Thursday, November 5, 2009

"பிள்ளையார் கல்யாணம் போல" தள்ளிப்போகும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு

"பிள்ளையார் கல்யாணம் போல" என்றொரு பேச்சுமொழி நம்மத்தியில் உண்டு. நாளை நடக்கும், நாளை நடக்கும் என்று காத்திருந்தும் நடக்காமல்போகும் விவகாரத்தை இப்படிப் பிள்ளையார் கல்யாணத்துடன் ஒப்பிடுகின்றமை வழமை.

எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி உதயமானதை அடுத்து விடுக்கப்பட்ட அறிவிப்பும் இத்தகைய பிள்ளை யார் கல்யாணக் கதை போலவே அமைந்திருக்கின்றது என்பதுதான் கவனிக்கத்தக்க விடயம்.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான "ஐக்கிய தேசிய முன்னணி" நேற்றுமுன்தினம் உதயமாகியிருக் கின்றது. அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் பன்னி ரண்டு கட்சிகளும் இது தொடர்பான ஆவணத்தில் கைச் சாத்திட்டுள்ளன.

"நிறைவேற்று அதிகாரம்" என்ற தனிநபர் அதிகா ரத்தை இல்லாதொழித்து, நாடாளுமன்ற அதிகார முறை மையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மா னம் இந்தப் புதிய கூட்டமைப்பின் முக்கிய கடப்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுறுத்தல் என்பது புதிய கூட்டமைப்பின் முக்கிய இலக்காக முன்மொழியப்பட்டிருக்கின்றது.

இப்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் கூறி வரும் உறுதிமொழிகளைப் பார்த்தால், இதுவும் "பிள் ளையார் கல்யாணம் போல" ஆகிவிடுமோ என்ற சந்தேகம் தான் பலருக்கும் வந்துவிடுகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப் போம் என்று இப்போது கங்கணம் கட்டும் இந்த எதிர்க் கட்சிக் கூட்டமைப்பின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்பு அமைச்சராக இடம்பெற்றிருந்த ஐ.தே.க. அரசுதான் 1978 இல் இந்த நிறைவேற்று அதிகார ஆட்சி முறைக்கு வழிசெய்த அரசமைப்பையே கொண்டுவந்தது என்பதும் மறக்கற்பாலதல்ல. இப்போது அந்த முறைமையை ஒழிப்பதற்காகப் போராடவேண்டிய நிலைமை அதே ரணிலுக்கு.

இப்படி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சூளுரைத்த பின்னர் அதையே கையிலெடுத்துத் தம் மால் அனுபவிக்கக் கூடிய காலம் முழுவதும் அந்த அதி காரத்தை மகிழ்ச்சியுடன் ஆண்டனுபவித்துச் சென்ற பல அரசியல் தலைகளை இலங்கை கண்டு சலித்துவிட்டது.

1994 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான சந்திரிகா குமாரதுங்க தாம் வெற்றிபெற்றால் அடுத்த ஒருவருட காலத்துக்குள் ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டு வார் என அப்போது ஜே.வி.பி. சார்பில் அத்தேர்தலில் போட்டியிட முன்வந்த வேட்பாளரிடம் எழுத்துமூலம் உறுதியளித்தார். அந்த உறுதிமொழியின் பேரில் ஜே.வி. பியின் ஆதரவையும் பெற்று அத்தேர்தலில் வெற்றியீட் டிய சந்திரிகா குமாரதுங்க பிறகு என்ன செய்தார்? ஒரு வருடமல்ல தாம் ஆட்சியில் நீடிக்கக்கூடிய பதினொரு வருடங்கள் அந்த அதிகாரத்தை ஆண்டு அனுபவித் துத்தான் வெளியேறினார்.

அதுபோல, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜே.வி.பி யுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார், பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஷ.

தாம் அத்தேர்தலில் வெற்றிபெற்றால் இதுதான் கடைசி ஜனாதிபதித் தேர்தல். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறைமை ஒழிக்கப்படும் இப்படியெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் வாக்குறுதி வழங்கினார் ராஜபக்ஷ.

அத்தேர்தலில் ஜே.வி.பியின் முழு அளவு ஆதரவு மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிட்டாமல் போயிருந்தால் ஜனாதிபதிப் பதவியை அவர் நினைத்தும் கூடப் பார்த் திருக்க முடியாது என்ற உண்மை சகலருக்கும் வெளிப் படையாகத் தெரிந்த ஒன்றே.

அப்படி ஜே.வி.பிக்கு வாக்குறுதி அளித்து, அதன் மூலம் ஜே.வி.பியின் ஆதரவைத் திரட்டி, அந்த ஆதரவு மூலமே ஆட்சி அதிகாரத்துக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ இப்போது என்ன செய்கின்றார்?

பழைய ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் குப்பைக் கூடைக்குள் தூக்கிக் கடாசிவிட்டு, அடுத்த தடவையும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தித் தமது அதிகாரத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு (இல்லையேல் எட்டு ஆண்டுகளுக்கு) உறுதிப்படுத்துவதில் இப்போது குறி யாக இருக்கின்றார்.

இவற்றையெல்லாம் நோக்கும்போது ஒன்று தெளி வாகத் தெரிகின்றது.

நாளைக்குத் தப்பித்தவறி எதிர்க்கட்சி வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களத்தில் குதிக்கக் கூடியவர் (அது ரணிலாகவும் இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம்) வென்று ஜனாதிபதியாகி விட்டாலும் கூட இதே கதைதான் தொடராது என்பது என்ன நிச்சயம்?

சந்திரிகா செய்ததைத்தான் மஹிந்த ராஜபக்ஷ இப்போது செய்வதைத்தான் நாளை எதிரணி சார்பில் வெல்லக்கூடியவரும் செய்யமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே.

நிறைவேற்று அதிகாரத்திற்கு வருபவரை, வந்த பின்னர் அசைப்பது என்பது இயலாத காரியம். அப்படிப் பட்ட நிலைமையை இலங்கைத் தேசத்தின் அரசமைப்பு உருவாக்கி வைத்திருக்கின்றது.

இந்நிலையில், "பிள்ளையார் கல்யாணம் போல" என்றோ ஒருநாள், நிறைவேற்று அதிகாரம் எனும் சர்வாதிகாரம் ஒழியும் என்று காத்திருப்பதை பார்த்திருப்பதை தவிர நாட்டு மக்களுக்கு வேறுமார்க்கம் ஏதும் இல்லை.

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment