள் முகாமிற்குள் வரும். அதில் இளைஞர்களையும் யுவதிகளையும் அவர்கள் பிடித்துச் செல்வார்கள். வெள்ளைவான் இலங்கையில் ஒரு பயங்கரத்தை உருவாக்கியிருந்தது. கொலைக் கும்பல்களால் ஆயிரக்கணக் கானோர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பங்களுடன் இந்த வெள்ளை வான்களுக்கு நிறையச் சம்பந்தம் உண்டு.

விடுதலைப் புலிகளுடன் ஏதாவது தொடர்புகள் கொண்டிருந்தவர்களை தமது பெயர்களைக் கூறுமாறு படையினர் கேட்பார்கள். அவ்வாறானவர்களை அழைத்து விசாரிப்பார்கள். பின்னர் வெள்ளைவான் வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்று விடும். அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களை மக்கள் இன் னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வவுனியாவில் முகாமில் தன்னைக் கொண்டு வந்து தனக்கு முன் பின் அறியாதவர்களுடன் விட்டார்கள். முதல் இரண்டு மூன்று நாள்கள் முகாமில் நான் தனியாக இருந்தேன். முகாமைச் சுற்றி முட்கம்பி வேலியிடப்பட்டிருந்தது. இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும், என் பைகளைக் கீழே எறிந்து விட்டு நான் கதறி அழுதேன். அடுத்து என்ன நடைபெறும் என்று புரியாமலிருந்தது. அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது. முகாமில் முதல் சில நாள்கள் நான் எதையுமே உண்ணவில்லை. உணவை எங்கு போய் பெறுவது என்று தெரியாதிருந்தது. மலசலகூட வசதிகளும் குளிப்பதற்கான வசதிகளும் மிகவும் மோசமாக இருந்தன. தண்ணீரும் உணவும் மிகவும் பற்றாக்குறையாக இருந்தது. கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர்.

திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும். எனக்கு அது பெரும் அசௌகரியமாக இருந்தது. எனது கூடாரம் பொலிஸாரின் காவலரண் ஒன்றிற்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும்.

தமிழ்வாணி தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் அங்குள்ளவற்றிலேயே ஓரளவு பரவாயில்லாதது என்று சொல்லப்படுகிறது. அம்முகாமிலேயே மனிதர்கள் சீவிக்கக்கூடிய நிலை காணப்படவில்லை. உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான வேளைகளில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும். மலசலகூடங்களோ மிகப் பயங்கர மானவை. அங்கு கூட போதிய தண் ணீர் கிடையாது. அதனால் அவற்றைத் துப்பரவு செய்கின்றமை சாத்தியமில்லை. அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.

ஒருமுறை இரண்டு மூன்று நாள்கள் பெய்த மழையில் மலசலகூடக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன முழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலசலகூடக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்ல வேண்டும்.முகாம்களில் நடந்த முறைகேடுகள், பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் இலங்கை அரசு, எனினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.

அந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே பெருமளவு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று கூறும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ் விஜேசிங்க இந்தத் துஷ்பிரயோகங்கள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே மற்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார். அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், அவை கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார். சிப்பாய் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணிக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. அது இரு தரப்பினரும் மகிழ்ச்சிக்காக உறவு கொண்ட ஒரு சம்பவமாக இருக்கலாம் அல்லது, ஏதாவது தேவை கருதிய ஒரு பாலியல் உறவாகக் கூட இருக்கலாம்; அதுவும் இல்லாவிட்டால் பண்டைய கிரேக்கத் தத்துவங்கள் பற்றி அவர்கள் இரவு முழுவதும் விவாதித்தும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது என்று எகத்தாளமான பதில் சொல்கிறார் மனித உரிமைகள் அமைச்சுச் செயலாளர்.

இடம்பெயர் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக "கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை என மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.வவுனியா இடம்பெயர் முகாமில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம் பெயர் முகாம்களில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக அறிவிக்க வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வார இறுதி பத்திரிகையொன்றில் வவுனியா அகதி முகாமில் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தகவல்கள் நம்பகத் தன்மையற்றவை எனவும், கடந்த காலங்களிலும் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக் கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் இடம்பெயர் முகாம்களுக்கு விஜயம் செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் வேறு உள்நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருக்கு கடுமையான ஒழுக்க விதிகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். *

சமாதானத்தை நோக்கிச் செல்ல... வழி...?


இன்று நத்தார் தினம். சமாதானத்தின் தேவன் அவதரித்த நன்னாள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விடுதலையின்றித் தவிக்கும் மனுக்குலத்தின் ஆத்ம விடுதலைக்காகத் தம்மையே மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க வந்த கிறிஸ்து பிறந்த தினம்தான் இன்று.சமாதானத்துக்காக மானுட அமைதிக்காக தன் சொல்லாலும், செயலாலும், ஜீவனாலும் நற்பணி புரிந்த ஆண்டவர் அதற்காகவே தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார் என்பதே அவரது வாழ்வு காட்டும் சிறப்பாகும். ஆனால், இன்று சமாதானம் பூமியில் இருக்கின்றதா? எமது நாட்டில் இருக்கின்றதா? பூமியானது பாவத்தில் ஆழ்ந்துவிட்டது. இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் சமாதானம் இன்னும் எட்டாத தூரத்தில் இருக்கிறது.

போர் ஓய்ந்தபோதும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எனவே நிரந்தரத் தீர்வொன்று காணப்படவேண்டியது அவசியம் என்று யாழ்.ஆயர் அதிமேதகு தோமஸ் சவுந்தரநாயகம் கூறியிருப்பது இன்றைய நாளில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய தாகும்.

போரின் பயனாக நடந்த பிரச்சினைகள் இன்னும் முழுதும் தீர்க்கப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலை இன்னும் முடியவில்லை. அவர்கள் தம் இல்லங்களுக்கும் நிலபுலங்களுக்கும் திரும்பி நாளாந்த வாழ்வை மேற்கொள்ளும்போதுதான் அவர்கள் நிம்மதி அடைவார்கள்.

நாளாந்தம் அசுரவேகத்தில் ஏறிவரும் விலைவாசிகளும் அதனால் ஏற்படும் சிரமங் களும் பரந்து நிற்கும் வறுமையும், வாழ்வதற்குத் தகுந்த இல்லிடமற்ற நிலைமையும், வேலைவாய்ப்பு இன்றிய நிலையும் இன்று மக்களை வாட்டி நிற்கின்றன. இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அரசினுடையதும் ஏனைய உதவி நிறுவனங்களினதும் கடமை யாகும் என்று ஆயர் கூறுவதை அரசியல்வாதி களும், தொண்டு நிறுவனங்களும் மனதில் இருத்தவேண்டியது அவசியம்.

இறைமகன் இயேசு காட்டிய சமாதான வழியில் மற்ற மனிதர்களையும், இனத்தையும் தம்மைப்போல் மாண்புடன் மதிக்கின்ற வகையில் செயற்படுகின்ற மேலான மனப்பாங்கும் மனப்பக்குவமும் இல்லாதவரை, எமது இலங்கைத் தீவின் தலைவர்களுக்கு வராத வரையில், தேவன் காட்டிய சமாதான வாழ்வு எமக்குக் கிட்டப்போவதில்லை.

இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்த போர் ஓய்ந்த காலத்தின் முதலாவது நத்தாராக, யேசு பிரானின் பிறப்பு நாளாக இன்றைய அமைகிறது. அதனால் சமூகத்துக்கு ஆண்டவர் சமாதானத்தைக் கொண்டுவந்த இந்நாளில், சமாதானம் குறித்த அவாவும், வேண்டுதலும் மக்கள் மனங்களில் என்றும் இல்லாதவாறு மேலோங்கி நிற்கின்றன.

நாட்டில் அரசுத் தலைவரைத் தெரிவு செய்யும் காலமும் இவ்வேளை வந்துள்ளதால், தமிழர்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளை, தமது பிறப்புரிமைகளைப் பிசகின்றிப் பெறு வதற்கு வாய்ப்புக் கிடைக்க வழிதிறக்குமோ என்ற கேள்வியும் உயர்ந்து நிற்கிறது.

அதனை நிர்ணயிக்க வேண்டிய, முடிவு செய்யவேண்டிய பெரும் பொறுப்பும் சிங்கள மக்களைவிட தமிழர்கள் நமக்கே வந்துசேரும் புறச்சூழல் ஒன்று என்றுமில்லாதவாறு ""புதி தாகச்'' சேர்ந்துள்ளது. இதனைப் புத்திக்கூர்மையுடன் தக்கவாறு பயன்படுத்துவதற்கு, சமாதானப் பிரபுவான யேசு பிறந்த இந்நாளில் மனதிற்கொண்டு செயற்படுவோமாக.