Monday, November 30, 2009

ராஜபக்சவின் கொக்கரிப்பு தமிழ்மக்களிற்கு சொல்லும் செய்தி என்ன?

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ராஜபக்ச அரசு இணங்கியிருப்பதான செய்திகள் வெளிவந்தன. ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அடிப்படையாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தனியான ஒரு அலகாக மாற்றப்படுவது அவசியம் எனினும் 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய (ராஜீவ்-ஜெயவர்த்தனா) ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டு இந்த இரு மாகாணங்களும் 2006 ம் ஆண்டு ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் ஜே.வி.பியின் முன்னெடுப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளைத் திருப்பதிப்படுத்தி விடமுடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். அத்துடன் அவற்றை நிறைவேற்று ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் நிரந்தரமாக இணைக்குமாறு இந்தியா மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியிருந்தது.

இந்தியாவின் இத்தகைய அரசியல் நகர்வுகளின் பின்னணியில் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான கருத்து ஏற்க முடியாது எனவும் 'வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள்' என்று கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயக கோட்பாடு தனித்தே புலிகளின் கோட்பாடு என்ற வரையறைக்குள் சுருக்க நினைக்கின்றார் மகிந்த. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி மட்டுமே என எண்ணியிருந்த அவருக்கு தற்போது ஏற்பட்ட எதிர்முனைப் போட்டி வலுவால் ஏற்பட்ட மனக்குழப்பத்தின் வெளிப்பாடாகவே புலிகளின் கோட்பாடே வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என குறிப்பிட்டதாகவே உணரவேண்டியுள்ளது. மற்றும் சிங்கள் பேரினவாதக் கருத்துக்களை விதைப்பதனூடாகத் தனக்கான வாக்குவங்கி நிரப்பலுக்கான ஒரு வழியாகவும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவை பெற முயன்றுள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர்களின் பூர்வீக தாயகப் பிரதேசமாக வடக்கு கிழக்கு இருந்ததென்பதும் ஆங்கிலேயரின் ஆட்சி இலகுபடுத்தலுக்காகவே பிரிக்கப்பட்டதென்பதும் வரலாறு. அதுமட்டுமல்லாமல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தின் எல்லைகளுடன் சிங்களப் பிரதேசங்களை புதிதாக இணைத்து கிழக்கில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை உயர்த்தியதும் வரலாறே. இவ்வாறு தமிழ் மக்களிற்கு எதிராக பல அரசியல் துஷ்பிரயோகங்களையும், தாயக கோட்பாட்டுச் சிதைவுகளையும் சிங்களம் மேற்கொண்டதன் எதிர்வினைதான் இலங்கையின் இனப்பிரச்சனை கூர்மையடைந்தது பின்னர் ஆயுதப் போராட்ட வடிவமாக மாற்றமடைந்தது என்பதை ராஜபக்ச மறந்து பேசியுள்ளார்.

குறிப்பாக 1985 ம் ஆண்டு நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தைக் கோட்பாடுகளில் தமிழர் தேசிய இனம், தமிழருக்கென்று தாயகம் உண்டு, தமிழர்கள் தங்களை தாங்களே ஆளும் சுயநிர்ணய உரிமையுடையவர்கள் போன்ற கோரிக்கைகள் ஆயுதம் தரித்த அமைப்புகளான விடுதலைப்புலிகள், ரெலோ, ஈரோஸ், ஈ.பி,ஆர்.எல்.எப், புளொட். போன்றவற்றுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அமைப்புக்களினாலும் பொது அரசியல் கோட்பாடாக முன்வைக்கப்பட்டன.

மேலும் 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியத்தரப்பால் வலியுறுத்தப்பட்டபோது, வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை கிழக்கு மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானித்தல் எனக் குறிப்பிடப்பட்ட சரத்து தொடர்பாக தமிழர் தரப்பினால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனை பிற்காலத்தில் இணைத்து தருவதாக இந்தியத்தரப்பால் உறுதி மொழி வழங்கப்பட்டதன் பின்னனியிலேயே ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் இருசாராரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தையும் மீறி, கிழக்கு மக்களிடம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தாமலே நீதிமன்ற செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கு தாயக நிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்த இந்திய - இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான நிலப்பரப்பில் வடக்கு கிழக்கு என்ற கருத்தியல் ரீதியான பிரிவினையை தோற்றுவிப்பதற்கு அடிகோலியது.

2002 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தாயகம், தேசியம,; சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தனர். எனவே தாயக கோட்பாடானது தமிழ்தேசியம் பற்றி பேசும் தமிழ் அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவே இருக்கின்றது. இது போன்றவை எல்லாவற்றையும் விடுத்து ராஜபக்சவின் கருத்து புலிகளின் அரசியல் கோட்பாடாகவும் காலாவதியான விவகாரமாகவும் குறிப்பிட்டிருப்பது இலங்கை அரசியல் தீர்வை நோக்கிய நகர்தலை மீண்டும் கேள்விக் குறியாக்கியுள்ளது. ஏனெனில் அண்மையில் ஒன்று கூடிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி என்பன திம்புக் கோட்பாட்டு அடிப்படையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்ற கருத்தெருமைப்பாடானது தாயகக் கோரிக்கை என்பது வெறுமனே புலிகளின் கோரிக்கை என்று கூறி புறந்தள்ளிவிட முடியாத ஒன்று என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது.

அதேவேளை எப்போதும் புலிகளின் இராணுவ மேலாதிக்க நிலை இருந்தபோது சிங்களத் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதும் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்த்துவைக்க வேண்டும் என்று சொல்வதும் அரசியல் பிரச்சனைகளின் அடிப்படைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு பேசலாம் என்பதும் வழமை. தற்போதைய புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப்பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல சிங்கள அரசியல்த்தலைமைகள் பிதற்றத்தொடங்கியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளும் சரியாக சிங்கள அரசியல் சக்கதிகளின் மனநிலையை அறிந்து தங்களது சுயநல அரசியல் இருப்பை விடுத்து, இலங்கைச் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சரியான அரசியல் கொள்கைத் தீர்மானங்களிற்குள் ஒன்றுபட்டு நகர்வதே இலங்கைத்தீவின் சிறுபான்மை இனங்களின் பாதுக்காப்பிற்கு உறுதுணையாக இருக்கும். இன்று தமிழ் மக்களிற்கு நடப்பது நாளை முஸ்லீம் மக்களிற்கோ அன்றி மலையகத்தமிழ்; மக்களிற்கோ நடக்காது என்றோ உறுதிபடத் தெரிவித்துவிட முடியாது.

தற்போது புலிகளின் ஆயுத போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் புலிகளின் அழிவுடன் வடக்கு கிழக்கு இணைப்பும் செத்துவிட்டது என்ற ராஜபக்சவின் கூற்றின் மூலம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வென்பது தமிழ் பேசும் மக்களின் ஆயுதப் போராட்ட வலிமையிலேயே தங்கியுள்ளது என்பதை சிங்களம் மீண்டும் ஒருமுறை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

"ஏற்றுக்கொள்ளக்கூடிய மதிப்பார்ந்த அரசியல் தீர்வு": தமிழ் கட்சிகள் அர்த்தப்படுத்துவது எதனை?

ஏற்றுக்கொள்ளக்கூடிய - அமைதியான - மதிப்பார்ந்த வழிகள் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் கூட்டாக ஈடுபடுவது என இலங்கையின் தமிழ் கட்சிகள் கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

சுவிட்சர்லாண்ட், சூரிச் நகரில் அண்மையில் நடைபெற்ற தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சில பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருப்பதைக் குறிப்பிடும் அதேசமயம், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகின்றோம்” என அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்:

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகிய நாங்கள் - ஒருமனதாக - எமக்கு இடையிலான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், எமது முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தவுமான வரலாற்று வாய்ப்பை - ஒரு பொது மேடையை - இந்தக் கூட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மூன்று வகையான தெளிவான பிரிவுகளை - தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள் ஆகியோரை - உள்ளடக்கியோரே 'தமிழ் பேசும் மக்கள்' என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எமது தமிழ் கட்சிகள் இடையில் காணப்படும் வேறுபாடுகள், தனி அடையாளங்கள், கருத்துக்கள் நோக்கங்கள் என்பவற்றை நாம் ஏற்றுக்கொள்ளுகின்றோம்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கருத்து ஒருமைப்பாடும் வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு நாம் வலியுறுத்துகின்றோம்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய - அமைதியான - மதிப்பார்ந்த வழிகள் ஊடாக - நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் அனைத்து சமூகத்தினரையும் ஈடுபடுத்துவதில் முனைப்புடன் செயல்படுவோம்.
மேலும் - இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து நடத்தவதற்கும் அதில் ஈடுபாடு காட்டுவதற்கும் நாம் இணங்குகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவிலிருந்து இயங்கும் 'தமிழர் தகவல் மையம்' [Tamil Information Centre - TIC] என்ற அமைப்பே தமிழ்க் கட்சிகள் இடையிலான இந்தக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது.

அநேகமாக - இலங்கைத் தீவில் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளினதும் பிரதிநிதிகள் இந்தக் கலந்தரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் மிகவும் முக்கியமான இன்றைய திருப்புமுனைக் காலகட்டத்தில் தமிழ் கட்சிகள் எடுத்துவைத்திருக்கும் உருப்படியான ஒரு முதற்படி தான்.

இருந்தாலும் - இந்தத் தொடர் கலந்துரையாடல் செல்லக் கூடிய திசை பற்றி மாறுபட்ட உணர்வுகளே தமிழர் மத்தியில் நிலவுகின்றது.

"ஏற்றுக்கொள்ளக் கூடிய மதிப்பார்ந்த அரசியல் தீர்வு" என இந்தக் கட்சிகள் எதனை அர்த்தப்படுத்துகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப - காலத்துக் ஒவ்வாத கற்பனைகளை வளர்க்காமல் - உலக மற்றும் பிராந்திய ஓட்டத்திற்கு ஏற்ப - நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றை நோக்கி நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.

ஆனாலும் - அந்த "ஏற்றுக்கொள்ளக் கூடிய" அரசியல் தீர்வு என்பது - தமிழரது தாயகக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்துவதாகவோ, அல்லது அவர்களது தன்னாட்சி உரிமையை விட்டுக்கொடுப்பதாகவோ இருந்துவிடக் கூடாது என்பதுவே தமிழ் தேசிய இனத்தின் எதிர்பார்ப்பாகும்.

தேர்தலில் போட்டியிட விடாமல் பொன்சேகாவை தடுக்கும் எத்தனம்

இன்னும் ஒன்பது வார காலத்தில் நடைபெறப் போகின்ற இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இரா ணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா களம் இறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது. இதை அவரே நேற்றுப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

ஒருபுறம் வெற்றிலைச் சின்னத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. மறுபுறம் அன்னம் சின்னத்தில் ஜெனரல் பொன்சேகா.

"சபாஷ்! சரியான போட்டி" என்று சொல்லும் அளவுக்கு இருதரப்பு நேரடி மோதல் இப்போதே சூடு பிடித்து விட்டது.

எனினும், ஜெனரல் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை சுருக்கு இன்னும் நீங்கியபா டில்லை என்பதை விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றமையும் கவனிக்கத்தக்கது.

ஜெனரல் பொன்சேகா கடந்த இரு வாரங்களுக்கு முன் னர் வரை முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி பதவியில் இருந்தவர். இப்பதவி நிலை இவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் முன்னர் வெளி யிடப்பட்டிருந்தது. அதாவது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு நியமனம் பெற்ற பதவியில் இருந்தார் அவர்.

அத்தகையவர் தமது பதவியிலிருந்து விலகும்போது அதுபற்றிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும். அப்படி அவரது பதவி விலகல் அரசுத் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் அதுபற்றிய அறிவித்தல் வெளியானால் மட்டுமே அவர் சட்டரீதியாகப் பதவி விலகியவர் என ஒப்புக்கொள்ளப்பட முடியும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரை, அவரது பதவி விலகல் கடிதம் தொடர்பில், அவரது பதவி விலகலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்கின்றார் என்ற விடயம் எழுத்துமூலம் ஜனாதிபதியின் செயலாளரால் அவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது உண் மைதான். ஆனால் அதன் அடிப்படையிலான வர்த்தமானிப் பிரகடனம் அதாவது முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பென்சேகா விலகுகின்றார் என்ற அறிவிப்பு இன்னும் வெளிப்படுத்தப்பட வேயில்லை.
அதற்கான காரணம் என்னவென்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

வழமையாக, முப்படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி போன்ற பதவிகளில் இருப்போரின் பதவி விலகல் தொடர்பில், அவர்கள் பதவியிலிருந்து விலகும்போதே அந்த ஓரிரு நாள்களிலேயே அதுபற்றிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகிவிடும். அதனோடு சேர்த்து அப்பதவிக்கான புதியவரின் நியமனமும் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். அதுவே ஒருவரின் பதவி ஏற்புக்கும் மற்றவரின் பதவி விலகலுக் குமான சட்ட பூர்வ ஆவணமுமாகும்.

ஆனால், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகி, இரண்டு வாரங்களாகியும் இன்னும், அவர் பதவி விலகியமையை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிப்படுத் தப்படாமல் இருக்கின்றமை பலத்த சந்தேத்தை ஏற்படுத் துவதாக இருப்பதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஜெனரல் சரத் பொன்சேகா, மேற்படி முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி பதவியில் இருந்து விலகும் கடிதத்தையே ஒப்படைத்தார். பதவியை இராஜிநாமாச் செய்யும் கடிதத்தை அல்ல என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

அப்படி அவர் தமது பதவியை இராஜிநாமாச் செய்யும் அல்லது படைத்துறை சேவையை விட்டு இராஜிநாமாச் செய்து விலகும் ஆவணத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்து, அந்தக் கடிதத்தை அல்லது ஆவணத்தைத் தாம் ஏற்றுக்கொள்கின்றார் என ஜனாதிபதி எழுத்து மூலம் அவருக்குப் பதிலளித்திருப்பாராயின், அத்துடன் விடயம் முற்றுப்பெற்றிருக்கும். அத்தகைய நிலையில் சரத் பொன்சேகா சட்டரீதியாக பதவியை நீங்கியவராகி விட்டிருப்பார். அவர் ஜனாதிபதித் தேர்தலிலோ, அல்லது பிற தேர்தலிகளிலோ போட்டியிடுகின்றமைக்குத் தடையாக அப்பதவி நிலை விவகாரம் வராது.

ஆனால், ஜெனரல் பொன்சேகாவோ முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி பதவியில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பதவிக்காலம் முடிய முன்னர், பதவி விலகி ஓய்வுபெறுவதற்கே இப்போது விண்ணப்பித்துள்ளார். இராஜிநாமாவுக்கு அல்ல. அத்தகைய சூழலில் அவரது முற்கூட்டிய ஓய்வுக்குச் சம்மதம் அளிக்கும் விதத்தில் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் வழங்கிய ஒப்புதல் கடிதம் மட்டுமே அவரின் படைத்துறைச் சேவை விலகலை உறுதிப்படுத்தும் சட்ட ரீதியான ஆவணமாகிவிடாது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் பிரதியே அதற்கான உரிய ஆவணமாக இருக்கமுடியும்.

ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகி இரண்டு வாரங்களாகியும் வெளியிடப்படாமல் இழுபறிப்படும் வர்த்தமானி அறிவித்தல், அடுத்த 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்ன ரும் வெளியாகாமல் போகுமானால், ஜெனரல் பொன் சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் கனவு, வெறும் பகல் கனவாகவே முடிந்துவிடும்.
இப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமல் இழுபடுவதன் பின்னால், அரசுத் தலைமையின் சூழ்ச்சித் திட்டம் ஏதும் இருக்குமோ என்பது இனித்தான் தெரியவர வேண்டும்.

Saturday, November 28, 2009

தவறான கருத்தியல் கணிப்பீடு

தென்னிலங்கை அரசியல் களம் போகின்ற போக்கைப் பார்த்தால் இந்தத் தேசத்தில் இனப்பிரச்சினை என்ற ஒரு தேசியப் பிணக்கு உள்ளது என்ற பிரக்ஞையே தென் னிலங்கைக்கு இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகின்றது.

இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புக ளுள் ஒரு பிரிவினர் தமிழர்கள்.

இந்தப் பிரச்சினை சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் உணர்வெழுச்சி பல்வேறு வடிவங்களில் காலங்கா லமாக வெளிப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் காந்தியப் பாதையில் அஹிம்சை முறையில் அறவழிப்பட்ட நெறி யில் அது முன்னெடுக்கப்பட்டது. ஆனால் காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் அந்த எழுச்சி உணர்வுகளை ஆரம்பம் முதலே தமது அதிகாரப்பலத்தைக் கொண்டு நசுக்கிவந்தன.

இன ரீதியான அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுப் பெறுபேறாகப் பிறப்பெடுத்த தமிழ்த் தேசிய எழுச்சியானது ஒருபுறம் கருத்தியல் சிந்தனையாகவும் மறுபுறம் திண்ணிய அரசியல் இயக்கமாகவும் இரு பரிமாணங்களைக் கொண் டதாக விரிந்தது.

சுதந்திரம், தர்மம், கௌரவம், நீதி முறைமை என்ற ஆழ மான அரசியல் அபிலாஷைகளைக் கொண்ட இந்தக் கருத்தி யலை நிலைநிறுத்துவதற்கான தேசிய எழுச்சி, அஹிம்சை முறையிலே முன்னெடுக்கப்பட்டபோது, அரச அதிகாரத் தின் ஆயுத பலத்தால் பலாத்கார வழியில் அடக்கப் பட்டதே தவிர, அந்த எழுச்சியின் அடித்தளமாக விளங்கிய நியாயம் செவிமடுக்கப்படவேயில்லை.

அதன் விளைவாக இந்த எழுச்சியின் வெளிப்பாடான அரசியல் இயக்கம், ஆயுதம் தாங்கிய போராட்ட நிலையை நோக்கி, ஆட்சித் தரப்பினாலேயே நெட்டித்தள்ளப்பட்டது. அஹிம்சை வழிப் போராட்டங்கள் ஆயுத முறையில் முறியடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டமையால், தமிழ் இளைஞர்கள் நியாயம் வேண்டி கௌரவ வாழ்வு தேடி ஆயுதம் ஏந்த வேண்டியவர்களானார்கள்.

நீண்டதும், நெருக்கடிகள் நிறைந்ததும், பேரழிவுக ளைத் தந்ததுமான இந்த ஆயுத வரலாற்றுப் போராட்டமும் தொடர்ச்சியான கொடும் யுத்தங்களையும், சொல்லொணாத் துயரங்களையும், கற்பனைக்கே எட்டாத நாசங்களையும் தமிழினத்துக்குத் தந்த நிலையில், அரச இராணுவ வல் லாதிக்கத்தினால் ஆயுதமுனையில் இப்போது அடக்கப்பட் டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியினதும், கருத்தியல் சிந்தனையி னதும் விளைவாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட் டத்தைத் தனது இராணுவ மேலாதிக்கம் மூலம் கொழும்பு வெற்றி கொண்டிருக்கின்றது என்பது உண்மைதான்.

ஆனால், அதன் காரணமாக, தமிழ்த் தேசிய எழுச்சியும் அதனடிப்படையில் எழுந்த கருத்தியல் சிந்தனையும், தமது வாழ்க்கை முறை தொடர்பான தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளும் அடங்கிப்போய்விட்டன அடக்கப்பட்டு விட்டன என்று அர்த்தமல்ல.

இந்த விடயங்களின் விளைவாகத் தோற்றம்பெற்ற ஆயுதப் போராட்டத்திலேயே அடக்குமுறை ரீதியாக கொழும்பு வென்றிருக்கின்றதே தவிர, தமிழினத்தின் ஆன்மாவைப் பற்றிப் பீடித்து நிற்கின்ற கௌரவ வாழ்வுக்கான அவர்களின் சிந்தனை எண்ணம் நோக்கம் அபிலாஷை அடக்கப் படவில்லை.

ஆனால், தனது இந்த இராணுவ வெற்றியை அதிகார மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய "சாதனையை' வேறு விதமாக அர்த்தம் கொள்கின்றது கொழும்பு.

இந்த இராணுவ வெற்றி மூலம் தமிழர்களின் தேசிய எழுச்சி பற்றிய உணர்வு அடியோடு மழுங்கடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுவிட்டது. உரிமை, சுதந்திரம், நியாய மான அபிலாஷைகள் வேண்டித் தமிழினத்தின் எண்ணக் கருவில் தோன்றிய கருத்தியலை அடக்கி, ஒடுக்கி முறியடித்து, நசுக்கி விட்டோம் என்றே தென்னிலங்கை கருது கின்றது; இறுமாப்புக் கொள்கிறது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம். பல நூற்றாண்டுகளாக ஏன் சரித்திர காலம் தொட்டே தமிழர்களே அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்து வந் தனர்.

தமது தாயக மண்ணின் தனித்துவத்தைப் பேணுவதற் கான தமிழர்களின் சிரத்தை இன்று, நேற்று புதிதாக வெளிப்பட்ட ஒன்றல்ல. இலங்கைத் தீவு ஆங்கிலேய கால னித்துவப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, நாட்டின் ஆட்சி அதிகாரம், பெரும்பான்மையினர் என்ற முறையில் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்ட காலம் தொட்டே, இந்தத் தாயகத் தனித்துவத்தைப் பாதுகாத்துப் பேணுவதற்காகத் தமிழர்களும் அவர்களின் தலைவர்களும் தளராது போராடியே வந்திருக்கின்றனர். இறுதியாக, இந்திய அழுத் தத்தின் பேரில் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்ட கொழும்பு அரசு கூட, வடக்கும், கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற கோட் பாட்டை அந்த ஒப்பந்த வாசகத்தின் முன்னுரையில் ஏற்று இணங்கியது.

ஆனால், ஆரம்பத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் நேரடியாகவும், இப்போது நீதிமன்ற நடை முறை மற்றும் ஏற்பாடுகள் மூலம் சட்ட ரீதியாகவும் தமிழர் தாயகத்தை வடக்கு, கிழக்கு எனத் துண்டாடியுள்ளது கொழும்பு.

"இந்த வடக்கு கிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம்; முடிந்துபோன கருத்தியல்; புலிகளுடன் சேர்ந்து அழிந்துபோன சித்தாந்தம். அதை மீண் டும் தோண்டி எடுத்து இங்கு அரசியல் நடத்த முடியாது'' என வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார் இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆக, புலிகள் இயக்கத்தின் சிதைவுடன், தமிழரின் தேசிய எழுச்சி தொடர்பான கருத்தியலும் சிதைந்து புதைக்கப் பட்டு விட்டதாகவே கொழும்பு கருதுகின்றது. அதைத்தான் நாட்டின் தலைவர் இப்படிப் பிரதிபலித்திருக்கின்றார்.

மிகத் தவறான கணிப்பீடு இது. அதனை வரலாறு உணர்த்தும் வேளை வராமல் போகாது.

Friday, November 27, 2009

ஐயன்கன்குளம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களில் ஐயன்கன்குளம் கிராமமும் ஒன்றாகும். இக்கிரமத்தில் சிறார்களின் கல்வியில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஒரே ஒரு பாடசாலையான மு.ஐயன்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரம் 11 வரையான மாணவர்களுக்கே கல்வி கற்பித்து வருகின்றது. மருத்துவ வசதிகள் அற்ற இக்கிராமத்தில் நிலையை உணர்ந்த இப்பாடசாலை மாணவர்கள் அருகிலுள்ள ஆலங்குளம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு உதவுவதும் முதலுதவி தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதும் வழமையானதே.

அவ்வாறே 2007 நவம்பர் 27ஆம் நாளும் முற்பகல் 11மணியளவில் பாடசாலையிலிருந்து ஆலங்குளம் மருத்துவமனைக்கு நோயாளர் காவுவண்டியில் சென்ற இவர்கள் சுமார் 150 மீற்றர் தூரம் சென்று கொண்டிருக்கும் போது சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்படட் கிளைமோர்த் தாக்குதலில் 06 மாணவர்களும் சுகாதாரத்தொண்டர்கள் இருவர், சாரதி என 09 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இரு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களது உடலையும் படுகாயமடைந்தவர்களையும் அப்பகுதி மக்கள் உடனடியாக உழவு இயந்திரம் மூலம் மல்லாவி பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

இவ்வாறனா பாடசாலை மாணவர்கள் மீது சிறிலாங்கா அரசாங்கம் மேற்கொண்ட படுகொலை சம்பவம் இதுதான் முதற்தடவையல்ல. ஆனால் இன்று வரை எந்த படை அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ இக்குற்றச்செயல்களுக்காக யாராலும் தண்டிக்கப்படவில்லை. மாறாக பதவி உயர்வுகளே அவ்வாறு குற்றம் புரிந்தவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதுதான் தமிழ் மக்கள் மீது சிங்கள படைகள் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான வரலாறாக உள்ளது.

இச்சம்ப்பவத்த்தில் கொல்லப்பட்ட்டவர்களது விபரம்
01. நாகரட்ணம் மதிகரன் 15 மாணவன்
02. நாகரட்ணம் பிரதீபா 16 மாணவி
03. நித்தியானந்தம் நிதர்சனா 13 மாணவி
04. சந்திரசேகரம் டிறோசா 17 மாணவி
05. கருணாகரன் கௌசிகா 15 மாணவி
06. சண்முகவேல் சகுந்தலாதேவி 17 மாணவி
07. அற்புதராசா அஜித்நாத் 22 சுகாதாரத் தொண்டர்
08. வைரமுத்து கிருஸ்ணவேணி 25 சுகாதாரத் தொண்டர்
09. காந்தன் சாரதி

இச்சம்ப்பவத்த்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. சந்திரசேகரம் யசிதா 15 மாணவி
02. தேவராசா உதயராணி 16 மாணவி

எங்களுக்காக நீங்கள்.........!


அன்பான உறவுகளே....!
எமதருமை நண்பர்களே...!!
எங்கிருக்கிறீர்கள்...?
எவரையும் காணவில்லை..?
சிங்களவனின் சிரிப்பொலி மட்டுமே
எம்மைச் சுற்றி...!
என்ன ஆயிற்று...?
எப்படி இதெல்லாம்..?
இன்றாவது நீங்கள் வருவீர்கள் என்று
நாமிங்கே தவமிருக்கிறோம்...!

உங்கள் மலர்களுக்காக...
உங்கள் நெய்விளக்கிற்காக...
உங்கள் அன்பான அரவணைப்பிற்காக...
இதற்கும் மேலாக..
அன்பு அண்ணனின் உரைக்காக...
காத்திருக்கிறோம் உறவுகளே...!

ஒன்று மட்டும் உணர்கிறோம்..
ஏதோ நடந்து விட்டது...!
எம்மைச் சுற்றி பற்றைகள்..
எம்மைச் சுற்றி எதிரியின் சலசலப்பு..
அடிக்கடி எம்மைப் பார்க்கும் உறவில்லை
அடிக்கடி வந்து அழும் ஆத்ம நண்பர்கள் இல்லை
எம்மைக் கவனிக்கும் பொறுப்பாளர் இல்லை
மின் விளக்கு இல்லை...
தமிழர் வாழ்வு போல் நாமும் இருளுக்குள்..!

புரிந்து கொண்டோம்...
எம்மிடம் வரும் நிலையில் நீவிர் இல்லை
அதேநேரம்
எம்மை மறந்தும் விடவில்லை..!
எப்படி மறப்பீர்கள்...
தாயகம் வரும்வரை ஓயோம் என
கல்லறை மீது கைகள் வைத்து
சத்தியமல்லவா செய்தீர்கள்...!
எமக்குத் தெரியும்...
நாம் விட்ட இடத்தில் இருந்து
நீங்கள் தொடர்வீர்கள்.

நிலைகள் மாறலாம்...இலக்கிற்கான
பாதைகள் மாறலாம்...பெறுவதற்கான
வடிவங்கள் மாறலாம்...என்றுமே
இலட்சியங்கள் மாறக்கூடாது..!

ஒரு கணம் சிந்தியுங்கள்...!
உங்களுக்காய்....உங்களுக்காகவே
எங்கள் முப்பதினாயிரம் உயிர் தந்தோம்.
செங்களத்தில் நண்பர்கள்
அங்கங்கள் இழந்தனர்...!!
அப்பாவி மக்கள் அரிய உயிரை ஈந்தனர்..!!!
எல்லாமும் உங்களுக்காகவே...!!!

ஒருகணம் கூட ஓயவேண்டாம்
மறுகணம் எதிரி மாய்த்துவிடுவான்
ஊர் உலகெல்லாம் உரத்து
குரல் கொடுங்கள்...!
ஒவ்வொரு கணமும் இந்தக்
கல்லறை உறவுகளை நினையுங்கள்..!!

காலத்தின் கட்டளை எதுவோ
அதனை தொடருங்கள்...!
காலம் தரும் ஆயுதத்தை
கையில் எடுங்கள்...!!
இறுதி வரை இலட்சியத்திற்காக
போராடுங்கள்...!!
ஆண்ட இனம்....மலர்ச்சியாய்
வாழ்ந்த இனம்...மீண்டும்
மானத்தோடு வாழவேண்டும்

சிங்களவன் காலில்தான்
எமது வாழ்வு என்றால் - ஏன்
இத்தனை இழப்புகள்...!
எம்மை அவன் வென்றதாய்
சரித்திரம் இல்லை
இம்முறையும் அவ்வாறே
இருக்க வேண்டும்..!

கல்லறைகளுக்கு நாளை வாருங்கள்
கனிவான வெற்றிச்செய்தியோடு வாருங்கள்
காத்திருப்போம்..!
களத்தில் வெற்றிகளுக்காக...
எல்லையில் எதிரிகளுக்காக
காத்திருந்த எமக்கு இது பெரிதல்ல..!

தாயகக் கனவோடு நாங்கள்
சாவினைத் தழுவினோம்
தாயகம் வரும் வரை நீங்கள்
தளராது போராடுங்கள்.!
எங்கள் நினைவுகள்
எங்கள் பலங்கள்
எப்போதும் உங்களுடன்..!

நாங்கள் காத்திருப்போம்
நீங்கள் களமிறங்குங்கள்
வெற்றி பெற்றோம் என்று
மாலையோடு வாருங்கள்
நெய் விளக்கேற்றுங்கள்
கல்லறை கீதம் இசையுங்கள்...!

எம் இனமே எம் சனமே...
நாம் சொல்வது புரிகிறதா?
வெல்வோம்! வாழ்வோம்!!
வரலாறு படைப்போம்.!
தமிழரின் தாகம்
தமிழீழ்த் தாயகம்...!!

- ஈழபக்கத்திற்காக வாகுகன் -

இருதரப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தமிழர்களுக்கு ஏதும் இருக்கப்போவதில்லை

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விஞ் ஞாபனத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினை கள் தொடர்பாக அந்த வேட்பாaளர்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தேர் தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என அக் கட்சி தெரிவித்திருக்கின்றது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது.

ஆக, தமிழர் தரப்பில் பிரதான கட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு, கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பாகத் தங்கியிருக்கப் போகின்றது.

ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கின்றது. எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன் சேகா நிறுத்தப்படுவது உறுதியாகுமானால், அவரிட மிருந்து வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக் குத் திட்டவட்டமான தீர்வு நோக்கத்தை உள்ளடக்கிய தேர் தல் விஞ்ஞாபனம் ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்த நிலைமையாகும்.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது அரசையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பவும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடியோடு ஒழிக்கவும், புதிய அரசியல் முறைமை ஒன்றை ஏற்படுத்த வும் வசதியாக ஓர் இடைக்கால ஏற்பாடாகவே ஜெனரல் சரத் பொன்சேகாவை களத்துக்குக் கொண்டு வருகின்றது எதிர்க்கட்சிகளின் கூட்டணி.

அத்தகைய வேட்பாளரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையோ, திட்டமோ இருக்கப்போவதுமில்லை. அவர் அத்தகைய திட்டம் எதையும் தமது தேர்தல் விஞ் ஞாபனத்தில் குறிப்பிடப்போவதுமில்லை என்பது தெளிவு.

மேலும் அத்தகைய தீர்வு யோசனைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் வகையில் நீண்டகாலம் ஜனாதி பதித் கதிரையில் அமர்வதற்கு அவருக்கு இடமளிக்கும் விதத் தில் அவரை எதிர்க்கட்சிகள் இப்பதவிக்குக் கொண்டுவர முயலவில்லை என்பதும் வெளிப்படையானது. எனவே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான திட்டம் ஒன்றைத் தமது பொதுவேட்பாளர், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரேரிப்பதற்கு, அவரை அத்தேர்தலில் முன்நிறுத்துகின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு அனுமதிக்கப் போவதுமில்லை.

எதிர்க்கட்சிக் கூட்டைப் பொறுத்தவரை, தமது பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வென்று, பதவிக்கு வந் ததும், தற்போதைய அரசைக் கலைத்துப் புதிதாகக் காபந்து அரசு ஒன்றை ஸ்தாபித்து, புதிய தேர்தல்களை நடத்த வேண்டும், அதேசமயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து புதிய அரசியல் கட்டமைப்பு ஏற் பாட்டை விரைந்து கொண்டு வருவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அதன் ஒரே நிலைப்பாடாகும். புதிய பொதுத் தேர்தல் மூலம் வருகின்ற அரசே இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எதிரணியின் பிரதான கட்சிகளின் தரப்புகளின் நிலைப்பாடாகவும் உள்ளது.

எனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனை கள் ஏதும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தாம் முன்வைத்த "மஹிந்த சிந்தனை" தேர்தல் விஞ்ஞாபனமே, இம்முறையும் அப்படியே முன்வைக்கப்படும் என்பதை நேற்று அலரிமாளிகையில் தம்மைச் சந்தித்த பத்திரிகை யாளர்களிடம் அவரே உறுதிப்படுத்திவிட்டார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை "மஹிந்த சிந்தனை"யில் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக சிந்திப்பதற்கு ஏதும் இல்லை என்பதுதான் அவர்களின் தெளிவான கருத்து; உறுதியான பட்டறிவு.

தாம் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தால் மூன்று மாதங்க ளுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தென் னிலங்கையின் இணக்கமான கருத்து நிலைப்பாட்டை உரு வாக்கி, அதனடிப்படையில் தீர்வுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவார் என்று 2005 ஆம் ஆண்டின் இறுதி யில் "மஹிந்த சிந்தனை" என்ற பெயரில் தமது தேர்தல் விஞ் ஞாபனம் மூலம் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை மீண்டும் ஒரு தடவை நம்பி ஏமாறுவதற்குத் தமி ழர்கள் அவ்வளவு ஒன்றும் முட்டாள்கள் அல்லர் என்பதே உண்மையாகும்.

ஆகவே, தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பொறுத்த வரை, இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் விட யத்தில்

எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரிடம் எந்தத் திட்டமும் இருக்கப்போவதில்லை. ஆளுங்கட்சி வேட்பாளரான ஜனாதிபதியிடம் இருந்தும் புதிய திட்டம் ஏதும் வரப் போவதுமில்லை.

எனவே, தேர்தல் விஞ்ஞாபனங்களை வைத்து, யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்க ஏதும் தமிழர்களுக்கு இருக் காது என்பதுதான் உண்மை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக "மஹிந்த சிந்தனை" விஞ்ஞாபனத்தை மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டபோது 2005 இல் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கும், கிழக்கும் நிர்வாக ரீதியிலேனும் இணைக்கப்பட்டிருந்தது. அவரது ஆட்சிச் சீத்துவத்தின் கீழ் அது இப்போது துண் டிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், "வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச் சுக்கே இனி இடமில்லை" என்று தெளிவுபடுத்தி விட்டார் ஜனாதிபதி மஹிந்தர்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் உள்வாங்கி முடிவெடுப்போம் என்று கூறும் தமிழ்க் கூட்டமைப்புக்கு அவ ரின் இந்த நிலைப்பாடு பற்றிய தகவல் சமர்ப்பணம்

ஒட்டிசுட்ட்டான் படுகொலையின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு - 27.11.1990

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டுசுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் தான்தோன்றீஸ்வரர் ஆலயங்களில் ஒன்றாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரமும் உள்ளது. இங்கு வாழும் மக்கள் இவ்வாலயத்தைச் சூழ்ந்தே செறிவாக வாழ்ந்து வந்தனர். மக்களின் பிரதான தொழில்களாக ஓடு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பன காணப்படுவதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக முதலீட்டையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தருகின்ற தொழிலாகவும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை உள்ளது. ஒட்டுசுட்டானின் மையப்பகுதி ஓர் சிறுநகரப் பண்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

27.11.1990 அன்று ஒட்டுசுட்டானில் பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச் சூழலில் விமானப் படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் பன்னிரண்டு பொதுமக்கள் உடல்சிதறி உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தார்கள்.

இத்த்hக்குதலில் கொல்ல்லப்ப்படட்ட்ட ஒட்டிசுட்டானைச் சேர்ந்த மகேநத்திரனின் தங்கையான ஆ.சகீலா தெரிவிக்கையில் 'என்னுடைய அண்ணா 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் இருபத்தேழாம் திகதி ஒட்டுசுட்டான் சிவன்கோயிலை அலங்கரிப்பதற்காக இரவு சென்றிருந்தார். அப்போது வானத்தில் உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தியது. அப்போது நாங்கள் எல்லோரும் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவிலிருந்த எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் நின்றிருந்தோம். அப்போதுதான் அயலிருந்த ஒருவர் வந்து கோயிலடியில் குண்டு போட்டதால் அண்ணாவிற்குக் காயம் என்று சொன்னார்கள். அப்போது ஓடிச்சென்று பார்க்கும்போது அண்ணாவை முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு போயிருந்தார்கள். அங்கு போனபோது ஒரு கால் இல்லாமலும் கையிற் காயத்துடனும் பார்த்தோம். அப்போது அண்ணா அழுதபடி நான் சுகமாகி விடுவேன் என்று சொன்னார். ஆனால் அண்ணா உயிரோடு வரவில்லை. அவருடைய இறப்பு எங்களாற் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அண்ணா இருந்திருந்தால் இப்படியாக நாங்கள் கஸ்ரப்படவேண்டி வந்திருக்காது. எங்களை நல்லபடியாகப் பார்த்திருப்பார். தற்போது நாங்கள் பெரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தச் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் இறந்ததுடன், பலர் காயமடைந்தும் இருந்தார்கள்.' என்று கூறினார்.

சிங்கள அரச படைகள் தமிழ் மக்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள், வழிபாட்டு தளங்களை இலக்கு வைத்து அழிப்பதுடன் தமிழ் பொதுமக்களையும் படுகொலை செய்து கொண்டிருக்கின்றது. அவ்வாறான சிங்கள் படைகளின் தாக்குதலில் ஒன்றுதான் இத்தாக்குதல். இன்று வரை பல ஆலயங்கள் வழிபாட்டுதளங்களில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எந்த தாக்குதலுக்கும் அரச படைவீரர்கள் தண்டிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இச்சம்பவத்த்தில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள்
01. ஆழவ்hபப்pளi;ள மகேநத்pரன் - 25
02. தம்பிராசா செல்வராசா மாணவர் 23

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை

Thursday, November 26, 2009

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான விமானத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களின் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், பொது நூலகம் என்பனவற்றின் மீது கடந்த 27.11.2007 அன்று மாலை 4.30மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அயலவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் என 10பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலைக் கண்டித்து ருNநுளுஊழு அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மகேஸ்வரனின் தாயார் சீதாலட்சுமியின் கூறும்போது 'எனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை இவன் தான். மாவீரர் தினத்திற்கு கிளிநொச்சித் துயிலுமில்லத்திற்குப் போகவேண்டுமென்று முதல் நாளே முறிகண்டியிலுள்ள எனது தங்கையின் வீட்டிற்குச் சென்றவன். என்னுடைய பிள்ளை துயிலுமில்லம் போகும்போது தான் இது நடந்தது. இவன் தானே எனக்குக் கொள்ளி போடுகிற பிள்ளை. எனக்கு முன்னர் அவனை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு ஆக்கிவிட்டார்கள். என்னுடைய கணவரும் இந்திய இராணுவத்தினர் செய்த சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்.' என்றார்.

தமிழ் மக்களின் தேசியம், விடுதலை சார்ந்து இயங்கிய ஊடங்கள் அனைத்தும் சிங்கள பேரினவாதத்தினால் எதோ ஒரு வகையில் அடக்கப்பட்டுக்கொண்டேதான் இன்றுவரை இருக்கின்றது. உலகத்தின் அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்த போதும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து சிறிதளவேனும் பின்வாங்கமளே இன்றுவரை தமது செயற்பாடுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் தமிழ் ஊடங்களின் வரலாறாக உள்ளது.

இச்சம்பவத்த்தில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள்
01. முரளிதரன் சிந்துஜன் 11 மாணவன்
02. கறுப்பையா பிரியதர்சனன் 20 மாணவன்
03. தியாகராசா மகேஸ்வரன் 27 விவசாயம்
04. செல்வராஜா சிவகுமாரன் 46 வர்த்தகர்
05. கணேசமூர்த்தி சுபாஜினி 36 புலிகளின்குரல் வானொலி நிலைய அறிவிப்பாளர்
06. மகாலிங்கம் சுரேஸ்லின்பியோ 36 புலிகளின்குரல் வானொலி நிலையப்பணியாளர்
07. தருமலிங்கம் தவமணிதேவி 62 வயோதிபா
08. கிருஸ்பிள்ளை தருமலிங்கம் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் சாரதி
09. ஆனந்தராசா தெய்வநாயகி 55 வீட்டுப்பணி
10. இராசலிங்கம் பிரதீபன் 21

இச்சம்ப்பவத்த்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. பவநிதி 24
02. குணசீலி 29
03. நிர்மலாதேவி 54
04. கவிதா 29
05. தினேஸ்குமார் 21
06. ஸ்ரெலா 35
07. சாந்தபோதினி
08. ஜனனி 33
09. ஜி.மனோஜ் 04
10. சி.பவிதா 06

கிளிநொச்சி தருமபுரம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 25 நவம்பர் 2007


கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

வழமைபோல் கிராம மக்கள் 25.11.2007 அன்றும் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். காலை 7.15 மணியளவில் திடீர் என வான்பரப்பினுள் நுளைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் எட்டுக்கும் அதிகமான குண்டுகளை வீசின. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீதும் அதனை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்துவெடித்தன.

இதன்போது யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் எட்டாம் யுனிற் பகுதியில் வசித்துவந்த ஆறுமுகம் வர்ணலிங்கம் குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் வர்ணலிங்கத்தின் மகன் கமல்ராஜ் என்பவரின் மனைவி தனயோகம் கால், கையை இழந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது 03.12.2007 இல் மரணமானார்.
இத்தாக்குதல் காரணமாக மக்களின் பயன்தரு மரங்கள், பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் என்பன அழிவடைந்தன.

இன்று வரை இத்தாக்குதலுக்கு பொறுப்பான எந்த விமானப்படை அதிகாரியோ அல்லது எவரேனும் தண்டிக்கப்படவும் இல்லை. விசாரனைகள் மேற்கொள்ளப்படவுமில்லை.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் விபரம்
01. ஆறுமுகம் வர்ணலிங்கம் 54
02. வர்ணலிங்கம் சரஸ்வதி 49
03. வர்ணலிங்கம் சுமிதாநந்தினி 25
04. முருகையா லுபாசினி 15
05. கமல்ராஜ் தனயோகம் 19

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. வர்ணலிங்கம் கமல்ராஜ் 28
02. மு.நடனதேவி 41
03. அ.வேல்முருகு 60
04. லிங்கேஸ்வரன் 60
05. த.அனுசியா 04

விசுவமடுப் படுகொலையின் பதினொராம் ஆண்டு நினைவுகள் - 25.11.1998

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை போன்றவற்றுடன் மேட்டு நிலப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கான நீரினை விசுவமடுக்குளம் வழங்குகின்றது. இப்பிரதேசத்தின் சந்திப்பகுதி சிறிய நகரப் பண்பைக்கொண்டுள்ளது.

25.11.1998 அன்று பிற்பகல் 2மணியளவில் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் இராணுவத்தினரால் ஆனையிறவிலிருந்து விசுவமடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குவந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் அவ்விடத்திலேயே உயிரிழந்தான். மற்றைய எறிகணை விசுவமடு மகாவித்தியாலயத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்ததில், தனது மாமனாருக்கு மதிய உணவினைக் கொண்டுவந்த சிறுவன் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான். மேலும் இதனை அண்டிய பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் உயிரிழந்தார்கள். இச்சம்பவங்களில் மொத்தமாக ஆறிற்கும் மேற்பட்ட பொதுமகக்ள் உயிரிழந்ததுடன், பத்துப் பேர் காயமடைந்தனர்.

25.11.1998 அனறு;று; விசுவமடுப் படுகொலையில் கொல்லப்பட்ட்டோர் விபரம்
01. சிவறஞ்சினி மாணவி 15
02. கிருஸ்ணபிள்ளை தர்மரத்தினம் - 32
03. ஜெயரட்ணம் வினோ குழந்தை 03
04. முருகையா பிரகாஸ் மாணவர் 12
05. யோகநாதன் அகிலேநாதன் மாணவர் 17
06. இராசன் வசந்தகுமார் வீட்டுப்பணி 27

காயமடைந்த்தவர்களின ; விபரம்
01. லக்சுமி - 52
02. சரஸ்வதி. - 41
03. சிதம்பரநாதன் சிவானந்தன் - 25
04. சிதம்பரநாதன் மணிமேகலை 59
05. செல்வராசா இராசம்மா வீட்டுப்பணி 40
06. பெருமாள் சாந்தகுமார் தொழிலாளி 16
07. கோவிந்தசாமி.
08. கோவிந்தசாமி மகேஸ்வரி
09. கிருஸ்ணன் குணரத்தினம்
10. இராமையா சிவனம்மா

தமிழர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு உட்படாதது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.

வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு டிசெம்பர் முதலாம் திகதி முதல் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்படும் என சிறிலங்கா அரசு சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கையை “சாதகமான நடவடிக்கை” என வரவேற்றுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

அதேசமயம், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்துலக சட்டங்களுக்குப் புறம்பாகப் பலரை அதிகாரிகள் எழுந்தமானமாகத் தடுத்து வைத்திருப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது ஆழந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

முகாம்களில் உள்ளவர்களில் அதிகாரிகளால் அவதானிக்கப்படும் சிலர் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக வேறு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள் என்று தனக்குத் தெரிய வந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

அதற்கும் மேலாகத் தற்போது, 11,000க்கும் மேற்பட்டவர்களை எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் அரசு தடுத்து வைத்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கும் கண்காணிப்பகம், “இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துங்கள் அல்லது விடுவியுங்கள்” என அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

“நீண்ட காலத்தின் பின்னராக இருந்தாலும் முகாம்களில் இருந்து மக்களை விடுவிப்பதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல தமிழர்களை அரசு இன்னும் தடுத்து வைத்திருக்கிறது.

சிறிலங்கா அல்லது அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிரட் அடம்ஸ்.

“மக்களை விடுவிப்பதான அறிவிப்பு எழுந்தமாக இடம்பெறும் தடுத்து வைப்புக்களை எந்தவிதத்திலும் மன்னிப்பதாக அமைந்து விடக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்த அறிக்கையின் விபரம்:
:
கண்காணிப்பகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, முகாம்களில் உள்ள மக்களில் சிலர் டிசெம்பர் முதலாம் திகதி விடுவிக்கப்படமாட்டார்கள். அவர்களை அதிகாரிகள் இப்போதே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக மெனிக் பாமில் உள்ள சிறப்பு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட உள்ளார்கள். அந்த சிறப்பு முகாம்கள் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன.

மெனிக் பாம் முகாமில் இருந்து ஆனந்தன் என்பவரும் இன்னும் பத்திற்கும் மேற்பட்டவர்களும் ஒக்டோபர் 5ஆம் திகதி அன்று அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் என ஆனந்தனின் மனைவி மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“ஒக்டோபர் 5ஆம் திகதி அவர்களைப் பிடித்துச் செல்ல வந்தவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் - அவரிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது, அது முடிந்ததும் ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்பதுதான்.

“ஆனால் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக் காவல்துறையினரிடம் சென்றேன். அவரை என்னிடம் திருப்பித் தந்துவிடுமாறு நான் அழுதேன், கெஞ்சினேன். ஆனால், என்னை அங்கிருந்து போகும்படி மட்டுமே அவர்கள் சொன்னார்கள்” என்றார் ஆனந்தனின் மனைவி.

பிடித்துச் செல்லப்பட்டு 15 நாட்களின் பின்னர் ஆனந்தன் எழுதிய கடிதத்தின் மூலமாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் அவரது மனைவிக்குத் தெரியவந்தது. அந்த நேரத்தில் ஆனந்தனின் மனைவி மெனிக் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் பம்மைமடு முகாமுக்குச் சென்று ஆனந்தனைப் பார்வையிட்டவும் அவரால் முடிந்தது.

“அவர் அந்த முகாமில் எவ்வளவு காலம் தங்கி இருக்க வேண்டி இருக்கும் என்பது குறித்து ஆனந்தனுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் (அதிகாரிகள்) அவரிடம் எதுவும் சொல்லவில்லை. நான் அங்கு செல்லும் வரையில் அவர் நீதிவான் முன் கொண்டு செல்லப்படவில்லை. அத்துடன் சட்டவாளர் ஒருவரைத் தனக்காக அமர்த்திக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை” என மேலும் கூறினார் ஆனந்தனின் மனைவி.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து பாதுகாப்புடனும் மதிப்புடனும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோருகின்றது.

மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் விரும்பும் இடத்தில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அல்லது திறந்த முகாம்களில் தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 140,000 மக்கள் அதிகாரிகளால் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் அல்லது நலன் விரும்பிகள் குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் விடுவிக்கப்படும் போது செல்ல வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அவர்களில் சிலர் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கு ஏனையவர்கள் செல்ல அரசு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பாகக் கவலை கொண்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற போதும், அனைத்துலக மனிதார்ந்த நிறுவனங்கள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

இருப்பிடங்கள், உணவு, தண்ணீர் சுகாதார வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேவைகள் பெருமளவில் இருந்த போதும் இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

“தமது வீடுகளுக்குத் திரும்பி உள்ள மக்களிடம் செல்வதற்கு அனைத்துலக உதவி அமைப்புக்களுக்குத் தடை விதிப்பதன் மூலம், அந்த மக்களின் நலன்களையும் சுகாதார நிலையையும் அரசு மேலும் ஆபத்திற்குள் தள்ளுகிறது” என்கிறார் அடம்ஸ். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் அவர்.

“மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, மீள்கட்டுமானத்திற்கான உதவிகளை வழங்கும் நிதியாளர்கள் நிராகரித்துள்ளனர் என்பதுடன் சுயாதீனக் கண்காணிப்பாளர்கள் அந்த மக்களை சுதந்திரமாகச் சென்றடைவதையும் வலியுறுத்துகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

6 மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு சரத் பொன்சேகா இணக்கம்: ஐ.தே.மு., ஜே.வி.பியுடன் ஒப்பந்தம்

பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய அணிகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருக்கின்றன.

முத்தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொகுக்கப்பட்டு ஒப்பந்தமாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

* பொது வேட்பாளர் கட்சி ஒன்றுக்கு அப்பாற்பட்டவராக இருத்தல்.

* பிரபல்யமற்ற கட்சி ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும்.

* பிரதான கமிட்டி, இணைப்புக் கமிட்டி ஆகிய இரு கமிட்டிகளை அமைத்து ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான முடிவுகள் அனைத்தையும் இக்குழுக்கள் மூலமாக எடுத்தல்.

* ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநிறுத்தி நீதியான நிர்வாகத்தையும் சமூக மற்றும் சட்ட ஒழுங்குகளையும் பேணுதல் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடத்துதல்.

* ஜனாதிபதிப் பதவியை ஏற்றவுடன் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காபந்து அரசு ஒன்றை நிறுவுதல்.

* நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சட்ட நகல் ஒருமாத காலத்துக்குள் முன்வைக்கப்பட்டு ஆறு மாத காலத்துக்குள் அதனை நடைமுறைப்படுத்தல்.

* புதிய ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ நடவடிக்கையாக 17 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேர்தல், பொலிஸ், நீதி, அரச சேவை ஆகிய துறைகளில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல்.

* அகதிகளை மீளக்குடியமர்த்துதல், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், அவர்கள் தமது வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்வரை வாழ்வாதார உதவிகளை வழங்கல்.

* சிறைவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கேற்ப சட்ட நடவடிக்கை எடுத்தல், புனர்வாழ்வு அளித்தல் அல்லது விடுதலை செய்தல்.

* கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணுதல், பத்திரிகைச் சபைச் சட்டமூலத்தை இல்லாமல் செய்வதன் மூலம் நாட்டுக்கு நீதியான ஊடக கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தல்.

Wednesday, November 25, 2009

வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை: திட்டவட்டமாக கூறுகிறார் ஜனாதிபதி

வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் தங்களது ஜனாதிபதியைத் தாங்களும் சேர்ந்து தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடனான உரையாடலின் போது ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் பேச்சு நடத்தவேண்டும் என்பதை ஏற்கிறேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர்களோடு பூர்வாங்கத் தொடர்பாடல்களை நான் ஆரம்பித்துள்ளேன். குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான உங்களின் கருத்து ஏற்கமுடியாதது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள்.

கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது ஒரு வாக்குறுதியளித்தேன். அதன்படி, தமிழர் ஒருவரை மாகாண முதலமைச்சராக்கினேன். அதனால் நான் எதிர்கொண்ட எதிர்ப்புகள் சொல்லி மாளாதவை. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டமே பொங்கி எழுந்தது. எனினும், எனது முடிவில் உறுதியாக இருந்து அதனைச் செய்தேன். அப்படி எப்போதும் செயற்பட முடியாது.

ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு (கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்துவிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது முறையானது.

ஆகவே, காலாவதியாகிப்போன வடக்கு கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம். இப்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் அண்மையில் இலங்கை சென்றிருந்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முடிந்தவுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:

இந்த ஜனாதிபதித் தேர்தலை எந்தவித வன்முறையும், குழப்பங்களுமின்றி நடத்துவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிஸ்டல் குழுக்களோ, பிற வன்முறை அணிகளோ தலைகாட்ட நாம் இடமளிக்க மாட்டோம். ஆனாலும் எந்தச் சம்பவம் நடந்தாலும் ஒரு கல்லெறி இடம்பெற்றாலும் முழுக் குற்றச்சாட்டையும் அரசுத் தலைமை மீது சுமத்துவதே இங்கு வழமையாக உள்ளது. நானும் இத்தகைய பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் இந்த மட்டத்துக்கு வந்துள்ளேன்.

1977 இல் ஐ.தே.கட்சி அரசு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. என்றாலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளேயே புதிய தேர்தலை நடத்துவதற்குக் கோரி நாம் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்) வீதிக்கு இறங்கிப் போராடத் தொடங்கினோம். ஆகவே, தேர்தல்கள் அவசியமானவை.

இத் தேர்தல் சாதாரணமானதாக, நீதி, நேர்மையானதாக நடக்க ஊடகவியலாளர்களான நீங்கள் உதவவேண்டும். பக்கச்சார்பாக நடக்காமல் நடுநிலையோடு செயற்படுங்கள். இங்கு நாடு ஒன்று இருந்தால்தான் நாம் அனைவரும் கௌரவமாக வாழ முடியும். எனவே வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளித்து அடங்கிப் போய்விட முடியாது.

வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போயிற்று எனக் குற்றம் சுமத்தி வருகின்றார்கள். அதன் காரணமாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அதை நடத்தி, அந்த மக்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்து, அவர்களும் சேர்ந்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வகை செய்யும் விதத்திலேயே இத் தேர்தல் பிரகடனத்தை நான் வெளியிட்டேன்.

இதற்காக எனது பதவிக் கலத்தில் இரண்டு ஆண்டுகளைத் தியாகம் செய்யவும் நான் முன்வந்துள்ளேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றார்கள். அது நான் தனித்துச் செய்யும் விடயம் அல்ல.

அதுபோலவே சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் விவகாரமும். நாடாளுமன்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டே இவற்றைச் செய்யமுடியும். நாடாளுமன்றுக்குப் பதில் கூறுபவராகவே அரசுத் தலைவர் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். அந்த முறைமையை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

எவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தாலும், வர முன்னர் கொடுத்த வாக்குறுதிப்படி, அந்த முறைமையை ஒழிப்பது என்பது கஷ்டமானதே. அடுத்த ஜனாதிபதிப் பதவிக்குப் பிறகு எனக்கும் அரசியலில் இடம் இல்லாமல் போய்விடலாம்.

எனவே, இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கு நான் எதிரானவன் என்று யாரும் யோசிக்காதீர்கள். இது நாம் எல்லோரும் சேர்ந்தே செய்யவேண்டிய விவகாரம். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு, உதவி என்பனவும் இதற்கு எனக்கு அவசியம். நாம் கடந்த தேர்தலின்போது அளித்த "மஹிந்த சிந்தனை" உறுதிமொழியில் அநேகமானவற்றை நிறைவு செய்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. எதிரணி வேட்பாளராக அவர் வருவாராயின், கையை விரித்து அரவணைத்து அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் தங்களின் பிரஜைகளுக்குத் தேர்தலின்போது பங்குபற்றி வாக்களிக்கும் உரிமை சில நாடுகளில் உள்ளது. நாங்களும் அது பற்றிச் சிந்திக்கலாம். அதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும். இம்முறை தேர்தலுக்கு அது சரிவராது. காலம் பிந்திவிட்டது. எதிர்காலத்தில் அது குறித்துச் சிந்திக்கலாம். வெளிநாடுகளில் வதியும் சுமார் இருபது லட்சம் இலங்கையர்களும், தாம்தாம் வதியும் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய ஒரு முறைமை குறித்து நாம் ஆராயலாம். என்றார் ஜனாதிபதி.

Tuesday, November 24, 2009

ஈழத்தமிழர் தொடர்பில் சிறிலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்துங்கள்: ஒபாமாவுக்கு மன்னிப்புச் சபை கடிதம்

தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை 6 மாதங்களிற்குள் விடுவிப்பதாக சிறிலங்கா தனக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இந்தியா அந்த நாட்டினை அழுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை [Amnesty International] கேட்டுக்கொண்டுள்ளது

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக நேற்று மாலை அமெரிக்கா சென்றடைந்தார். நாளை அவர் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பில் தீவிரவாதம், காலநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் என்பன குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் வோசிங்டன் வந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் மனித உரிமைகள் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னிப்புச் சபையின் சார்பில் அதன் அமெரிக்கக் கிளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லாறி கொக்ஸ் [Larry Cox] அதிபர் ஒபாமாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் சிறிலங்கா விவகாரம் குறித்தும் வலியுறுத்தி உள்ளார்.

“போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை ஆறு மாதங்களுக்குள் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிப்பதாக சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு உறுதி அளித்திருந்தது. ஆனால், ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டன. எனினும் பல பத்தாயிரக் கணக்கான மக்கள் இன்னும் படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது உறுதிமொழியை நிறைவேற்றும்படி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நீங்கள் (ஒபாமா) கேட்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பட்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் - சிறுவர்கள் உட்பட - 12,000க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கும், சட்ட ஆலோசனைக அவர்கள் பெறுவதற்கும் கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித உரிமை விகாரங்கள் குறித்து இந்தியாவிடம் கருத்துக் கூறுவதற்குக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிடாதீர்கள் என்று அதிபராகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” – எனத் தனது கடிதத்தில் லாறி கொக்ஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்போடு சேர்ந்து பேரம் பேசலும் ஆரம்பிக்கும்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எந்தச் சமயத்திலும் அறிவிக்கப்படலாம் என நேற்றுப் பரவலாக நம்பப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி ஜனாதிபதித் தேர் தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. புதிய வருடம் 2010 ஆம் ஆண்டு தேர்தல் சூட்டோடுதான் பிறக்கப் போகின்றது.

எது, எப்படியென்றாலும் நடத்தப்படக் கூடிய இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அடுத்த நிறை வேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியில் அமர்கின்றவர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது என்பதால் தமிழர்களைப் பொறுத்தவரை இது, இன்று முக்கிய விடயமாகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று, "இது தென்னிலங்கை தனது தலைமையைத் தேர்ந்தெடுக்கும் விவகாரம், இதில் தமிழர் தாயகத்துக்குப் பங்களிக்க ஏது மில்லை!" என்று தமிழர் தரப்பு விட்டேத்தியாக இருக்க முடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் இருந்த ஆயுத வலுவையும் அரசியல் பலத்தையும் இழந்து இன்று ஏதி லிகள் போல் நிற்கும் தமிழினம், இந்த ஜனாதிபதித் தேர் தலை வகையாக வசமாக பயன்படுத்திக் கொண்டால் தான் மிச்சம், மீதி ஏதும் கிட்டும். அரசியல் ரீதியாகவே னும் எச்ச, சொச்ச அதிகாரத்தை பலத்தை தக்கவைத் துக் கொள்ளமுடியும்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் தென்னிலங்கையின் பிர தான இரு அணிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டி என்றாலும், அதில் முடிவைத் தீர்மானிக்கும் வலிமை சிறுபான்மையினரின் குறிப்பாகத் தமிழர், முஸ்லிம் களின் கைகளில் வீழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்து வதில்தான் தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. சரியான உத்தியை வகுத்து, கனகச்சிதமாகக் காய் நகர்த்தி, விடயத்தை நாசூக்காக ஒப்பேற்ற வேண்டிய தகுந்த வேளை இது.

இந்தியத் தரப்போடும், புலம்பெயர் நாடுகளில் வசிக் கும் தமிழ்ப் பிரமுகர்களின் ஓர் அணியோடும் இலங்கை அரசுத் தலைமை அண்மையில் ஆரவாரம் ஏதுமின்றி நடத்திய பேச்சுகளின்போது, வடக்கு கிழக்கு இணைப் புக்கு அரசுத் தலைமை உடன்பட்டது என்றும்
எனினும், இதனை வெளிப்படையாகச் செய்தால் எதிர்வரும் தேர்தலில் தென்னிலங்கையில் அரசுத் தரப் புக்கு அது பெரும் பாதகமாகிவிடும் என்பதால், அதனை உடனடியாக, வெளிப்படையாகச் செய்யாமல், முதலில் வடக்கையும், கிழக்கையும் சேர்த்து ஐக்கிய பொருளாதார வலயமாக அறிவித்து, பின்னர் நிர்வாக ரீதியாக அந்த மாகாணங்களை இணைத்து, கடைசியாக ஓர் அரசியல் பிராந்தியப் பிரதேசமாக மாற்றலாம் என அரசு உறுதி யளித்தது என்றும்

சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் உண்மை இருக்கலாம். பொய்யும் இருக்கலாம்.
சில சமயங்களில் பிரதான தேர்தல் வேளையில் தமி ழர்கள் தரப்பை ஏமாற்றித் தமது வலையில் வீழ்த்தி அவர் களின் வாக்குகளைச் சுருட்டுவதற்காக அரசுத் தரப்பே பின்னிக்கொள்ளும் சூழ்ச்சியாகவும் கூட இப்படிக் கசியும் செய் திகளின் நோக்கம் இருக்கலாம்.

அப்படியில்லாமல், தமிழர்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கைக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அரசு தயாராகி விட்டது என்ற கதையைத் தென்னி லங்கையில் பரப்புவதன் மூலம், மஹிந்தருக்கு எதிரான உணர்வுகளை பௌத்த சிங்கள மேலாண்மையில் மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் கிளப்பி, அதன் மூலம் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எதிரணிகளால் கசியவிடப்படும் செய் தியாகவும் கூட இது இருக்கலாம்.

இப்போது தேர்தல் என்றதும் தமிழர்களுக்கு சகாயம் செய்ய முயல்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று காட்டி, அதற்கு எதிராகத் தென்னிலங்கையில் உணர் வலைகளைத் தூண்டிவிட்டு, அதனை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குப் பாடமாகச் சுட்டிக்காட்டவும், இந்தக் காரணத்தால் எந்த நோக்கம் கருதியும் தமிழர்களுக்கு சகாயமான நிலைப்பாட்டை பொன்சேகா பிரதிபலிக்கவே கூடாது என அவரை எச்சரிக்கும் நோக்குடனும் இத் தகைய செய்திகள் கசிய விடப்பட்டிருக்கலாம்.

எது, எப்படியென்றாலும், சிறுபான்மையினரோடு குறிப்பாகத் தமிழர் தரப்போடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் இரு பிரதான தரப்புகளின் வேட் பாளர்களும் எத்தகைய உறவாடல் போக்கைக் கையாளப் போகின்றார்கள் என்பது இத் தேர்தலின் முடிவைத் தீர் மானிக்கும் அம்சங்களுள் ஒரு முக்கிய விடயமாகப் போகின்றது.

இந்த வேட்பாளர்களோடு,திறந்த மேடைகளிலும், மூடிய அறைக்குள்ளும் தமிழர் தரப்பு பேரம் பேச வேண்டியிருக்கும். உடன்பாடுகள் காணவேண்டியி ருக்கும். உறுதிமொழிகள் பெறவேண்டியிருக்கும்.உறுதி மொழிகளை செயலாக்குவதற்கு தூண்டும் தரப்புகளைத் தேடவேண்டியும் கூட வரலாம்.

ஒருபுறம் பகிரங்க அறிவிப்புகளைச் செய்வதும், மறு புறம் இரகசிய உடன்பாடுகளைக் காண்பதாகவும் கூட இந்த அரசியல் சாணக்கிய விவகாரத்தில் தமிழர் தரப்பு பின்பற்ற வேண்டிய உத்தி அமையக்கூடும்.

இவற்றையெல்லாம் தமிழ்த் தலைமைகள் எப்படி ஒப்பேற்றப் போகின்றன, மதி நுட்பமாகக் காய் நகர்த்தப் போகின்றன என்பதே பிரதான கேள்வி. இவற்றுக்கு விடை காணப் பொறுத்திருந்து பார்த்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Monday, November 23, 2009

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு எச்சமயத்திலும் இனி வெளியாகலாம்

தமிழர் தாயகப் பகுதிகள் மீதான கொடூர யுத்தத்தில் தான் வெற்றியீட்டிவிட்டதாகக் கொழும்பு அரசு மார்தட்டி ஆறுமாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் எத்தகைய ஆரோக்கிய ஆக்கபூர்வ முன்நகர்வும் இந்த ஆறு மாத காலப்பகுதியில் எடுக்கப்படவேயில்லை.

ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டு, "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி' தயாரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக முடங்கிப்போய் விட்டது.

"இனப்பிரச்சினைக்கு நிரந்தர நியாயத் தீர்வு காண் பதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளே இடைஞ் சல். அந்த இயக்கம் அழிக்கப்பட்டால் தீர்வு இலகு வாகிவிடும், விரைந்து கிட்டிவிடும்' என்றெல்லாம் தென்னிலங்கையால் முன்னர் நொண்டிச்சாட்டுக் கூறப் பட்டு வந்தது.

ஏதோ, சிறுபான்மையினருக்கு நீதியான நியாயமான தீர்வைக் கொழும்பு அரசு தந்துவிடும் என்ற மாதிரியும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளே அதற்கு இடைஞ் சலாக உள்ளனர் என்பது மாதிரியும் தென்னிலங்கை கொழும்பு அரசு இதுவரை பிரசாரம் செய்து வந்தது.
ஆனால், இப்போது புலிகளை வெற்றி கொண்டா யிற்று என கொழும்பு அரசு அறிவித்தே ஆறு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் எதுவும் நகரக்காணோம்.

ஆனால் விடயங்கள் இப்போது வேறு புறமாக நகரு கின்றன. "ஆயுதம் தாங்கிய பிரிவினை கோரிய விடு தலைப் புலிகளை அழித்துவிட்டோம். அத்துடன் இனப் பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டது. ஏதோ நாட்டின் ஒரு சில பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு சில ஆதங் கங்கள் உள்ளன. அவற்றைக் களையும் விதத்தில் சில நடவடிக்கைகளை எடுத்தால் போதுமானது' என்ற சாரப்பட்ட சிந்தனை வெளிப்பாடே இப்போது தென்னிலங் கையில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இராணுவ நடவடிக்கையில் தமிழர் தாயகம் மீது நடத்தப்பட்ட யுத்தத்தில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு, அந்தச் சந்தடியிலேயே அடுத்த தட வையும் ஆட்சியில் நீடிப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எத்தனத்தில், தமது தலைவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வென்று மக் கள் அங்கீகாரம் பெற்ற பின்னரே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் எத்தனம் முன்னெடுக்கப்படும் எனப் பட்டவர்த்தனமாக அறிவித்திருந்தது.

இப்போது கடந்த 19ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை எப்போதும் பிரகடனப்படுத்து வதற்கான அதிகாரம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவர் தமது முதலாவது ஆட்சிக் காலத்தில் நான்கு ஆண்டு களைப் பூர்த்தி செய்த நிலையில் அவருக்கு வந்துவிட் டது.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அங்கீகாரத்தை மக்களிடம் கோருவேன் என்று கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனிமேலும் காலத்தை இழுத்தடிக்க முடியாது. எப்படியாயினும் ஜனாதிபதித் தேர்தலை இயன்ற விரைவில் அவர் முன்வைத்தாகவேண்டும். ஏனெனில், யுத்தம் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து ஆறு மாதங்களாகிவிட்டன. தாம் அறிவித்தபடி இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அங்கீகாரத்தை மக்களிடம் தாம் பெறுவதற்காக ஜனாதிபதித் தேர்தலை அவர் சந்தித் தேயாகவேண்டும்.

எதிரணி இத்தேர்தலை ஒட்டி, பலம் வாய்ந்த பொது வேட்பாளரை நியமித்து விட்டது என்று கூறப்படுவதால் தமது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று கருதி இத் தேர்தலை உடனடியாக நடத்தாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கமுடியும்; அல்லது பிற்போட முடியும்.

அப்படி அவர் பிற்போடுவாராயின், இனிமேல் அத் தேர்தல் நடக்கும் காலத்திற்குக் காத்திராமல், இனப்பிரச் சினைத் தீர்வுக்கான திட்டத்தை அவரையே முன்வைக் குமாறு சர்வதேச சமூகம் அழுத்தத் தொடங்கும்.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் ஜனாதிபதித் தேர் தலை அவர் விரைந்து நடத்தியேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பல தராப்புகளிடமிருந்தும் சர்வதேச சமூகத் திடமிருந்தும் அவருக்கு வரும் என்பது உறுதி.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக எப்படி யும் வெற்றிவாகை சூடலாம் என்ற மிக உறுதியாக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவரின் இராணுவத் தளபதி ரூபத்திலேயே போட்டியாளர் தயா ராகிவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் எழுச்சி பற் றிய குறிப்பாகத் தென்னிலங்கை எழுச்சி பற்றிய தக வல்கள் உண்மையாக இருக்குமானால், இன்றைய நிலை யில் முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம் அவருக்கு அடியோடு காலை வாரிவிடக்கூடிய ஆபத்து மிகுந்தது.

என்ன செய்வது? ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அங்கீகாரம் பெற்றே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதற்காக ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்து வேன் என்றும் அறிவித்துவிட்ட ஜனாதிபதிக்கு அதிலி ருந்து இப்போது பின்வாங்குவது முடியாத இயலாத காரியம்.

அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலை எப்படியும் நடத்தி முடிக்கும் உறுதியில் சில தரப்புகள் முனைப் பாகச் செயற்படுகின்றன. அதுபற்றிய அறிவிப்பு எந்நேர மும் வெளியாகலாம் என்பதுதான் இப்போதைய நிலை மையாகும்.

Sunday, November 22, 2009

சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு;

புதுக் கதையாக எழுமா?... பழைய பல்லவி தானா?

சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி,நவம்பர் 19.

கடந்த காலங்களில் பல தடவைகள் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட சுயநல நோக்கம் காரணமாக இவர்களது கூட்டுகள் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இப்பொழுது ஒரு லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னர் (சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கணிப்பீட்டின் பிரகாரம்) இப்போதைய தமிழ்த் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு உயிர் வாழும் சுதந்திரம், உணவு அருந்தும் சுதந்திரம், உறங்கும் சுதந்திரம், விசில் அடித்தவுடன் "சடின் பிறேக்'' போட்டு நிற்பாட்டும் சுதந்திரம், முகாமில் வாழ்ந்தாலும் தேசியக் கொடியை ஏற்றும் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளையும் (சுதந்திரத்தையும்) பெற்றுக்கொடுத்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் வெளிநாட்டிலாவது ஒன்று கூடுகிறார்கள் எனறால் அது ஏதோ ஒரு வகையிலாவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கை சுதந்திரமடைந்த போதே, தமிழர்களின் உரிமைகளையும் பிரித்தானியரிடமிருந்தே பெற்றிருக்கலாம். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றித் தமது காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றத் தொடங்கி விட்டனர்.

ஏமாந்த சோணகிரித்தனமாக தமிழ்த் தலைவர்கள் தமது கதிரைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிழைப்பு அரசியலில் ஈடுபட்டனர். தமிழ்த் தலைவர்களில் ஒரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத் தலைமைகள் சொல்வதை நம்பி ஏமாந்தனர். இன்னொரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத்தலைமைகள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும் ஆரம்பத்தில் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் இணக்க அரசியலில் ஈடுபட்டதையும், இணக்க அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் (பட்டுத் தெளிந்தபின்) தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தியதையுமே கடந்தகால இலங்கை வரலாறு காட்டுகிறது.

இதற்கு நல்ல உதாரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம், அடங்காத் தமிழன் என அழைக்கப்பட்ட கணிதப்பேராசிரியர் சுந்தரலிங்கம், வி.பி.என அழைக்கப்பட்ட வ.பொன்னம்பலம் ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள், நடேசபிள்ளை, மகாதேவா போன்றோரின் துணையுடன் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முறியடித்தார். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரிப் பிரபுவின் நண்பரான பேராசிரியர் சுந்தரலிங்கத்தைத் தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு தான் சிறுபான்மையினர் மீது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டேன் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உறுதியளித்தார் டி.எஸ்.
டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராகப் பதவியேற்றதும் தனது செயலாளரிடம், "பாரும் இப்பொழுது பொன்னம்பலம் (ஜி.ஜி) வந்து சேர் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போவார்" என்று சொன்னார். டி.எஸ்.சேனநாயக்கா கூறியது போல் பொன்னம்பலமும் போய் பவ்வியமாக "சேர்" என்று கைகுலுக்கி விட்டுச் சென்றாராம்.

இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அமைச்சரவையில் இணைந்துகொண்டு ஜி.ஜி. கைத்தொழில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சேனநாயக்காவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய சுந்தரலிங்கம், டி.எஸ்ஸின் அழுத்தம் காரணமாக (சூடு கண்டபின்) தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தமிழ் ஈழக்கோரிக்கையை முன் வைத்தார். இதே போலவே 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசின் அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட போது செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வ.பொன்னம்பலம் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இவற்றை விட தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தேர்தல் காலங்களில் மாறிமாறி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து ஏமாந்தது தான் கடந்தகால இலங்கைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்கள்.

சிங்களத் தலைமைகள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன என்ற காரணத்தாலேயேதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு லட்சம் உயிர்களைப்பலியெடுத்த பின் புலிகளை அழித்து விட்டதாக தென்னிலங்கை மார் தட்டுகிறது. இப்போது வெள்ளம் கழுத்து வரை வந்து விட்டது. சேடம் இழுக்கும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கழுத்து வரை வந்த வெள்ளத்தை இடுப்பளவுக் கேனும் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலையே இப்போது....! நிச்சயமாகக் குறைக்க முடியும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாம் நிச்சயமாக எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். அதற்கான புறச்சூழல் இப்போது உருவாகியுள்ளது. தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று கூடியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம் தலைமைகளும் சேர்ந்தால் கழுத்து வரை வந்த வெள்ளத்திலிருந்து நீந்திப் புதிய அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. காரணம் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வெளி அழுத் தங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேவை. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை தமிழ் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்துவார்களா?

ந.பரமேஸ்வரன்

தெற்கின் அபத்த அரசியல் இது!

"சுத்திச் சுத்தி சுப்பரின் கொல்லைக்குள்!" என்பார்கள். தென்னிலங்கைத் தேசிய அரசியலும் இப்படி ஒரு வட் டத்துக்குள்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது.

சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான பேரினவாத மேலாதிக்கத்தை வசமான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிலே அரசியல் பிழைப்பு நடத்துவதே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரவணிப் பழக்க மாக நீடித்து வருகின்றது.

கௌரவமான வாழ்வுக்கும், நியாயமான உரிமைகளுக் காகவும் ஈழத் தமிழினம் நடத்தியநடத்தும்போராட்டத் தைப் பெரும் இராணுவ மேலாண்மை கொண்டு அடக்கி, மிதித்தபடி, அந்த மேலாதிக்கத் தீயிலே அரசியல் குளிர் காய்வதே தென்னிலங்கை ஆட்சியாளரின் வழக்கம்.

தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா உள் ளிட்ட சர்வதேசத் தரப்புகளின் ஏகோபித்த ஆதரவைத் திரட்டிக்கொண்டு, மிகக் குரூரகொடூரஇராணுவ நட வடிக்கைகளையும், பேரழிவு யுத்தத்தையும் தமிழர் தாய கம் மீது தொடுத்து, ஈவிரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட கொழும்பு ஆட்சிப்பீடம், அந்தப் போரில் தனக்குக் கிட்டியதாகத்தான் மார்தட்டிக் கொண்ட பெரு வெற்றியை வைத்தே, தென்னிலங்கைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியீட்டி ஆட்சி அதிகாரத்தில் மேலும் பல்லாண்டுகள் நீடிக்க அவாவி நிற்கிறது.

ஆனால் யுத்த வெற்றியில் பங்கு உரிமை கோரும் படைத்தரப்பில் இருந்தே ஆட்சி அதிகாரத்தில் உரிமை கோரும் போட்டித் தரப்பு உருவானதும், இப்போது ஆட்சிப் பீடம் பொலபொலத்துப் போய் நிற்கின்றது. அதனால் ஏதேதோ எல்லாம் அரற்றுகின்றது ஆட்சிப்பீடம்.

"பழைய குருடி கதவைத் திறவடி!" என்ற கதையாக அது இனவாதத்தையும் திருப்பித் தூக்க முயல்வது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்கிய இராணுவ வெற்றிக்கு முழுஉரிமை கோருகின்றார் ஆட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் அதே வெற்றிக்கான உரிமை யில் பங்கு கோரும் முன்னாள் இராணுவத் தளபதி ஜென ரல் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டிக்கு வரப்போகின்றார் என்றதும், "புலிகளின் மச்சான்மார்களே பொன்சேகாவைக் களமிறக்குகின்றனர்" என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் என முழு சர்வதேசத்தின் உதவியையும் திரட்டிப் பெற்றுக்கொண்ட கொழும்பு அரசு, இப்போது அரசியல் போட்டிக் களத்தில், இராணுவ வெற்றிக்குக் காரணமான முன்னாள் இராணுவத் தளபதி குதித்ததும் தட்டைப் புரட்டிப் போடுகின்றது. பொன் சேகாவை பொதுவேட்பாளராகக் கொண்டு வருவது சர்வதேச சதி என்கிறது மஹிந்த அரசுத் தலைமை. இலங்கை யில் தேசிய மட்டத் தரப்புகள் சர்வதேசத்துடன் சேர்ந்து வகுக்கும் சதித்திட்டமே இது என்றும், இதில் ஜெனரல் பொன்சேகா சிக்கக்கூடாது என்றும் அரசுத் தலைமை கூறுவது வேடிக்கையானது.

எது, எப்படியென்றாலும், தென்னிலங்கை அரசிய லில் வெற்றிபெற ஒரேவழி இனவாதத்தைக் கிளப்பி, எதிர்த்தரப்பில் இருப்போரை சிறுபான்மையினரின் உரி மைகளுக்காகக் குரல் எழுப்புவோராகவும், தங்கள் சிங்களபௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அய ராது பாடுபடும் தேசப்பற்றாளர்களாகவும், தேசியவாதி களாகவும் தென்னிலங்கை மக்களுக்குக் காட்டுவதே என்றும் தென்னிலங்கைப் பேரினவாத அரசியல் தலைவர்களின் சரித்திரமாக இருந்து வருகின்றது. அந்த இனவாத அரசியல் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தேர்தல் விளை யாட்டில் இலகுவாக வெல்வதற்கான சாலச் சிறந்த உத்தி யாகவும் அவர்களுக்கு வாய்த்து வந்துள்ளது.

அதனால் இப்போதும், தமக்கு எதிரணியில் அரசியல் போட்டியாளராக வந்திருக்கும் ஜெனரல் பொன்சேகா வுக்கும் அதே விமரிசனத்தை முன்வைத்து அவரைச் சித்தரிக்க எத்தனிக்கின்றது மஹிந்த ஆட்சிப்பீடம்.

பௌத்தம் மற்றும் சிங்களம் மீதான தென்னிலங்கை மக்களின் வெறி போன்ற இனவாதப் பிடிப்பை வசமாகப் பயன்படுத்த எண்ணும் மஹிந்த தரப்பு, அதற்காக ஜென ரல் பொன்சேகாவுக்குப் பௌத்த சிங்கள விரோத மற்றும் தமிழ், முஸ்லிம் ஆதரவு சாயம்பூச எத்தனிப்பது மிகமிக வேடிக்கையாகும்.

எத்தனை தமிழர்கள் செத்தழிந்தாலும் தமிழர் தாயகம் மீதான அக்கொடூர இராணுவ நடவடிக்கைகளை நிறுத் தவே கூடாது என்ற ஈவிரக்கமற்ற குரூர நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றி நின்று, அதனால் தமிழினத்துக்கு எதிரான வரலாற்றுப் பேரவலத்தைத் திணித்த குற்றத் தைப் புரிந்த செயற்பாட்டில் இந்த ஆட்சித் தலைமைக்கு சற்றும் சளைத்தவரல்லர் ஜெனரல் பொன்சேகா. தமி ழரின் பேரழிவுப் பழிக்குப் பொறுப்பேற்பதில் ஆட்சித் தலைமைக்கும் அதன் படைத்தளபதிக்கும் வேறுபாடு இல்லை என்பதே உண்மையாகும்.

அப்படியிருக்க, அவரைப் "புலிகளின் மச்சான்மாரின் ஆதரவாளர்" என்பதும் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் சீற்றமுற்றுள்ள சர்வதேச தரப்புகள் அதற்குப் பழிதீர்க்க சர்வதேச சதியாக ஜெனரல் பொன்சேகாவை தேர்தலில் களமிறக்குகின்றன என்று கூறுவதும் வெறும் அபத்தமாகும்.

சிங்களப் பேரினவாதத்தில் திளைத்து ஊறிய ஜே.வி.பியின் பின்புல ஆதரவோடு தேர்தல் களத்துக்கு வரும் ஜெனரல் பொன்சேகாவை, தமிழர் தரப்பின் சார் பானவராகக் காட்டி, தென்னிலங்கை மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்த எடுக்கும் இந்தத் திட்டம், தெற்கின் பேரினவாத அரசியல் உத்தியின் பரவணிப் பண்பியல்புதான்!