அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ராஜபக்ச அரசு இணங்கியிருப்பதான செய்திகள் வெளிவந்தன. ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அடிப்படையாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தனியான ஒரு அலகாக மாற்றப்படுவது அவசியம் எனினும் 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய (ராஜீவ்-ஜெயவர்த்தனா) ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டு இந்த இரு மாகாணங்களும் 2006 ம் ஆண்டு ராஜபக்சவின் தூண்டுதலின் பேரில் ஜே.வி.பியின் முன்னெடுப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளைத் திருப்பதிப்படுத்தி விடமுடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். அத்துடன் அவற்றை நிறைவேற்று ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மூலமும் நாடாளுமன்றத்தில் தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் நிரந்தரமாக இணைக்குமாறு இந்தியா மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியிருந்தது.
இந்தியாவின் இத்தகைய அரசியல் நகர்வுகளின் பின்னணியில் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான கருத்து ஏற்க முடியாது எனவும் 'வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள்' என்று கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயக கோட்பாடு தனித்தே புலிகளின் கோட்பாடு என்ற வரையறைக்குள் சுருக்க நினைக்கின்றார் மகிந்த. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி மட்டுமே என எண்ணியிருந்த அவருக்கு தற்போது ஏற்பட்ட எதிர்முனைப் போட்டி வலுவால் ஏற்பட்ட மனக்குழப்பத்தின் வெளிப்பாடாகவே புலிகளின் கோட்பாடே வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என குறிப்பிட்டதாகவே உணரவேண்டியுள்ளது. மற்றும் சிங்கள் பேரினவாதக் கருத்துக்களை விதைப்பதனூடாகத் தனக்கான வாக்குவங்கி நிரப்பலுக்கான ஒரு வழியாகவும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவை பெற முயன்றுள்ளார்.
இலங்கைத்தீவில் தமிழர்களின் பூர்வீக தாயகப் பிரதேசமாக வடக்கு கிழக்கு இருந்ததென்பதும் ஆங்கிலேயரின் ஆட்சி இலகுபடுத்தலுக்காகவே பிரிக்கப்பட்டதென்பதும் வரலாறு. அதுமட்டுமல்லாமல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தின் எல்லைகளுடன் சிங்களப் பிரதேசங்களை புதிதாக இணைத்து கிழக்கில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை உயர்த்தியதும் வரலாறே. இவ்வாறு தமிழ் மக்களிற்கு எதிராக பல அரசியல் துஷ்பிரயோகங்களையும், தாயக கோட்பாட்டுச் சிதைவுகளையும் சிங்களம் மேற்கொண்டதன் எதிர்வினைதான் இலங்கையின் இனப்பிரச்சனை கூர்மையடைந்தது பின்னர் ஆயுதப் போராட்ட வடிவமாக மாற்றமடைந்தது என்பதை ராஜபக்ச மறந்து பேசியுள்ளார்.
குறிப்பாக 1985 ம் ஆண்டு நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தைக் கோட்பாடுகளில் தமிழர் தேசிய இனம், தமிழருக்கென்று தாயகம் உண்டு, தமிழர்கள் தங்களை தாங்களே ஆளும் சுயநிர்ணய உரிமையுடையவர்கள் போன்ற கோரிக்கைகள் ஆயுதம் தரித்த அமைப்புகளான விடுதலைப்புலிகள், ரெலோ, ஈரோஸ், ஈ.பி,ஆர்.எல்.எப், புளொட். போன்றவற்றுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அமைப்புக்களினாலும் பொது அரசியல் கோட்பாடாக முன்வைக்கப்பட்டன.
மேலும் 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியத்தரப்பால் வலியுறுத்தப்பட்டபோது, வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை கிழக்கு மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானித்தல் எனக் குறிப்பிடப்பட்ட சரத்து தொடர்பாக தமிழர் தரப்பினால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனை பிற்காலத்தில் இணைத்து தருவதாக இந்தியத்தரப்பால் உறுதி மொழி வழங்கப்பட்டதன் பின்னனியிலேயே ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் இருசாராரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தையும் மீறி, கிழக்கு மக்களிடம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தாமலே நீதிமன்ற செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கு தாயக நிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்த இந்திய - இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான நிலப்பரப்பில் வடக்கு கிழக்கு என்ற கருத்தியல் ரீதியான பிரிவினையை தோற்றுவிப்பதற்கு அடிகோலியது.
2002 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தாயகம், தேசியம,; சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தனர். எனவே தாயக கோட்பாடானது தமிழ்தேசியம் பற்றி பேசும் தமிழ் அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகவே இருக்கின்றது. இது போன்றவை எல்லாவற்றையும் விடுத்து ராஜபக்சவின் கருத்து புலிகளின் அரசியல் கோட்பாடாகவும் காலாவதியான விவகாரமாகவும் குறிப்பிட்டிருப்பது இலங்கை அரசியல் தீர்வை நோக்கிய நகர்தலை மீண்டும் கேள்விக் குறியாக்கியுள்ளது. ஏனெனில் அண்மையில் ஒன்று கூடிய தமிழ்தேசியக் கூட்டமைப்பு, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி என்பன திம்புக் கோட்பாட்டு அடிப்படையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்ற கருத்தெருமைப்பாடானது தாயகக் கோரிக்கை என்பது வெறுமனே புலிகளின் கோரிக்கை என்று கூறி புறந்தள்ளிவிட முடியாத ஒன்று என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது.
அதேவேளை எப்போதும் புலிகளின் இராணுவ மேலாதிக்க நிலை இருந்தபோது சிங்களத் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதும் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு பற்றி பேசுவதும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்த்துவைக்க வேண்டும் என்று சொல்வதும் அரசியல் பிரச்சனைகளின் அடிப்படைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு பேசலாம் என்பதும் வழமை. தற்போதைய புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப்பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல சிங்கள அரசியல்த்தலைமைகள் பிதற்றத்தொடங்கியுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளும் சரியாக சிங்கள அரசியல் சக்கதிகளின் மனநிலையை அறிந்து தங்களது சுயநல அரசியல் இருப்பை விடுத்து, இலங்கைச் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சரியான அரசியல் கொள்கைத் தீர்மானங்களிற்குள் ஒன்றுபட்டு நகர்வதே இலங்கைத்தீவின் சிறுபான்மை இனங்களின் பாதுக்காப்பிற்கு உறுதுணையாக இருக்கும். இன்று தமிழ் மக்களிற்கு நடப்பது நாளை முஸ்லீம் மக்களிற்கோ அன்றி மலையகத்தமிழ்; மக்களிற்கோ நடக்காது என்றோ உறுதிபடத் தெரிவித்துவிட முடியாது.
தற்போது புலிகளின் ஆயுத போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் புலிகளின் அழிவுடன் வடக்கு கிழக்கு இணைப்பும் செத்துவிட்டது என்ற ராஜபக்சவின் கூற்றின் மூலம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிற்கான அரசியல் தீர்வென்பது தமிழ் பேசும் மக்களின் ஆயுதப் போராட்ட வலிமையிலேயே தங்கியுள்ளது என்பதை சிங்களம் மீண்டும் ஒருமுறை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

2 கருத்துரைகள்:
சிங்கள இனவாதத்தை அரசியல்,பொருளாதார,உள் நாட்டுக் குழப்ப வழிகளில் அழித் தொழிக்க ஆக்கபூர்வமான சிந்தனைகளும்,செயல் பாடுகளும் இன்றைய முதல், முக்கியத் தேவை.
இலங்கைப் பொருள்களை ஒதுக்குங்கள்.
சுற்றுலா, தொழில் என்று ஒதுக்கிப் பொருளாதார வீழ்ச்சி யடையச் செய்வோம்.
வணக்கம் நண்பரே உங்களின் பதிவில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளும் மிக அருமையாக உள்ளன எனவே, நீங்களும் எமது தளத்தில் (tamilseithekal.blogspot.com)இணைந்து செயல்பட விருப்பம் இருந்தால் எம்மை மினன்சல்(எமது தளத்தில் உள்ளது ) மூலம் தொடர்புகொளவும்.
நன்றி
நிமலா
Post a Comment